ஆட்சியை வீழ்த்த மக்கள் வீதிக்கு இறங்கினால் புரட்சிக்கு தலைமையேற்க தயாராக உள்ளோம்

இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து, ஆட்சியை வீழ்த்த மக்கள் தயார் என்றால், புதிய ஆட்சியை உருவாக்க மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்றால் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிக்கும் புதிய ஆட்சிக்கு  தலைமையேற்கவும்  நாம் தயாராகவே உள்ளோம். 

நாட்டில் அவசியமான ஒரு அரசியல்  மாற்றத்தை செய்ய வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடி நிலைமைகளில் மக்கள் விடுதலை முன்னணியின் நகர்வுகள் மற்றும் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் நிதி நெருக்கடிக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த ஆட்சியாளர்களே காரணமாகும். அவர்களின் தொடர்ச்சியான தவறான அரசியல் கொள்கையே நாடு கடன் பொறிக்குள் சிக்க காரணமாகும். ஆகவே தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் சகலரும் இதற்கு பொறுப்புக்கூறியாக வேண்டும்.

எனவே புரட்சியின் மூலமாகவே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும். அது அரசியல் புரட்சியாக அமையவேண்டும். அதனை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க வேண்டும். அதனை முன்னெடுத்து கொண்டு செல்ல நாம் தயாராக உள்ளோம். ஆனால்  சகல மக்களினதும் ஒத்துழைப்பும் கிடைத்தால் மட்டுமே எம்மால் அதனை முன்னெடுக்க முடியும். 

ஆகவே, தான் சகலரையும் எம்முடன் கைகோர்க்க நாம் அழைப்பு விடுக்கின்றோம். நாட்டில் அவசியமான ஒரு அரசியல்  மாற்றத்தை செய்ய வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம். இனியும் இவர்களின் கைகளில் ஆட்சியை கொடுத்தால் நாடு முழுமையாக அழிந்து நாசமாகும்.

Read:  அரசாங்கத்துக்கு முஜிபூர் எம்.பி சவால்

இந்த ஆட்சியாளர்களை விரட்ட மேலும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மக்களால் தாக்குப்பிடிக்கவும் முடியாது. 

ஆகவே இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து இந்த ஆட்சியை வீழ்த்த மக்கள் தயார் என்றால், அதற்காக மக்கள் முன்னுக்கு வருவார்கள் என்றால், புதிய ஆட்சியை உருவாக்க மக்கள் வீதிக்கு இறங்கினால்  அந்த புரட்சிக்கு தலைமையேற்க நாம் தயாராகவே உள்ளோம். 

நாம் மக்களை அராஜகத்தின் பக்கம் திருப்பவில்லை, அவர்களின் உரிமையையை வெற்றிகொள்ளவும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட ஜனநாயக ரீதியில் தேர்தல் ஒன்றின் ஊடாக இதனை மாற்றலாம் என்பதே எமது நிலைப்பாடு. உடனடியாக தேர்தலுக்கு செல்லுவோம். அதன்போது மக்களை எமது பக்கம் இணைத்துக்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.

இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றால் முதலில் ஊழல் ஆட்சியை மாற்றி தூய்மையான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலமகாவே எம்மால் சகல பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும். அதேபோல் அபகரிக்கப்பட்டுள்ள மக்கள் சொத்துக்களை மீண்டும் மக்கள் மயப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மக்கள் விடுதலை முன்னணியில் ஊழல் இல்லை, மக்கள் ஆட்சியை எம்மால் வழங்க முடியும். இந்த இரண்டு வாக்குறுதியையும் கொடுத்தே நாம் மக்களின் ஆணையை கேட்கின்றோம்.

அதேபோல் எமது நாட்டின் அபிவிருத்திக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம். அவர்கள் தமிழர்களா முஸ்லிம்களா சிங்களவர்களா என்பது முக்கியமில்லை. இலங்கையர்கலைக் சகலரதும் ஒத்துழைப்பு எமக்கு வேண்டும். 

நாட்டில் மூவின மக்களின் ஒற்றுமையில் நாட்டை கட்டியெழுப்பினால் மட்டுமே சர்வதேச முதலீடுகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். நாட்டை விட்டு வெளியேறிய பலர் இன்று வெளிநாடுகளில் செல்வந்தர்களாக உள்ளனர் அவர்கள் மீண்டும் எமது நாட்டில் முதலீடுகளை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம் என்றார்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

-வீரகேசரி- (2022-01-03) (ஆர்.யசி)