ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் நேரமாற்றம்: உரிய நேரத்தை வழங்குவதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர்

கண்டியிலுள்ள முஸ்லிம்கள் கந்துரட்ட சேவையில் ஒலிபரப்படும் முஸ்லிம் சேவையை முஸ்லிம் நேயர்கள் அதிகளவு கேட்டு வருகின்றார்கள். எனினும், இந்தச் சேவையில் ஏற்பட்டுள்ள நேரமாற்றம் சம்பந்தமாக முஸ்லிம் நேயர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் கண்டியிலுள்ள முஸ்லிம் வர்த்தகச்சங்கம், உலமாக்கள், தமிழ்ச் சமூக வர்த்தகச் சங்கம் இந்து சமய மதகுருமார்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அதற்குரிய குறித்த நேரத்தைப் பெற்றுத்தருவதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிமொழி வழங்கியுள்ளாரென அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கந்துரட்ட முஸ்லிம் சேவையின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ரமழான் சஹர் விசேட ஒலிபரப்பில் நேயர் வினாவில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் கந்துரட்ட முஸ்லிம் சேவையின் கட்டுப்பாட்டாளர் ஐதுரூஸ் முஹம்மது பௌசர் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், நவீன உலகத்தில் ஊடகம் என்பது ஒரு சமூகத்தைப் பொறுத்தவரையிலும் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றது. இதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஊடகம் என்று சொல்லும்போது தொலைக்காட்சி, வானொலி, இலத்திரனியல். சமூக வலைத்தளம் அச்சு ஊடகம் எனப் பலதரப்பட்ட ஊடகங்கள் இருந்தாலும் வானொலிச் சேவையைக் கேட்கும் மக்கள் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். அதற்குரிய வரவேற்பு இன்னும் பட்டிதொட்டிகள் எங்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. முஸ்லிம்களுடைய வீடுகளில் வானொலிப்பெட்டி எல்லா வீடுகளிலும் இருப்பதை நாங்கள் காண்கின்றோம். வானொலியில் முஸ்லிம் சேவையை எல்லா வீடுகளிலும் கேட்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

Read:  Akurana Power Cut Time

அந்தவகையில் கண்டியிலுள்ள முஸ்லிம்கள் கந்துரட்ட சேவையில் ஒலிபரபபப்்படும் முஸ்லிம் சேவையை முஸ்லிம் நேயர்கள்் அதிகளவு கேட்டுவருகின்றார்கள். எனினும், இந்தச் சேவையில் ஏற்பட்டுள்ள நேரமாற்றம் சம்பந்தமாக முஸ்லிம் நேயர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக எம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த நேரமாற்றம் தொடர்பில் ஓர் ஒப்புதலை அவர் தந்துள்ளார். கண்டியிலுள்ள முஸ்லிம் வர்த்தகச் சங்கம், உலமாக்கள், தமிழ் சமூக வர்த்தகச் சங்கம் இந்து சமய மதகுருமார்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அதற்குரிய நேரத்தைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

கந்துரட்ட சேவையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த குறித்த நேரத்தில் ஒலிபரப்படும் முஸ்லிம் நிகழ்ச்சிகளையே முஸ்லிம் நேயர்கள் அதிகளவு விரும்பிக் கேட்கின்றனர். எனவே, அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மிக விரைவில் எமது முஸ்லிம் வர்த்தகச் சமூகம், தமிழ் வர்த்தகச் சமூகம், முஸ்லிம் இந்து சமய சமயப் பெரியார்கள் ஒன்றிணைந்து அமைச்சருடன் சந்திப்பை ஏற்படுத்தி துரித கதியில் குறித்த நேரத்தைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

சமூக வலைத்தளங்களால் பரப்பப்படும் ஊர்ஜிதமற்ற செய்திகளைப் பரப்புவதில் ஒரு முன்னோடி சமூகமாக நாங்கள் இருந்துவருகின்றோம். கையடக்கத் தொலைபேசியில் வரும் அனைத்து செய்திகளையும் அதன் உண்மைத்தன்மை எவை எனப் பார்க்காமல் அதைப் பகிரங்கமாக பகிரக் கூடிய சமூகமாக நாங்கள் இருந்துகொண்டு இருக்கின்றோம். உண்மையிலேயே எமது முஸ்லிம் சமூகம் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பல வருடங்கள் பழைமைவாய்ந்த செய்திகளைக்கூட புதிய செய்தியாக அதைப் பரப்பிவருகின்றனர். நாங்கள் மற்றைய சமூகங்களுக்கு வழிகாட்டியாக வாழவேண்டும் என்றவகையில் ஏனைய சமூகங்களுடைய மனதைப் புண்படுத்தவோ அல்லது கோபம் ஊட்டக்கூடிய செய்திகளையோ பரப்பக்கூடாது.

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்

எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம்கள் மிக நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கண்டி முஸ்லிம் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் எச். சலீம்தீன், செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மௌலவி எம்.ஐ.எம்.அஸ்லம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.