சந்தர்ப்பவாதிகள் , நண்பர்களாகும் காலமிது

ஆளும் கட்சிக்குள்‌ இருக்கும்‌ பலரது விரக்திகளும்‌ வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன. அவற்றைக்‌ கட்டுப்படுத்‌ துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளையும்‌ அரசாங்கம்‌ ஆரம்பித்துள்ளது. அதுவே, கல்வி சீர்த்திருத்தம்‌, திறந்த பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தொலைத்தூர கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில்‌ பிரேமஜயந்தவை, செவ்வாய்க்கிழமை (04) அப்பதவியிலிருந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியதிலிருந்து தெரிகிறது.

திங்கட்கிழமை (03), நுகேகொட ௮ருகே தெல்கந்த பகுதியில்‌, பொதுச்சந்தை ஒன்றில்‌ பொருட்களை வாங்கிவிட்டு, இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில்‌ பிரேமஜயந்த அஊடகங்களுக்குக்‌ கருத்துத்‌ தெரிவிக்கையில்‌, அரசாங்கத்தைக்‌ கடுமையாக விமர்சித்தார்‌.

விலைவாசி உயர்வைப்‌ பற்றி ஊடகவியலாளர்கள்‌ அவரிடம்‌ கருத்துக்‌ கேட்ட போது, அவர்‌ “இது பொருத்தமற்றவர்கள்‌ பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதன்‌ விளைவு” என்றார்‌. “தற்போதைய நிலையில்‌, மற்றொரு குழு பதவிக்கு வந்தே, பிரச்சினைகளுக்குத்‌ தீர்வு காணலாம்‌. நான்‌ ஒதுக்கித்‌ தள்ளப்பட்டவர்களில்‌ ஒருவர்‌ என்பதால்‌, எம்மால்‌ எதற்கும்‌ பொறுப்பை ஏற்க முடியாது” என்றும்‌ அவர்‌ கூறினார்‌.

பொருத்தமற்றவர்கள்‌ பதவிகளை அலங்கரிப்பதே தற்போதைய நிலைக்குக்‌ காரணம்‌ என்று அவர்‌ கூறும்‌ போது, அது ஜனாதிபதியையும்‌ குறிப்பதாக அர்த்தப்படுகிறது. அத்தோடு மற்றொரு குழுவால்‌ மட்டுமே பிரச்சினைகளைத்‌ தீர்க்க முடியும்‌ என்று கூறிய போதும்‌, தற்போதைய அரசாங்கத்தால்‌ இந்தப்‌ பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதையே கூறியிருக்கிறார்‌. இதையடுத்தே, மறுநாள்‌ அவர்‌ பதவியில்‌ இருந்து நீக்கப்பட்டார்‌.

பிரேமஜயந்த, ஒரு காலத்தில்‌ ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மிகவும்‌ விசுவாசமாக இருந்தவர்‌, பின்னர்‌, மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும்‌ ஐக்கிய மக்கள்‌ சுதந்திர முன்னணியிலும்‌ தலைவராக நியமிக்கடும்‌ நிலை உருவாகவே மஹிந்தவின்‌ ஆதரவாளராக மாறினார்‌. 2014ஆம்‌ ஆண்டு மைத்திரிபால சிறிசேன, ஐ.ம.கூழுவிலிருந்தும்‌ ஸ்ரீல.கூ.கவிலிருந்தும்‌ விலகி, ஜனாதிபதித்‌ தேர்தலில்‌ போட்டியிட முன்வந்த போது, “மைத்திரிபால, புலிகளின்‌ ஏஜண்ட்‌” எனக்‌ கூறிவிட்டு, மைத்திரிபால ஜனாதிபதியாகத்‌ தெரிவு செய்யப்பட்ட போது, அவரது அமைச்சரவையிலும்‌ இடம்பிடித்துக்‌ கொண்டார்‌.

ஆனால்‌, ஜனாதிபதி கோட்டாபயவின்‌ அரசாங்கத்தில்‌ அவருக்கு அவ்வளவு மதிப்பு வழங்கப்படவில்லை. 2000 ஆவது ஆண்டிலிருந்து, சுமார்‌ 14 ஆண்டுகளாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த அவருக்கு, இராஜாங்க அமைச்சர்‌ பதவி ஒன்றே வழங்கப்பட்டது.

Read:  பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

2020 ஆம்‌ அண்டு, அரசியலமைப்பின்‌ 20 ஆவது திருத்தத்துக்கும்‌ ஆதவளித்த இவர்‌, இப்போது அரசாங்கத்தின்‌ கொள்கைகளை விமர்சிக்கத்‌ தொடங்கி இருக்கிறார்‌.இவரைப்‌ போன்று, மேலும்‌ பல ஆளும்‌ கட்சியினர்‌ அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள்‌.

விஜேதாஸ ராஜபக்ஷ, தேசிய உரிமைகள்‌ மற்றும்‌ கிராமிய கலைகள்‌ இராஜாங்க அமைச்சர்‌ விதுர விக்கிரமநாயக்க அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன்‌ செனவிரத்தன, சந்திம வீரக்கொடி போன்றோரும்‌ இப்போது அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள்‌.

பிரேமஜயந்தவை பதவிநீக்கம்‌ செய்த அன்றே, மாத்தளையில்‌ நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்‌ கூட்டமொன்றில்‌ உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, “சுசிலை பதவிநீக்கம்‌ செய்து, அரசாங்கத்தில்‌ ஏற்படவிருக்கும்‌ பாரிய வெடிப்பை தடுத்து நிறுத்த முடியாது” என்றார்‌.

சுசில்‌ தெரிவித்த கருத்தைப்‌ பார்க்கிலும்‌ மோசமான கருத்தை, இராஜாங்க அமைச்சர்‌ நிமல்‌ லான்ஸா அண்மையில்‌ தெரிவித்ததாக கூறிய முன்னாள்‌ ஐனாதிபதி, லான்ஸா பல இரகசியங்களை தெரிந்தவர்‌ என்பதால்‌ அவருக்கு எதிராக அரசாங்கம்‌ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்‌ கூறினார்‌.

அதேவேளை, பசில்‌ ராஜபக்ஷவின்‌ எதிரிகளான அமைச்சர்‌ விமல்‌ வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர்‌, கெரவலபிட்டியில்‌ அமைந்துள்ள ‘யுகதனவி” மின்‌ உற்பத்தி நிலையத்தின்‌ திறைசேரிக்குச்‌ சொந்தமான 40 சதவீத பங்குகளை, அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்‌.

கடந்த ஒக்டோபர்‌ மாதம்‌, இந்த விடயம்‌ தொடர்பாக அவர்கள்‌ பொதுக்‌ கூட்டம்‌ ஒன்றை நடத்தினர்‌. அப்போது பசில்‌ ராஜபக்ஷவை குறிவைத்து, “ஜனாதிபதிக்கு கிடைத்த மக்கள்‌ ஆணையை துஷ்பிரயோகம்‌ செய்யும்‌ தலைவர்களை, உதைத்து விரட்ட வேண்டும்‌” என விமல்‌ கூறினார்‌.

“இந்த மின்‌ நிலையம்‌ தொடர்பான ஒப்பந்தமானது, ஜே. ஆர்‌. ஐயவர்தன, ரணசிங்க பிரேமதாளு, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின்‌ அரசாங்கங்கள்‌ செய்த உளழல்களைப்‌ பார்க்கிலும்‌ பாரியதோர்‌ உழல்‌” என கம்மன்பில கூறினார்‌.

Read:  வாரிசு அரசியலும், குடும்ப ஆட்சியும், ஜனநாயகமும்.

இது போன்று, தமது அரசாங்கத்துக்குள்ளேயே தமக்கு எதிரான கருத்துகள்‌ வலுப்பெற்று வரும்‌ நிலையிலேயே ஜனாதிபதி சுசிலை பதவிநீக்கம்‌ செய்துள்ளார்‌. இது பகிரங்கமாக, அரசாங்கத்தை விமர்சிக்கும்‌ ஆளும்‌ கட்சி உறுப்பினர்களுக்கு விடுத்த ஒரு கடுமையான எச்சரிக்கை என்றே தெரிகிறது.

எனினும்‌, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது. வெளிநாட்டு செலாவணி தட்டுப்பாட்டால்‌ விலைவாசி மேலும்‌ உயரும்‌ என்றும்‌ தேசிய உற்பத்திக்கான மூலப்‌ பொருட்கள்‌, எரிபொருள்‌ தட்டுப்பாட்டால்‌ கைத்தொழில்கள்‌ சரிந்து விழும்‌ என்றும்‌ பல்லாயிரக்‌ கணக்கானோர்‌ தொழில்களை இழக்க நேரிடும்‌ என்றும்‌ மின்சார உற்பத்தியும்‌ அதன்‌ மூலம்‌ நீர்‌ விநியோகமும்‌ பாதிக்கப்படலாம்‌ என்றும்‌ உணவுப்‌ பஞ்சம்‌ ஏற்படும்‌ என்றும்‌ அச்சம்‌ தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அவற்றின்‌ காரணமாக, அரசாங்கம்‌ தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்‌, ‘ஒதுக்கித்‌ தள்ளப்பட்டுள்ளோம்‌; எமக்கு நல்ல பதவிகள்‌ கிடைக்கவில்லை” என்று நினைக்கும்‌ ஆளும்‌ கட்சி உறுப்பினர்கள்‌, இனி என்ன இழக்க இருக்கிறது என்று எண்ணி தொடர்ந்தும்‌ அரசாங்கத்தை எதிர்க்க முற்படலாம்‌. பலர்‌ எதிர்க்கட்சிகளோடு கூட்டு சேர முற்படலாம்‌. அதன்‌ மூலம்‌ அரசாங்கத்தின்‌ மீதான மக்களின்‌ வெறுப்பிலிருந்து தம்மைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள முற்படலாம்‌. எனவே ஜனாதிபதியின்‌ கடும்‌ போக்கு பயனளிக்காமலும்‌ போகலாம்‌.

இந்த உட்கட்சிப்‌ பூசல்கள்‌, ஒருபுறம்‌ அரசாங்கம்‌ மிக மோசமான முறையில்‌ பெரும்பான்மை மக்களின்‌ வெறுப்பையும்‌ சம்பதித்துவிட்டது என்பதைக்‌ குறிக்கிறது. மறுபுறம்‌, ஆளும்‌ கட்சியின்‌ இந்த கிளர்ச்சிக்காரர்களின்‌ படுமோசமான சந்தர்ப்பவாதத்தை எடுத்துக்‌ காட்டுகிறது.

தற்போதைய பொருளாதார நிலைமை, நிர்வாகச்‌ சீர்கேட்டின்‌ காரணமாக மக்கள்‌ அரசாங்கத்தை திட்டவும்‌, அரசத்‌ தலைவர்களுக்கு எதிராக கூச்சல்‌ எழுப்பவும்‌ முன்வந்துள்ள நிலையிலேயே, தமக்குப்‌ பட்டம்‌ பதவிகள்‌ கிடைக்காத காரணத்தால்‌, இவர்கள்‌ அரசாங்கத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்க முன்வந்துள்ளனர்‌. இது வரை அரசாங்கம்‌ எடுத்த மோசமான எந்தவொரு நடவடிக்கையையும்‌ இவர்கள்‌ எதிர்க்கவில்லை. மாறாக அவற்றை அவர்களும்‌ ஆதரித்துள்ளனர்‌.

Read:  காதி நீதிமன்றங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன? காதிகளும் ஒரு காரணமா?

தேர்தல்‌ காலத்தில்‌ தற்போதைய அரச தலைவர்கள்‌ இனவாதத்தை துண்டும்‌ போதும்‌, அரசியலமைப்பின்‌ 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றும்‌ போதும்‌, மிருசுவில்‌ படுகொலைகளை செய்த இராணுவ அதிகாரியை விடுதலை செய்த போதும்‌ ரிஷாட்டைக்‌ கூண்டில்‌ அடைத்த போதும்‌ பகிரங்கமான பாரிய ஊழல்களின்‌ போதும்‌ இவர்கள்‌ வாய்‌ திறக்கவில்லை.

அரசாங்கத்தை வெறுத்து இருக்கும்‌ மக்கள்‌ இவர்களும்‌ அரசாங்கத்தை விமர்சிக்கும்‌ போது இவர்களை பாராட்டுவார்கள்‌, அத்தோடு அவர்கள்‌ அரசாங்கத்தில்‌ இருந்த காலத்தில்‌ அரசாங்கத்தின்‌ ஊழல்‌, மோசடி, இனவாதம்‌ ஆகியவற்றை ஆதரித்து செயற்பட்டதை மறந்துவிடுவார்கள்‌. சில நாள்களில்‌ இவர்களில்‌ சிலர்‌ ஏதாவது எதிர்க்கட்சியொன்றுடன்‌ சேர்ந்து மீண்டும்‌ நாடாளுமன்றத்துக்கு வரலாம்‌.

மிகச்‌ சிலரைத்‌ தவிர பொதுவாக அரசியல்வாதிகள்‌ அனைவருமே, குறிப்பாக முன்னாள்‌ இன்னாள்‌ இரண்டு பிரதான கட்சிகளைச்‌ சேர்ந்தவர்களில்‌ பெரும்பாலானவர்களின்‌ அரசியலானது மிகக்‌ கீழ்த்தரமானது என்பதை சகலரும்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌.

பட்டம்‌, பதவி, சலுகை, பணம்‌ சம்பாதிப்பதற்கான வழிகளுக்காக எதையும்‌ செய்யத்‌ தயாராக இருக்கிறார்கள்‌. எவர்‌ முன்னிலையிலும்‌ மண்டியிடத்‌ தயாராக இருக்கிறார்கள்‌. எந்தக்‌ கட்சிக்கும்‌ தாவத்‌ தயாராக இருக்கிறார்கள்‌. ஒரு புறம்‌ கூறியதை, எவ்வித வெட்கமுமின்றி மறுபுறம்‌ திரும்பி மறுக்கத்‌ தயாராக இருக்கிறார்கள்‌.

மிகவும்‌ கீழ்த்தரமாக ஒருவரைத்‌ துசித்துவிட்டு மறுகணம்‌, அவரைப்‌ போற்றிப்‌ புகழ்ந்து வணங்குவதும்‌ இவர்களுக்கு பெரிய விடயம்‌ அல்ல. அதேபோல்‌, இன்று ஒருவரை தெய்வமாக வணங்கிவிட்டு, நாளை அவரை நாயாய்‌ மதித்து திட்டுவதும்‌ அவர்களுக்கு சிறிய விடயமே. இவை அனைத்தும்‌ பட்டம்‌, பதவி, பணத்துக்காகவே செய்கிறார்கள்‌. செய்துவிட்டு சமயத்தலங்களுக்குச்‌ சென்று பக்தி ததும்ப சமயக்‌ கிரியைகளிலும்‌ ஈடுபடுவார்கள்‌. விந்தை என்னவென்றால்‌ அத்தனைக்கும்‌ பிறகும்‌ மக்கள்‌ அவர்கள்‌ பின்னால்‌ செல்வதேயாகும்‌.

MSM ஐயூப் -தமிழ்மிரர் 12/1/2022