தமிழ யுவதி உட்பட 3 பேரை பலியெடுத்த சாரதி போதைப்பொருள்‌ பாவனையாளர்‌!

கடந்த வாரம்‌ புதன்கிழமை மட்டக்குளியில்‌ தமிழ்‌ யுவதி ஒருவர்‌ உட்பட 3 பேரின்‌ உயிரை பலியெடுத்த லொறியின்‌ சாரதி, போதைப்பொருள்‌ பாவனையாளர்‌ என்பது அவரது இரத்தப்‌ பரிசோதனையில்‌ உறுதியாகியுள்ளது.

28 வயதான கயான்‌ சங்கல்ப கருணாரத்ன என்ற அந்த இளைஞன்‌ தொடர்ந்து போதைப்பொருள்‌ பாவித்து வந்திருக்கும்‌ அதேசமயம்‌, அவரிடம்‌ சாரதி அனுமதிப்பத்திரமும்‌ இருக்கவில்லையென தெரியவந்துள்ளது. ஜா-எல வெலிகம்பிட்டிய வாசியான மேற்படி சாரதி மோதரையிலிருந்து வத்தளைக்கு முட்டைகளை ஏற்றி கூடுதல்‌ வேகத்தில்‌ லொறியை செலுத்திச்‌ சென்றபோது, மழையின்‌ காரணமாக வீதியின்‌ ஈரப்பதத்தினால்‌ லொறி கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இரண்டு ஓட்டோக்களில்‌ மோதியது.

லொறியை செலுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியபோதும்‌, பின்னர்‌ அவர்‌ பொலிஸாரால்‌ கைதுசெய்யப்பட்டார்‌. லொறி வீதியை விட்டு விலகி எதிர்வீதிப்பக்கம்‌ சென்றபோது, எதிர்கொண்ட முதல்‌ ஓட்டோவில்‌ மோதியதில்‌ அதில்‌ பயணித்த இலங்கை மத்திய வங்கியின்‌ சிரேஷ்ட உதவிப்பணிப்பாளர்‌ அமிதா சுந்தரராஜ்‌ (33 வயது), ஓட்டோ சாரதி டிரோன்‌ ரஞ்சித்‌ (46 வயது) ஆகியோர்‌ படுகாயமடைந்த நிலையில்‌, வைத்தியசாலைக்கு எடுத்துச்‌ செல்லும்‌ வழியில்‌ உயிரிழந்தனர்‌.

இரண்டாவதாக மோதிய ஓட்டோவின்‌ சாரதி அஜித்‌ சில்வா (5௦ வயது) வைத்தியசாலையில்‌ அனுமதிக்கப்பட்ட பின்னர்‌ உயிரிழந்தார்‌. அந்த ஓட்டோவில்‌ சென்ற பயணி தேசிய வைத்தியசாலையின்‌ தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ சிகிச்சை பெற்று வருகிறார்‌.

தீவிர உட்காயங்கள்‌ காரணமாகவே இந்த உயிரிழப்புகள்‌ நடந்திருக்கின்றன. “மழை காலங்களில்‌ அதிக வேகத்தில்‌ வாகனங்களை செசலுத்துதல்‌ கூடாது. ப்ரேக்குகள்‌ இயங்காமல்‌ போகலாம்‌. எச்சரிக்கையாக நடப்பது அனைவரினதும்‌ பொறுப்பாகும்‌”என்று தெரிவித்திருக்கிறார்‌ மட்டக்குளி பொலிஸ்‌ நிலைய இன்ஸ்பெக்டர்‌ கே.டபிள்யூ.எஸ்‌.மீகொட. மேற்படி லொறியின்‌ சாரதி புதுக்கடை நீதவான்‌ நீதிமன்றத்தில்‌ ஆஜர்‌ செய்யப்பட்டதையடுத்து செப்டெம்பர்‌ 16 ஆம்‌ திகதிவரை விளக்கமறியலில்‌ வைக்கப்பட்டுள்ளார்‌.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.

இவரின்‌ தந்தையும்‌ லொறியின்‌ உரிமையாளருமான க்ளெமென்ட்‌ வசந்த சூமார நீதிமன்றில்‌ ஆஜர்செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தால்‌ பிணையில்‌ விடுதலை செய்யப்பட்டார்‌. தனது மகளின்‌ உயிரிழப்பு குறித்து தந்தையாரான சுப்பையாப்பிள்ளை சுந்தரராஜ்‌ கூறியதாவது, எனது மகளின்‌ மறைவை ஏற்றுக்கொள்ள மனம்‌ மறுக்கிறது. மெதடிஸ்ட்‌ கல்லூரியின்‌ திறமையான மாணவி அவர்‌. கோயம்புத்தூரில்‌ பட்டப்படிப்பை முடித்த அவர்‌ முதுமானி கற்கைநெறியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும்‌, நியூயோர்க்‌கொலம்பியா பல்கலைக்கழகத்திலும்‌ தொடர்ந்தார்‌. பின்னர்‌ இலங்கை மத்திய வங்கியின்‌ சிரேஷ்ட உதவிப்‌ பணிப்பாளராக பதவியை பெற்றார்‌.

அவர்‌ வழமையாக காரில்‌ வேலைக்கு செல்வது வழக்கம்‌. ஆனால்‌ அன்றைய தினம்‌ காலநிலை மோசமாக இருந்த காரணத்தினால்‌ அவர்‌ ஓட்டோவில்‌ செல்ல தீர்மானித்தார்‌. வாகனத்தில்‌ அவரை இறக்கவா என்று நான்‌ கேட்டேன்‌. முதல்‌ நாள்‌ நாங்கள்‌ கோவில்‌ பூஜைகளுக்காக சென்று அதிகாலையே வீடு திரும்பியிருந்த காரணத்தினால்‌ என்னை சிரமப்படவேண்டாமெனக்‌ கூறி அவர்‌ வாடகை வாகனத்தில்‌ செல்ல தீர்மானித்தார்‌. வீட்டிலிருந்து 2௦௦ மீற்றர்‌ தூரத்தில்‌ இந்த விபத்து நடந்தது.

“சற்றுநேரம்‌ தாமதமாகி அல்லது சற்று முன்கூட்டி சென்றிருந்தால்‌ எனது மகள்‌ இந்த விபத்தில்‌ சிக்கியிருக்கமாட்டார்‌. இந்த விபத்துக்கு எனது மகளோ அல்லது ஓட்டோ சாரதியோ காரணமல்ல. அந்த சி.சி.டி.வி. காணொளியை பார்த்தால்‌ தெரியும்‌. இந்தத்‌ துயரம்‌ எவருக்கும்‌ நடந்துவிடக்கூடாது. அதிவேகத்தில்‌ வாகனங்களை செலுத்தி இப்படியான ஆபத்துகளை எவரும்‌ விளைவிக்கக்‌ கூடாது” என்றார்‌ தந்தை.

வீதி விபத்துகளால்‌ இவ்வருடம்‌ ஜனவரியிலிருந்து இதுவரை 1,418 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. கடந்த வருடம்‌ இதே காலப்பகுதியில்‌ 1,928 பேர்‌ உயிரிழந்திருந்தனர்‌. போதை காரணமாகவே அதிகளவு விபத்துகள்‌ நடந்துள்ளதாக பொலிஸார்‌ தெரிவிக்கின்றனர்‌.

Read:  மீண்டும் ரணில் !!
SOURCEதமிழன் பேப்பர்