பிரச்சினைகளை இருட்டில்‌ சமாளிப்பது அரசாங்கத்தின்‌ பொறுப்பல்ல

பாடசாலைகளில்‌ காலைநேரக்‌ கூட்டத்தின்‌ போது, வரிசையாக நிற்கவேண்டும்‌. அங்கு ஆரம்பித்த வரிசை, வெளியிடங்களிலும்‌ இன்னும்‌ காணக்கிடக்கிறது; நீண்டுகொண்டே செல்கின்றது.

பாடசாலைகளில்‌ கற்பித்தலுக்கு அப்பால்‌, இன்னோரன்ன செயற்பாடுகள்‌ முன்ளெடுக்கப்படுகின்றன. அதில்‌, பிரதானமானது ஒழுக்கமாகும்‌. அவ்வொழுக்கம்‌ ரயில்‌ பெட்டிகளைப்‌ போல்‌ நீண்டதாய்‌ நிற்கும்‌ வரிசைகளில்‌ கடைப்பிடிப்பதை இட்டு கொஞ்சம்‌ பெருமைப்படவேண்டும்‌.

ஒவ்வொன்றுக்காகவும்‌ வரிசையில்‌ நிற்கவேண்டிய நிர்ப்பந்தம்‌ மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில்‌ ஏற்பட்டிருக்கும்‌ எந்தவொரு நெருக்கடிக்கும்‌ முதலாவது பொறுப்பை அரசாங்கம்‌ ஏற்றுக்கொள்ளவேண்டும்‌. நெருக்கடியைப்‌ புறக்கணித்து, இருட்டில்‌ சமாளிப்பது பொறுப்பல்ல.

சமையல்‌ எரிவாயு விவகாரத்தில்‌ அரசாங்கம்‌ நடந்துகொள்ளும்‌ முறை சந்தேகத்துக்குரியது. குற்றப்புலனாய்வுப்‌ பிரிவில்‌ செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு இன்னும்‌ காஸ்‌ நிறுவனத்துக்குப்‌ பொறுப்பானவர்‌ வாக்குமூலமளிக்கவில்லை. ஆதலால்‌, அவருக்குப்‌ பின்னாலிருந்து நிதியமைச்சர்‌ காப்பாற்றுகின்றார்‌, என ஐக்கிய மக்கள்‌ சக்தியின்‌ பாராளுமன்ற உறுப்பினர்‌ முஜிபுர்‌ ரஹ்மான்‌ குற்றஞ்சாட்டியிருந்தார்‌.

இந்நிலையில்‌, சமையல்‌ எரிவாயு சிலிண்டர்கள்‌ வெடிக்குமாயின்‌ அதற்கான காப்புறுதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு லிற்றோ எரிவாயு நிறுவனத்தின்‌ தலைவர்‌ தெஷரா ஐயசிங்க தெரிவித்துள்ளார்‌. ஆனால்‌, வெடிப்பது சமையல்‌ எரிவாயுவின்‌ அடுப்புகளாகும்‌; இதற்கு பொறுப்பானவர்கள்‌ யார்‌? முதலாவது பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்‌.

வரிசையில்‌ நின்றிருந்தவர்கள்‌ மயங்கிவிழுவது, மரணமடைவது ஒன்றும்‌ புதிதல்ல. என்றாலும்‌, சமையல்‌ எரிவாயு சிலிண்டர்களைக்‌ கொள்வனவு செய்வதற்காக வரிசையில்‌ நின்று மயங்கிவிழமுவோரின்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விலையேற்றத்தால்‌ சாதாரண மக்கள்‌ பெரிதும்‌ சிரமங்களுக்கு உள்ளாவார்கள்‌.

எரிவாயு தட்டுப்பாட்டால்‌, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்‌ கூட சமையலறைக்குப்‌ பின்பாக தற்காலிக கூடாரங்கள்‌ அமைந்து, விறகு அடுப்புகளில்‌ சமைக்கப்படுகின்றன.

நகர்ப்‌ புறங்களின்‌ விறகின்‌ தேவை நாளுக்கு நாள்‌ அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அங்காடிகளிலும்‌ பொலித்தீனால்‌ பொதியிடப்பட்டு விறகு கட்டுகள்‌ விற்கப்படுகின்றன. மறுபுறத்தில்‌, காடுகளும்‌ இயற்கை வனாந்தரங்களும்‌ அழிக்கப்படுகின்றன.

இந்நிலை தொடருமாயின்‌, எதிர்கால சந்ததியினருக்கு வரண்ட பூமியே மிஞ்சும்‌. பசுமையை உறிஞ்சியெடுத்து எரியூட்டி, சுற்றாடலை மாசுப்படுத்தும்‌ நிலைமை அதிகரித்துள்ளது என்பதையும்‌ பொறுப்பு வாய்ந்த அரசாங்கமெனில்‌ கவனத்தில்‌ கொள்ளவேண்டும்‌.

Read:  உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி

எரிவாயு அடுப்புகள்‌ வெடித்தமையால்‌ உயிரிழப்புகள்‌ நிகழ்ந்‌ துள்ளன; எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்‌. மன்னார்‌, சிலாபம்‌ ஆகிய இடங்களில்‌ அப்பாவி மக்களின்‌ வீடுகள்‌ முற்றுமுழுதாக எறிந்து சாம்பராகியுள்ளன. இவற்றுக்கெல்லாம்‌ பொறுப்புகூற வேண்டியவர்கள்‌ யார்‌? நட்டஈடு பெற்றுக்கொடுப்பவர்கள்‌ யார்‌?

வரிசையும்‌, வரிசையில்‌ நிற்கவைத்தலும்‌ வெவ்வேறானவை என்பதை அரசாங்கம்‌ புரிந்துகொள்ளவேண்டும்‌. இருட்டில்‌ இருந்துகொண்டு பிரச்சினைகளைத்‌ தீர்க்க முடியாது என்பதே எமது கணிப்பாகும்‌ என்பதை நினைவூட்டுகின்றோம்‌.

தமிழ்மிரர் 8/1/2022-06