பொதுமக்களுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிமுறை படிமுறையாக தளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள்  நாளை மறுதினம் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இதன்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளது.

தேவையான தனிமைப்படுத்தல் கட்டளைகள், சட்ட பூர்வ அதிகாரங்களை உள்ளடக்கியதாக இந்த விஷேட வர்த்தமானி அறிவித்தல்  சுகாதார அமைச்சரினால் வெளியிடப்படும் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சேவை வழங்கும் தனியார், அரச நிறுவனங்கள் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள், பொது போக்குவரத்தின் போது கையாளப்படவேண்டிய நடைமுறை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அதில்  உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும், அந்த வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் செயற்படும் போது, மீளவும் கொரோனா பரவல் அச்ச சூழல் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

‘ தொற்று நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்துக்கு அமைவாக அமைச்சரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்படும்.  இந்த நோயைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளின்போது வரும் நாட்களில் சட்ட  ரீதியிலான அதிகாரத் தன்மையை உறுதி செய்யும் விதமாக இந்த வர்த்தமானி அமைந்திருக்கும். 

தற்போதைய நிலையில் ஊரடங்கு தளர்வு அவசியமானதாகும். அவ்வாறு தளர்த்தப்படும் போது இந்த தொற்று பரவக்கூடிய  வாய்ப்புக்கள் இருக்கின்றன. எந்த ஒரு நாட்டிலும் நிலைமை இது தான்.  எனினும் அதனை கட்டுப்பாட்டு நிலைக்குள் வைத்திருந்தால் எந்த சிக்கலும் இல்லை.’ என விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் தற்சமயம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில், நாளை மறுதினம் 11 ஆம் திகதி திங்களன்று ஊரடங்கு அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்வுள்ளது.

அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கானது, நாளை மறுதினம் இரவு 8.00 மணிக்கு மீள அமுல் செய்யப்படும். ஒவ்வொரு நாளும் அந்த 21 மாவட்டங்களிலும் இரவு 8.00 மணிமுதல் அதிகாலை 5.00 மணிவரை, 9 மணிநேர ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை அமுல் செய்யப்படவுள்ளது. 

இந்த 21 மாவட்டங்களிலும் ஊரடங்கு நிலைமை தளர்த்தப்படும் போது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு முடியுமாக இருப்பினும், இயன்றளவு அத்தியாவசிய  தேவைகளுக்காக அன்றி வீணாக வீட்டை விட்டு வெளியேறுவதை  தவிர்க்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையானது, மறுஅறிவித்தல் வரை தொடர இன்று வரை உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்த இறுதி முடிவும் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

 எனினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (11.05.2020)முதல் ஊரடங்கை தளர்த்தாமல், பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என பொலிஸ் சட்டப் பிரிவின்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இம்மாவட்டங்களில், தொழிலுக்கு செல்பவர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள  அட்டைகளின் இறுதி இலக்கங்களுக்கு அமையவே வீடுகளில் இருந்து வெளியேற முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இருப்பிடத்தில் இருந்து மிக அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு, உணவு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை மாத்திரம் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கிணங்கவே வழமை போன்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

 இவ்வாறான பின்னனியில் இந்நான்கு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு எந்த தொற்றாளரும் அடையாளம் காணப்படாமல் இருக்குமாயின், அதனையடுத்து அம்மாவட்டங்களை  ஊரடங்கு  நிலைமையில்  இருந்து விடுவிப்பது தொடர்பில் தீர்மானத்துக்கு வருவது இலகுவாக இருக்கும் என  பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

 இதனிடையே நாளை மறுதினம், ஊரடங்கு 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டாலும், மேல் மாகாணத்தில் நிறுவங்கள் திறக்கப்பட்டாலும்  மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

 குறிப்பாக நிறுவங்களுக்கு, அவ்வந்த மாவட்டங்களுக்குள் உள்ள ஊழியர்களை பெரும்பாலும் சேவைக்கு அழைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திங்கள் முதல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

எனினும் இவை அனைத்தும் மாவட்டங்களுக்கு உள்ளேயே சேவையில் ஈடுபடவுள்ளன. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து இடம்பெறாது என இலங்கை போக்குவரத்து சபை கூறியது.  இதில் 3,000 பஸ் வண்டிகள்  ஊரடங்கு தளர்த்தப்படும் 21 மாவட்டங்களிலும் ஏனைய 2,700 பஸ் வண்டிகள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் சேவையில் இருக்கும் என அந்த சபை கூறியது.

 எவ்வாறாயினும்  வழமையான நடவடிக்கையின் பால் திரும்பும் போது சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் செயலர் பத்ரானி ஜயவர்தன கூறினார். முகக் கவசங்களை அணிவது, சமூக இடைவெளியைப் பேணுவது, அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்வது போன்ற சுகாதார  படிமுறைகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்கடடினார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page