தாய் நோயுற்றிருக்கும் போது தாய்ப்பால் ஊட்டலாமா?

குழந்தை நித்திரையில் இருந்து எழும்பி, கண்ணைத் திறந்து விழிப்பாக இருந்து, வாயை அகலத்திறந்து கொட்டாவி விடும் போதும், குழந்தை தனது கையை மடித்து வாயில் வைத்து உறிஞ்சும்போதும், குழந்தை பசியுடன் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இன்றைய நவீன காலத்திலும் இலங்கையில் பெரும்பாலான தாய்மார்கள், தங்களது குழந்தைக்கு தாய்ப்பாலை முதன்மையான உணவாகக் கொடுக்கின்றனர். இது உண்மையிலேயே நாம் பெருமைப்படக் கூடிய ஒரு விடயமாகும் என்று கூறுகின்றார். மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் (MBBS, DCH, MD Pediatrics.)

தாய்பாலூட்டுதல் தொடர்பான டொக்டர் விஷ்ணு சிவபாதத்துடனான உரையாடலை கேள்வி-பதில் வடிவில் தருகின்றோம்.

கேள்வி: தாய்ப்பாலின் சிறப்பு பற்றி விளக்க முடியுமா?

பதில்: பிறந்த சிசு தாய்ப்பாலைத் தாயிடமிருந்து பெறுவதற்கான அனைத்து உரிமைகளுக்கும் உரியதாகின்றது. இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். தாய்மார்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆறு மாத காலத்துக்கு தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்தல் வேண்டும். அதன் பிறகு, தாய்ப்பாலுடன் சேர்த்து திண்ம உணவுகளைக் கொடுக்க ஆரம்பித்தல் வேண்டும். வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், நான்கு மாத முடிவில் தாய்ப்பாலுடன் திண்ம உணவுகளை கொடுக்கத் தொடங்கலாம்.

குழந்தை, முதல் ஆறு மாதத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தாய்ப்பால் மூலம் பெற்றுக்கொள்கின்றது. குழந்தை பிறந்து 3 தொடக்கம் 5 நாள்களுக்குள் சுரக்கும் தாய்ப்பால் ‘கொலஸ்ட்ரம்’ என அழைக்கப்படும். அது, அளவில் சிறியதாகவும் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் குழந்தைக்குத் தேவையான அளவு பாலை கொண்டிருக்கும். குறிப்பாக, பிறந்த சிசுவின் நிர்ப்பீடனத் தொகுதியை மேம்படுத்துவதற்கு இது உதவுகின்றது. பல பெற்றோர்கள் தனது மகளுக்குத் தாய்ப்பால் சுரப்பது குறைவு; பிள்ளை எப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறது; என்ன பால்மா கொடுக்கலாம் என என்னிடம் கேட்பார்கள். இந்தக் கேள்விகள் அவர்களின் மனதில் தோன்றுவது ஒன்றும் புதிரான விடயமல்ல.

கேள்வி: தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

பதில்: தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக, குழந்தைக்கு உகந்த ஊட்டச்சத்தும் வளர்ச்சிக்குமான அனைத்து அம்சங்களும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலூட்டல் மூலம் கிடைக்கின்றது. அதாவது, தாயிடம் இருக்கும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி, தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு நேரடியாகக் கிடைக்கின்றது. இதனால் வாந்திபேதி, சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றது.

தாய்ப்பாலூட்டல் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை, புற்று நோய்கள், நீரழிவு, அதிக உடற்பருமன் போன்ற நோய்களையும் தடுக்கின்றது. தாய்ப்பாலை குழந்தை இலகுவாக அகத்துறிஞ்சுவதால், இதுவே முதல் ஆறு மாத காலத்திற்கு குழந்தைக்குரிய சிறப்பான போசாக்கு உணவாகும். தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மார், மார்பகப் புற்றுநோய், குழந்தை நல வைத்திய நிபுணர் சூலகப் புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பிறப்பின் பின் ஏற்படும் மன உளைச்சல் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர். இவற்றைவிட முக்கியமாக, தாய்க்கும் சேய்க்கும் இடையில் ஓர் உணர்வு மிக்க பிணைப்பையும் ஏற்படுத்துகிறது.

கேள்வி: தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள் பற்றி தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: தாய்ப்பால் ஊட்டுவது ஓர் இயற்கையான விடயம் என்றாலும், அதைச் சரியான முறையில் கொடுக்காதபோது, சிலவேளைகளில் அந்த முயற்சி தோல்வி அடையலாம். உண்மையில் தாய்மாருக்கு, தாய்ப்பாலின் சிறப்புப் பற்றியும் அதன் தேவையையும் கர்ப்ப காலத்தில் இருந்தே போதித்தல் வேண்டும். இதில் சிக்கல்கள் உள்ள தாய்மார்கள் வைத்தியசாலையில் உள்ள தாய்ப்பாலூட்டல் முகாமைத்துவ நிலையங்களிலோ அல்லது உங்களது பிரதேசங்களிலுள்ள மருத்துவமாதுவிடமோ கேட்டு அறிந்து கொள்ளலாம். ஏற்கெனவே, தாய்ப்பால் கொடுத்து அனுபவம் உள்ள தாய்மாருடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதால் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி: எந்த நேரங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பதில்: தாய்ப்பால் நிறையுணவு என்பதால், குழந்தைக்குப் பசி எடுக்கும்போது கொடுக்க வேண்டும். குழந்தை பசியுடன் உள்ளது என்பதை பின்வரும் காரணிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். அதாவது, குழந்தை நித்திரையில் இருந்து எழும்பி கண்களைத் திறந்து விழிப்பாக இருந்து, வாயை அகலத்திறந்து கொட்டாவி விடும் போது; குழந்தை தனது கையை மடித்து வாயில் வைத்து உறிஞ்சும்போது, மேற்கூறிய அறிகுறிகளை அவதானிக்க தாய் தவறும்பட்சத்தில் குழந்தை பசியால் அழுகின்ற போது அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, தாய்மார்கள் கவனிக்க வேண்டியது, குழந்தை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் தூங்குமாயின் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் ஊட்டவேண்டும். முக்கியமாக இரவு வேளைகளில் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் ஊட்டவேண்டும்.

கேள்வி: குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்துள்ளது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?

பதில்: குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்த பின்னர் அது, மார்பகத்திலிருந்து தானாகவே வாயை எடுக்கும். குறிப்பாக, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் நேரம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். நன்றாகத் தாய்ப்பால் குடித்த குழந்தை மகிழ்ச்சியாக தாயுடன் விளையாடும். அல்லது தூங்கிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மாருக்கு மார்பகத்தின் பாரம் குறைவது போன்ற உணர்வு ஏற்படும். மேலும், மற்றைய மார்பகத்திலிருந்து சிறிதளவு பால் வெளியேறும். இவையெல்லாம் தாய்ப்பாலூட்டல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதற்குரிய அறிகுறிகள் ஆகும்.

கேள்வி: தாய்ப்பால் ஊட்டும் போது குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா?

பதில்: குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளையும் கனியுப்புகளையும் தாய்ப்பால் கொண்டிருப்பதால் முதல் ஆறு மாத காலத்துக்கு தாய்ப்பாலுடன் வேறு எதையும் (தண்ணீர் உட்பட) கொடுக்கத் தேவையில்லை.

பால்மா கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையான உணர்வுபூர்வமான இணைப்பில் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தை அடிக்கடி வாந்திபேதி, சுவாச நோய்கள், காது நோய்கள் போன்ற தொற்று நோய்களுக்கு உட்படும். குறைந்தளவான மற்றும் அதிகளவு ஐதாக்கப்பட்ட பால்மா மூலம் குழந்தைக்கு மந்த போசனை ஏற்படலாம். அல்லது, அதிகளவு பால் கொடுப்பதால் உடற்பருமன் அதிகரித்து, அதன் மூலம் பிற்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம். அதாவது, ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகளவு ஏற்படும். குழந்தையின் புத்திக் கூர்மையில் பாதிப்புகள் ஏற்படலாம். முக்கியமாக, பெற்றோர்களுக்கு மேலதிக செலவீனங்களை ஏற்படுத்தும்.

பாலூட்டும் தாய்மார் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது தாய்ப்பால் ஊட்டக் கூடாது; மார்பகங்கள் வீக்கம் அடைந்து இருக்கும்போது தாய்ப்பால் ஊட்டக் கூடாது; அதிக வெப்பமான காலங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து தண்ணீரும் கொடுக்க வேண்டும்; தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் உடல் கட்டமைப்பு பாதிப்படையும்; சிறிய மார்பகங்கள் உடைய தாய்மார் மற்றும் முலைக்காம்பு தட்டையாக உள்ள தாய்மார் பாலூட்டுவது கடினம் போன்ற மூடநம்பிக்கைகள் பலரிடம் உள்ளன. இதிலிருந்து நாம் விழிப்படைய வேண்டும். தாய்மார் நோயுற்றிருக்கும் போதும் தாய்ப்பாலூட்டலாம். மார்பகங்கள் வீக்கம் அடைந்தால் கண்டிப்பாக பாலூட்ட வேண்டும். அவ்வாறு இல்லையாயின் மார்பகத்தில் சிதழ் கட்டிகள் ஏற்படலாம்.

அதிக வெப்பமான காலங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து நீர் கொடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஏனென்றால், தாய்ப்பாலில் போதியளவு நீருள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மேலதிக உடற்பருமனை குறைக்க உதவும். குழந்தை எந்த வகையான மார்பகத்திலும் தாய்ப்பால் குடிக்கக்கூடிய இசைவாக்கத்தை தாமாவே ஏற்படுத்திக்கொள்ளும். எனவே, இவ்வாறான மகிமைகளை கொண்ட தாய்ப்பாலைத் தங்களது குழந்தைக்கு கொடுப்பதை உறுதி செய்வதன் மூலம் வளமானதும், புத்தி கூர்மையும் உடைய சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லை.

பைஷல் இஸ்மாயில் – தமிழ்மிரர் 4/12/2021

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page

Free Visitor Counters