போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை செலுத்த கால எல்லை நீடிப்பு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தண்டப்பண கட்டணங்களை செலுத்துவற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தபால் மாஅதிபர், ரஞ்சித் ஆரியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தண்டப்பணத்தை, மேலதிக தண்டப்பணம் அறவிடப்படாமல் செலுத்துவதற்கான கால எல்லை இதற்கு முன்னர் மே 02 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த சலுகைக் காலத்தில் தண்டப்பணத்தை பொறுப்பேற்றல், மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில், தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் இடம்பெற்றது.

ஆயினும் ஏப்ரல் 29 முதல் மே 04 ஆம் திகதி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாலும், மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசங்களில், தபாலாகங்களில் அதனைச் செலுத்த வாய்ப்பு கிடைக்காமை காரணமாக, மே 02 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட குறித்த சலுகைக் காலத்திற்காக, மேலதிக சலுகைக் காலமாக மே 11ஆம் திகதி முதல் மே 29ஆம் திகதி வரையான காலப் பகுதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸாரினால் 2020 மார்ச் மாதம் 01ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள ஸ்தலத்தில் விதிக்கப்படும் தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி, இக்காலப் பகுதிக்குள் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

அதே போன்று பெப்ரவரி 16 முதல் பெப்ரவரி 29, காலப் பகுதியில் விதிக்கப்பட்ட தண்டப்பணச் சீட்டானது, 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டிய உரிய மேலதிக அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

மே 11 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள அனைத்து தபாலகம் மற்றும் உப தபாலகங்கள் திறக்கப்படும் என்பதால், அதனை எவ்வித தடைகளுமின்றி மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.