மௌலவி அப்துர் ரஊபுக்கு எதிரான பத்வாவானது ‘அடிப்படை உரிமை மீறல்’ ஆகும்

அவரது உயிருக்கும் ஆபத்து என ஞானசார தேரரிடம் சன்ன ஜயசுமான்ன முறைப்பாடு; நீதியமைச்சருக்கும் கடிதம்

காத்தான்குடியை தள மாகக் கொண்டியங்கும் சூபி முஸ்லிம் குழுவின் தலைவரான மௌலவி அப்துர் ரஊபின் பாது காப்பை உறுதிப்படுத்துவ துடன் அவரது அடிப்படை உரிமையை பாதுகாக்கு மாறு கோரி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான்ன, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயல ணியின் தலைவர் கல கொட அத்தே ஞானசார் தேரரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை நேற்றைய தினம் சந்தித்து தனது கருத்துக்களை முன் வைத்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.

அத்துடன் இதே கோரிக்கையை தான் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கடிதம் மூலம் முன் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டு மௌலவி அப்துர் ரஊபுக்கு எதிராக உலமா சபையினால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் பத்வா மூலம் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதுடன் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட் டுள்ளதாக இக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் கவனம் செலுத்தி கிழக்கில் நிலவும் இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான்ன, நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் வருமாறு:

அண்மையில் பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமாரவுக்கு நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்தும் நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான எந்தவொரு சம்பவத்தையும் எந்தவொரு நாகரிக சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. நான் சில தினங்களுக்கு முன்னர் நாட்டின் முன்னணி சூபி மத மற்றும் சமூகத் தலைவர்கள் சிலரைச் சந்தித்தேன். இதன்போது 42 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான விடயம் ஒன்றுபற்றி எனது கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இது அண்மையில் சியால்கோட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கு ஒப்பானதாகும்.

Read:  அரிசி மாஃபியாவுக்கான அரசாங்கத்தின் பதில்

காத்தான்குடியில் வாழ்ந்து வரும் இலங்கை சூபி முஸ்லிம் தலைவர் மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் மிஸ்பாஹீ, 1979 இல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனப்படும் மத அமைப்பினால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். சூபி தலைவர்களின் கருத்துப்படி,மௌலவி ரஊப் மிஸ்பாஹீ கடந்த 42 ஆண்டுகளாக அச்சத்திலும், நிச்சயமற்ற நிலையிலும், கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகிறார். அவரைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. உதாரணமாக, அவர் 4 ஆகஸ்ட் 1983, 29 ஆகஸ்ட் 1983 மற்றும் 7 நவம்பர் 2006 ஆகிய திகதிகளில் ஆபத்தான தாக்குதல்களில் இருந்து தப்பினார். அவரது நெருங்கிய சகாவான மௌலவி எம்.எஸ்.எம்.பாரூக் காதிரி அதே தீர்ப்புக்கு இணங்க காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், 1979 இல் வழங்கப்பட்ட அதே ‘தீர்ப்பின்’ அடிப்படையில் செயல்படும் தீவிரவாத குழுக்களால் இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான சூபி முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் 1 ஏப்ரல் 1979 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது (பத்வா) இல 69, பீர் சாஹிபு தெரு, கொழும்பு 12 இல் அமைந்திருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனும் அமைப்பினால் சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை நான் பார்வையிட்டேன். குறித்த புத்தகத்தின் 16 ஆவது பக்கத்தில் “மௌலவி ஏ.ஜே. அப்துல் ரவூப் தனது சித்தாந்தங்களை உணர்வுபூர்வமாக, எந்த நிர்ப்பந்தமும் இன்றி வெளிப்படுத்தியுள்ளார். எனவே, அவர் இஸ்லாத்தில் இருந்து முர்தத் (மதம் மாறியவர்) என்று கருதப்பட வேண்டும், மேலும் அவரது பேச்சை எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் சரி கண்டு அங்கீகரித்தவர்களும் முர்தத் என்று கருதப்படுவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே புத்தகத்தின் 20 வது பக்கத்தில் ஒரு முர்தத் தனது மதமான இஸ்லாத்திலிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொண்டவர் என்று கூறப்பட்டுள்ளது. “எந்தவொரு வற்புறுத்தலும் இன்றி ஒருவர் இஸ்லாத்தில் இருந்து மதம் மாறினால் அவர் கொல்லப்பட வேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Read:  அரசாங்கத்துக்கு முஜிபூர் எம்.பி சவால்

இந்த தீர்ப்பு கடந்த 42 ஆண்டுகளாக மௌலவி ரஊப் மிஸ்பாஹீ மற்றும் ஆயிரக்கணக்கான சூபி முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர், சிலர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டனர், அவர்களின் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் தாக்கப்பட்டன, அவர்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன, இந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் மற்றும் பாரபட்சம் காட்டப்பட்டனர். இன்னொரு நபரைக் கொல்வதற்கும், இலங்கையில் இத்தகைய சட்டவிரோதமான தீர்ப்பை வழங்குவதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் ஒரு மத அமைப்பினால் எவ்வாறு முடிந்தது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தை மாத்திரமன்றி தண்டனைச் சட்டத் தையும் கூட கடுமையாக மீறுகின்ற செயற்பாடாகும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இலங்கை சூபி முஸ்லிம்கள், குறிப்பாக காத்தான்குடியில் வசிக்கும் மக்கள், அந்த தொடர் நிகழ்வுகளுக்கு எதிராக பொலிஸ் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளிடம் பல முறை முறைப்பாடளித்துள்ளனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முறைப்பாடுகள் அனைத்தும் முஸ்லிம்களின் உள்ளக பிரச் சினை எனக் கூறி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கின் இருப்புக்கே சவால் விடும் மிகவும் தீங்கு விளைவிக்கும் விடயமாகும். மேலும், மேற்படி தீர்ப்பு (பத்வா) இலங்கையை மதத் தீவிரவாதிகளின் விளைநிலமாக மாற்றியதற்கும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதக் கருத்தியல்களை ஊடுருவச் செய்வதற்கும் முக்கிய காரணியாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த பத்வாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சஹ்ரான் ஹாஷிமின் முக்கிய கோரிக்கையாக இருந்ததை இந்த நேரத்தில் வலியுறுத்த வேண்டும்” என்றும் இக் கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Read:  மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை - ஜனாதிபதி

விடிவெள்ளி 06/01/2022