ஊழல் உங்கள் வாழ்வினை ஊசலாட வைக்கும்

ஊழல் என்பது ஒரு கெட்ட வார்த்தை. ஊழல் என்றால் விதிகளுக்கு உட்படாதது. நேர்மையற்ற வழிகளில் சொத்துக்களைச் சம்பாதிப்பதில் ஊழல் பொதிந்திருக்கிறது. ஊழல் என்பதில் இலஞ்சம், கையாடல் என்பனவும் உள்ளடங்கும். ஊழல் என்பது வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப்பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கும். ஊழல் என்பது சமூக ஒழுங்குக்கு மாறாக நடத்தல், பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொதுமக்களுக்கு உரிய பொருளை சட்டத்துக் குப் புறம்பான வழிகளில் சுவர்தல் அல்லது கொள்ளையடித் தல் எனப் பொருள் கூறலாம். ஊழல் நடத்தை என்பது ஒரு மனப்பான்மை. திட்டமிட்ட ஊழல் என்பது தம் பதவியைத் தவறாகப் பயன்படுத்திக் கோடிக் கணக்கில் சம்பாதிப்பது. “அரசியல் ஊழல் என்பது தனிப்பட்ட நலன்களுக்காக பொது அதிகாரத்தை சட்டத்துக்குப் புறம்பாக பயன்படுத்துவதாகும்” என அரசியல்துறைப் பேராசிரியர் இசுட்டீபண் டீமொரிசு கூறியுள்ளார். “ஒருவரோ அல்லது ஒருவருக்கு மேற்பட்டோ பொருளையோ, சேவைகளையோ மறைமுகமாக வழங்குவது” ஊழல் என பொருளியலாளர் இயன்சீனியர் கூறுகிறார். சட்டத்துக்கு உட்பட்ட ஊழல் என்பது சட்டத்துக்குள் அடங்கக்கூடியவகையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைக் குறிக்கும்.

ஊழல் என்பது மிகப்பெரிய விஷச்சூழல், ஊழல் வாழ்வை ஊசலாட வைக்கும். ஊழல் என் பது சமூகத்தில் காணப்படும் ஒரு சுயநல மனப்பான்மை. ஊழல் என்றால் நேர்மையற்ற முறையில் தீர்க்கப்படும் தேவைகள். ஊழல் எங்கு ? யாரால்? எப்போது? தொடங்கியது என்பவை விடை தேட முடியாத கேள்விதான், ஆனால் புற்றுநோயைப்போல பரவி இன்றைக்குச் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து நிற்கிறது. ஒவ்வொகு தனிம னிதனையும் பாதிக்கும் ஊழல் சமூகத்தின் ஆணிவேர்வரை புரையோடிக் கிடப்பது கவலைக்குரிய விடயமே. ஊழல் என்றால் பணத்தை திருடுவது, பொதுச் சொத்தைக் கையாடுவது என்றுமட்டும் நினைக்கக் கூடாது. ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். பின்னால் வரும் ஒருவன் முறையற்ற விதத்தில் முன்னால் போய் நின்றுகொண்டால் அதுவும் ஊழல்தான். மேலும் புகையிரதத்துக்கு வெளியே நின்று கொண்டு புகையிரதத்தின் யன்னல் வழியாக பொருள் ஒன்றைப் போட்டு புகையிரதத்தில் தனக்கு இடம் பிடிப்பதும் ஊழல்தான். இவை எல்லாமே சமூக ஒழுக்கத்தை மீறும் சுயநல நடவடிக்கைகள், ஒருவன் தன் காரியம் முதலில் நடக்க வேண்டும் என அல்லது தன் காரியம் நிறைவேற வேண்டும் என அலுவலருக்கு பணம் இலஞ்சமாகக் கொடுத்து காரியம் செய்தால் இங்கு பண பலம். அங்கு உடற்பலம் அவ்வளவுதான். சிலருக்கு ஊழல், மோசடிகள் என்பன சாதாரண விடயங்களாக அவர்தம் வாழ்வில் மாறியுள்ளன.

Read:  காதி நீதிமன்றங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன? காதிகளும் ஒரு காரணமா?

நீங்கள் செய்யும் வினைக்கு எதிர்வினையை அனுபவித்தே தீரவேண்டும். விரைவில் முன்னேற ஆசையுள்ளவர்கள், விரைவில் பணக்காரனாக வர விரும்புபவர்கள் ஊழல் செய்ய முயல்வர். அதிக எதிர்பார்ப்பு எம்மை சங்கடத்துக்கு உள்ளாக்கும். “ஒவ்வொரு மனிதருக்கும் இந்தப் பூமி போதுமானது. பேராசைக்காரனுக்கு மட்டும் போதாது மகாத்மாகாந்தி வாக்கு. ஊழலில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் இவர்களின் வாழ்வின் முக்கிய மகிழ்ச்சியாக இருக்கும். அது அவ்வேளையில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியாகும். பின்னர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தவன் போலான வாழ்க்கைதான். மனதால் அழகானவர்களுக்கு மரணம்வரை வாழ்வு மகிழ்வுதான். ஆனால் இதில் ஈடுபாடு கொண்டவர்க்கு எல்லாக் கட்டத்திலும் பதற்றம்தான், ‘சமூகம் குற்றங்களை தயாரித்து வைக்கிறது. குற்றவாளிகள் அவற்றை செய்து முடிக்கிறார்கள்” இது வின்சன்ட் சேர்ச்சில் கருத்து. ஊழல் செய்பவன் மதிப்பிழந்தவன், மதிப்பில்லாதவன், அரைமனிதன். குறுக்கு வழியில் முன்னேற வழலைச் செய்கிறார்கள். அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுகிறார்கள். இவர்கள் பார்க்க முடியாத நாளைய வரவுகளை இப்போதே ஏமாற்றிவிட்டார்கள். நாலுபேருக்குத் தெரியாமல் திரை மறைவில் செய்தால் தவறு தெரியவராது என நினைத்துச் செய்கிறார்கள்.

ஒழுக்கக்கேடு இழிவைத் தரும். ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம். தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” வள்ளுவர் வாக்கு, நல்ல நடத்தை என்ற ஒழுக்கத்தால் என்றும் நல்லதே விளையும். அதற்கு ஒழுக்கம் விதைபோல. ஒழுக்கம் கெட்டுவிட்டால் எதிலும் துன்பமே தரும். ஊழல் வாங்குவதும் ஒரு தீரா வியாதிதான். ஒழுக்கத்தில் எங்கோ ஓட்டை இருப்பதால்தான் ஊழல் நிகழ்கிறது. ஒழுக்கம் இரண்டு வகை.1. தனிமனித ஒழுக்கம். 2. சமூக ஒழுக்கம். ஒருவனது தனிமனித வாழ்வை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபடுதல் தனி மனித ஒழுக்கத்தை மீறுகிறான். உதாரணம் குடிப்பழக்கம். இவன் தனிமனித விதிகளை மீறுபவன். சமூக ஒழுக்கம் அதன் விதிகளை மீறுவது பொதுமக்களின் பெரும்பகுதியினரை பாதிக்கிறது.

Read:  பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

ஊழல் என்பது சமூக ஒழுக்கத்தை மீறும் செயல். நேர்மை என்பது அடிப்படை மனித ஒழுக்கம். ஊழல் அடிப்படை ஒழுக்கத்துக்கு மாறானது. ஊழல் ஒரு மனநோய். இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலன் ஆகும் மற்றும் பெயர்த்து” வள்ளுவர் கூற்று. அதாவது நம்மிடம் எதுவும் இல்லை கெடுதல் செய்து பொருள் சேர்க்கலாம் என்று நினைக்கக் கூடாது. நினைத்தால் உள்ளதும் போய்விடும். இவர்கள் தூய மனம் அற்றவர்கள். செய்யக்கூடாத செயலைச் செய்வது கெடுதலே. உனக்கு நீ பயன்பட வேண்டும். அதேவேளை நாட்டுக்கும் பயன்பட வேண்டும். பயப்படவும் வேண்டும். பயந்தால் சூழ் நிலையை சாதகமாக்க முடியாத நிலை ஏற்படும். மீறி ஊழலில் ஒருமுறை ஈடுபட்டு வெல்லலாம். ஜெயிச்சதாக நினைக்கலாம். மீண்டும் ஈடுபடலாம். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இந்த விடயத்தில் ஜெயிச்சுக் கொண்டிருப்பது கடினம். பல நாள் கள்வன் ஒருநாள் பிடிபடுவான் என்பார்கள். உங்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ நாம் செய்யும் செயலில் பிரச்சினைகள் ஏற்படுமா? என யோசித்து ஒரு செயலை செய்ய வேண்டும். சுய அலசல் முக்கியம். அது ஒருவர் திருந்துவதற்கு சாதகமாக இருக்கும். ஒவ்வொருவரும் தமக்கு உள்ள திறமைகளை நல்ல வழிகளில், நல்ல துறைகளில் பிரயோகிக்க வேண்டும். திறமையை ஊழல் செய்வதில் காட்டக்கூடாது. திறமையை எதற்கு உபயோகிக்க வேண்டும் என்பதைப் புரிந்து வாழ வேண்டும். திருப்தி இல்லா வாழ்க்கை வாழவிரும்பாதே.

ஒழுக்கம் என்பது தனக்காக கடைப்பிடிக்கப்பட வேண்டும். எமது தொழிற்பாடுகள் எமது சந்தோஷங்களைக் குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழி, பாவங்களுக்கு பயந்து வாழப்பழக வேண்டும். “எள்ளாத. எண்ணிச் செயல் வேண்டும் தம் மொடு கொள்ளாத கொள்ளாது உலகு” இது வள்ளுவம். அதாவது, ஒரு செயலை மற்றவர்கள் பழித்துக் குறை கூறாதவாறு சிந்தித்து செயற்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உலகம் ஏற்காது. பழிக்குப் பயப்படாமல் இருப்பது அறியாமையின் இலக்கணமாகும்.

Read:  வாரிசு அரசியலும், குடும்ப ஆட்சியும், ஜனநாயகமும்.

ஊழலால் கிடைப்பவை தற்காலிக தீர்வுகளோழிய நிரந்தரத் தீர்வு அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். ஊழல் மலிந்துள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. உனக்கு எது பொருத்தமோ, எது ஏற்றதோ அதை நீ பெறுகிறாய்” என்பார்கள். ஊழல் செய்வது நன்றாக சம்பாதிக்க என்ற மனப்பான்மையை பொதுமக்கள்தான் ஏற்படுத்துகிறார்கள் என்றும் கூறலாம். நம் கண்ணெதிரில் ஊழல் நடக்கும்போது தடுக்கசுவோ, தண்டிக்கவோ முனைவது குறைவு. பயப்படுகிறோம். அப்படியானால் அங்கு நாம் ஊழலுக்கு துணைபோவதாகக் கருதலாம். பொதுமக்களின் மனப்பான்மையும் மாறினால்தான் ஊழலை ஒழிக்கலாம்.

ஊழல் மரங்கள் விழுதுகள் பரப்பி வியாபித்திருக்க இடம் ளிக்கக் கூடாது. ஊழல் செய்து சொத்துச் சேர்க்கலாம். ஆனால் அதை அனுபவிக்க ஊழல் செய்து ஆயுளை அதிகரிக்க முடியுமா? தனிமனித விழிப்புணர்வு ஊழலை தடுக்கும். உண்மையைக் கொன்றே ஊழல் உலாவி வருகின்றது. ஊழல் இல்லா உலகம் வேண்டும். செல்வம். தேவையானதே. நல்வழியில் ஈட்டிய செல்வம் மகிழ்ச்சியையும், ஒழுக்கத்தையும் தரும். இத்தகைய செல்வம் உடையவரை எல்லோரும் போற்றுவர். உழைப்பினால் வரும் செல்வத்தைக் கொண்டு நல்லன செய்ய வேண்டும். அறிஞர் ரூசோ கூறியது போன்று ”’ஒவ்வொரு சமூகமும் தனக்கு நல்ல மனிதர்கள் வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்”. “துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது” விவேகானந்தர் கூற்று. ‘தவறை திருத்திக்கொள்வதில் வெட்கப்படாதே'” சோக்கிரட்டீஸ் கூற்று. இனியாவது திருந்திக்கொள்.

எண்ணித்துணிக கருமம். நன்றும் தீதும் பிறர்தர வாரா, ஒப்புரவு ஒழுகு. மீறி ஊழலில் மேலும் ஈடுபட முயற்சித்தால் வாழ்வு நிச்சயமாக ஊசலாடும்.

சி.தற்குணலிங்கம்,
நெல்லியடி.