தமிழ் மக்களின் மனதினை வெல்லுமா சீனா?

கடந்த 15ஆம்‌ திகதி, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஜயம்‌ மேற்கொண்ட சீனத்‌ தூதுவர்‌ கிவி சென்ஹொங்‌, 16ஆம்‌ திகதி நல்லூர்‌ கந்தசுவாமி கோவிலுக்குச்‌ சென்று, மரபு ரீதியாக மேலாடையின்றி வழிபாடுகளில்‌ ஈடுபட்டார்‌. கடந்த 24ஆம்‌ திகதி பிரதமர்‌ மஹிந்த ராஜபக்ஷ, திருப்பதிக்குச்‌ சென்று வெங்கடேஸ்வராவை வழிபட்டார்‌.

இரண்டு தலங்களும்‌ இந்துக்களின்‌ பிரசித்தி வாய்ந்த புனித தலங்களாகிய போதிலும்‌, இருவரினது வழிபாடுகளின்‌ நோக்கங்கள்‌ ஒன்றல்ல. அவற்றில்‌ ஒன்று, தனிப்பட்ட ஆன்மிக விடுதலையை நோக்கமாகக்‌ கொண்டது. மற்றையது, தமது நாட்டின்‌ பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக்‌ கொண்டது.

சீனத்‌ தூதுவரின்‌ வடமாகாண விஜயத்தின்‌ போது எடுக்கப்பட்டு, அவற்றின்‌ மறைமுக அர்த்தத்தின்‌ காரணமாக வைரலாகிய இரண்டு புகைப்படங்களையும்‌ ஒன்றாக வைத்துப்‌ பார்த்தால்‌, சீனத்‌ தூதுவரின்‌ விஜயத்தின்‌ மூலம்‌ தெரியவரும்‌ இராஜதந்திரத்தின்‌ சுயரூபத்தை விளங்கிக்‌ கொள்ளலாம்‌.

அவற்றில்‌ ஒன்று, தூதுவரும்‌ அவரது தூதுக்குழுவின்‌ ஆண்‌ உறுப்பினர்களும்‌ மேலாடையின்றி நல்லூர்‌ கோவில்‌ வளவில்‌ நிற்க்கும்‌ காட்சியைக்‌ கொண்டதாகும்‌. மற்றையது, பருத்தித்‌ துறையில்‌, அக்குழுவினர்‌ பின்னணியில்‌ இருக்க, சீன அதிகாரியால்‌ இயக்கப்பட்ட ‘டரோன்‌’ விமானம்‌ பறக்கும்‌ காட்சியைக்‌ கொண்டதாகும்‌.

வெளிநாட்டுத்‌ தூதுவர்கள்‌, வெளிநாட்டுத்‌ தலைவர்கள்‌ போன்றோர்‌ இலங்கையின்‌ வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச்‌ செல்வது ஒன்றும்‌ புதிய விடயம்‌ அல்ல. ஆனால்‌, சீனத்‌ தூதுவர்‌ ஒருவர்‌, மூன்று நாள்‌ விஜயம்‌ மேற்கொண்டு, வடமாகாணத்துக்கு குறிப்பாக, யாழ்ப்பாணத்துக்குச்‌ சென்றதாக எமக்கு ஞாபகத்துக்கு வரவில்லை.

அத்தோடு, சீனத்‌ தூதுவரின்‌ இந்த விஜயம்‌, ஊடகங்களின்‌ கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதற்குக்‌ காரணம்‌ இல்லாமலில்லை. இந்தியாவுக்கும்‌ சீனாவுக்கும்‌ இடையிலான உறவு, சுமூகமானதல்ல என்பது, சகலரும்‌ அறிந்த விடயமாகும்‌.

அவ்வாறிருக்க, அண்மையில்‌ இலங்கை அரசாங்கம்‌ வடகடலில்‌ மூண்று தீவுகளில்‌ அமைக்கவிருந்த மின்‌ உற்பத்தித்‌ திட்டமொன்றை, சீன நிறுவனமொன்றிடம்‌ கையளித்து இருந்தது. ஆனால்‌, இந்தியாவினதும்‌ தமிழ்‌ அரசியல்‌ கட்சிகளினதும்‌ எதிர்ப்பின்‌ காரணமாக, அத்திட்டத்தை சீன நிறுவனத்திடம்‌ கையளிக்க அரசாங்கம்‌ மறுத்தது.

இது சீனாவுக்கு ஏமாற்றத்தை மற்றுமன்றி, மனக்சுசப்பையும்‌ ஏற்படுத்தியது. எனவேதான்‌, அந்தச்‌ சீன நிறுவனம்‌, மாலைத்தீவில்‌ 12 தீவுகளில்‌ சூரிய ஒளியில்‌ மின்‌ உற்பத்தி செய்யும்‌ திட்டமொன்றுக்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போது, சீனத்‌ தூதுரகம்‌ அதைப்‌ பற்றிய செய்தியில்‌, இலங்கையில்‌ திட்டம்‌ மறுக்கப்பட்டதையும்‌ குறிப்பிட்டு இருந்தது.

Read:  முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

இது அவ்வாறு இருக்க, சீனத்‌ தூதுவர்‌ தமது மன்னார்‌ விஜயத்தின்‌ போது, படகொன்றில்‌ இந்திய கடல்‌ எல்லை வரை சென்றுள்ளார்‌. பருத்தித்துறைக்குச்‌ சென்ற துதுவர்‌, அங்கிருந்த அதிகாரிகளிடம்‌, “இங்கிருந்து இந்தியாவுக்கு எவ்வளவு தூரம்‌” என விசாரித்துள்ளார்‌.

இந்தியாவுடனான சீனாவின்‌ உறவின்‌ சுபாவத்தை மக்கள்‌ அறிந்திருக்கும்‌ நிலையில்‌, இதை அவர்‌ பகிரங்கமாக கேட்க வேண்டியதில்லை. அவரது அதிகாரிகளிடம்‌ கேட்டு இருந்தால்‌, அவர்கள்‌ கூறியிருப்பார்கள்‌. தெரியாவிட்டால்‌, உடனடியாக இணையத்தில்‌ அதைத்‌ தேடி, அவரிடம்‌ கூறியிருப்பார்கள்‌. அது ஒன்றும்‌ தேவையில்லை; அவர்‌ ஒரு நாட்டின்‌ தூதுவர்‌ என்ற வகையில்‌, தாம்‌ கடமையாற்றும்‌ நாடான இலங்கையின்‌ புவியியல்‌ விவரங்களை நிச்சயமாக அறிந்தருப்பார்‌. அதன்படி, இலங்கையின்‌ வட கோடியாள பருத்தித்துறைக்கும்‌ தமது நாட்டின்‌ அரசியல்‌ எதிரிகளில்‌ அல்லது போட்டியாளர்களில்‌ முக்கியமான நாடான இந்தியாவுக்கும்‌ இடையிலான தூரத்தை, அவர்‌ கொழும்பில்‌ இருந்து புறப்படும்‌ முன்னரே நிச்சயமாக அறிந்திருப்பார்‌. ஆனால்‌, இந்தியாவைச்‌ சம்பந்தப்படுத்தி எதையாவது கூறி, இந்தியாவைப்‌ பற்றிய தமது கவனத்தை வெளிக்காட்டுவதே அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்‌.

உண்மையிலேயே, சீனத்‌ தூதுவர்‌ ஒருவர்‌, இந்தியாவைப்‌ பற்றி அவ்வாறான சிறிய கேள்வியொன்றைக்‌ கேட்டாலும்‌ அது, ஊடகங்களின்‌ கவனத்தை ஈர்ப்பதில்‌ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும்‌ இல்லை. ஏனெனில்‌, அதில்‌ அரசியல்‌, இராணுவ தந்திரோபாய அர்த்தமொன்று மறைந்திருக்கலாம்‌ என்பதாலாகும்‌.

“ட்ரோன்‌’ விமானங்களும்‌ பெரும்பாலும்‌ பாதுகாப்புப்‌ பணிகளில்‌ உபயோகிக்கப்படும்‌ வானூர்தி வகையொளன்றாகும்‌. சீனத்‌ தூதுவர்‌ முன்னிலையில்‌, சீன அதிகாரி ஒருவர்‌ இந்தியாவை முன்னோக்கி இருந்து, ‘ட்ரோன்‌’ ஒன்றைப்‌ பறக்கவிடுவதிலும்‌ ஒரு செய்தி மறைந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்‌.

எனவே, வடபகுதிக்கான சீனத்‌ தூதுவரின்‌ இந்த விஜயம்‌, இந்தியாவை ஆத்திரமூட்டுவதாக இருந்ததாக, சில அரசியல்‌ ஆய்வாளர்கள்‌ கருதுகின்றனர்‌. ஜெனீவாவில்‌ ஐ.நாவுக்கான இலங்கையின்‌ தூதுவராக இருந்த கலாநிதி தயான்‌ ஐயதிலக்க, அந்த விஜயம்‌ ஆத்திரமூட்டுவதாக இருந்ததாகவும்‌ அரசாங்கம்‌ அதற்கு இடமளித்து இருக்கக்‌ கூடாது என்றும்‌ ஊடகங்களிடம்‌ கூறியிருந்தார்‌.

Read:  ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

சீனத்தூதுவர்‌ தமது விஜயத்தின்‌ போது, யாழ்ப்பாண நூலகத்துக்குச்‌ சென்று சில மடிக்கணினிகளை அன்பளிப்புச்‌ செய்தார்‌. அத்தோடு, வட மாகாணத்தில்‌ கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கான தமது விருப்பத்தையும்‌ தெரிவித்தார்‌.

இவை அனைத்தும்‌, வடபகுதி தமிழ்‌ மக்களைக்‌ கவரும்‌ நோக்கத்துடன்‌ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்‌ என்றே ஊகிக்க முடிகிறது. இவை, எதிர்காலத்திலும்‌ வடபகுதியில்‌ சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சீனாவின்‌ நோக்கத்தையே எடுத்துக்‌ காட்டுகின்றன.

பொது மக்களைக்‌ கவரும்‌ இராஜதந்திரத்தின்‌ முக்கியத்‌ துவத்தை, சீனாவுக்கு உணர்த்தும்‌ சில சம்பவங்கள்‌ அண்மையில்‌ பாகிஸ்தானில்‌ இடம்பெற்றன. சீனாவின்‌ ‘ஒரு பட்டியும்‌ ஒரு பாதையும்‌’ என்ற சர்வதேச திட்டத்தின்‌ கீழ்‌, பல நாடுகளில்‌ செயற்படுத்தப்படும்‌ அபிவிருத்தித்‌ திட்டங்களில்‌, பாகிஸ்தானில்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்‌ மிக முக்கியமானதாகக்‌ கருதப்படுகிறது. அந்தத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, குவாதர்‌ என்ற பாகிஸ்தானிய நகரத்தில்‌ பல நடவடிக்கைகள்‌ இடம்பெற்று வருகின்றன.

அண்மையில்‌, குவாதர்‌ அருகே இழுவைப்‌ படகுகள்‌ மூலம்‌ மீன்‌ பிடிக்க, சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. அதனையடுத்து, கடந்த ஜூன்‌ மாதம்‌ முதல்‌, அந்த நகறில்‌ பாரிய சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்‌ இடம்பெற்று வருகின்றன. பல இடங்களில்‌ சீனர்கள்‌ கொல்லப்பட்டும்‌ உள்ளனர்‌.

எனவே, தமது திட்டங்கள்‌ செயற்படுத்தப்படும்‌ பகுதிகளில்‌, பொது மக்களை வென்றெடுப்பதன்‌ முக்கியத்துவத்தை சீனா உணர்ந்திருக்கிறது. ஆனால்‌, இலங்கையில்‌ தமிழ்‌ மக்களின்‌ ஆதரவைப்‌ பெறுவது, சீனாவுக்கு அவ்வளவு இலகுவானதாக அமையாது. அதற்கு சமூக, அரசியல்‌, கலாசார, மானசிகக்‌ காரணங்கள்‌ பல உள்ளன.

இலங்கையில்‌, தமிழ்‌ மக்கள்‌ இந்தியாவைத்‌ தமது இரண்டாவது தாய்‌ நாடாகவே கருதுகிறார்கள்‌. மலையகத்‌ தமிழர்களைப்‌ பொறுத்தவரை, இந்தியாவையே அவர்கள்‌ தமது பூர்வீக நாடாகக்‌ கருதுகிறார்கள்‌. பொதுவாக, இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவுடன்‌ மொழி ரீதியாக மட்டுமன்றி, குடும்பம்‌, கலாசாரம்‌ போன்ற வலுவான உறவுகளும்‌, நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இன்னமும்‌ தமிழ்ப்‌ பகுதிகளில்‌, மகாத்மா காந்தியின்‌ சிலைகளைக்‌ காணலாம்‌.

1960களில்‌, இலங்கையில்‌ சில சீன கம்யூனிஸ்ட்காரர்களின்‌ வீடுகளில்‌, முன்னாள்‌ சீனத்‌ தலைவர்‌ மா சேதுங்கின்‌ உருவப்‌ படங்கள்‌ இருந்தாலும்‌, பொதுவாக இந்தியாவுடனான தமிழ்‌ மக்களின்‌ மானசிக நெருக்கத்தை அது பாதிக்கவில்லை. 1960களில்‌ இந்தியாவுக்கும்‌ சீனாவுக்கும்‌ இடையிலான போரின்‌ போது, ஒரு சிலரைத்‌ தவிர பெரும்பாலான தமிழ்‌ மக்கள்‌, இந்தியாவையே ஆதரித்தனர்‌. அதேபோல்‌, இலங்கையின்‌ இனப்பிரச்சினையின்‌ போது, இந்தியா தொடர்ந்தும்‌ தமிழ்‌ மக்களுக்காகப்‌ பரிந்து பேசியது. தமிழ்‌ மக்களுக்குச்‌ சாதகமாக சில தீவிர நடவடிக்கைகளையும்‌ எடுத்தது. இவற்றின்‌ போது, இந்தியா தனது நலன்களை முதன்மையாகக்‌ கொண்டு செயற்பட்டது என்பது உண்மையாயினும்‌, அதனால்‌ இந்தியாவுடனான தமிழ்‌ மக்களின்‌ நெருக்கம்‌ வளர்ந்தது என்பதும்‌ உண்மையே.

Read:  ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

புலிகளுக்கும்‌ ஆயுதப்‌ படையினருக்கும்‌ இடையிலான போரின்‌ போது, இலங்கை அரசாங்கத்துக்கு சில மறைமுகமான உதவிகளை இந்தியா செய்த போதிலும்‌, தொடர்ந்தும்‌ தமிழ்‌ மக்களின்‌ பாதுகாப்பை வலியுறுத்தியே வந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள்‌ பேரவையில்‌, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமைகள்‌ மீறல்‌ தொடர்பாகக்‌ குற்றச்சாட்டுகள்‌ முன்வைக்கப்பட்ட போது, இலங்கை அரசாங்கத்தை சீனா ஆதரித்தே வந்துள்ளது.

இந்தக்‌ குற்றச்சாட்டுகளை, ஐ.நா பாதுகாப்புச்‌ சபை ஊடாக, சர்வதேச குற்றவியல்‌ நீதிமன்றத்துக்கு எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌ எனத்‌ தமிழ்‌ தலைவர்கள்‌ கூறினாலும்‌, பாதுகாப்புச்‌ சபையில்‌ சீனா அதற்கு எதிராகத்‌ தமது வீட்டோ” அதிகாரத்தைப்‌ பாவிக்கும்‌ என்பதும்‌ அவர்களுக்குத்‌ தெரியும்‌. அண்மையில்‌, இலங்கையில்‌ சீன வேலைத்தளங்களின்‌ பெயர்ப்‌ பலகைகளில்‌, தமிழ்‌ மொழி புறக்கணிக்கப்பட்டமையும்‌ இவற்றோடு சேர்ந்‌ துவிடுகிறது.

எனவே, ஒரு சில பொருளாதார உதவிகளாலோ மக்கள்‌ பயனடையும்‌ வகையிலான சில பொருளாதார திட்டங்களாலோ, தமிழ்‌ மக்களின்‌ மனதை வெல்வது என்பது, சீனாவுக்கு முடியாத விடயம்‌ என்பது தெளிவானதாகும்‌. ஆனால்‌, இலங்கையை பொருளாதார ரீதியாகத்‌ தமது கட்டுப்பாட்டில்‌ வைத்திருக்க, சீனா மேற்கொள்ளும்‌ முயற்சியின்‌ ஒர்‌ அங்கமாகவும்‌ இந்து சமுத்திர பிராந்தியத்தில்‌ இந்தியாவுக்குச்‌ சவால்விடும்‌ தமது நோக்கத்தின்‌ ஓர்‌ அங்கமாகவும்‌, சிலவேளை வடபகுதியில்‌ மென்மேலும்‌ சீனா உலாவித்‌ திரியலாம்‌.

எம்.எஸ்.எம் ஐயூப் (தமிழ் மிரர் 29/12/2021)