காதி நீதிமன்றத்தால் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகின்றது – மொஹமட் சுபைர் 

காதி நீதிமன்றத்தினால் முஸ்லிம் சமூகத்தினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது. ஆகவே காதி நீதிமன்றத்தை நீக்கும் பரிந்துரையை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றின் பதிவாளர் (ஓய்வு) மொஹமட் சுபைர் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியிடம் கோரிக்கை முன்வைத்தார்.

ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியினர் ஏற்பாடு செய்த மக்கள் கருத்து கோரல் சந்திப்பு கண்டி பிரதேச செயலக பிரிவில் இடம் பெற்றது.

தான் சுய விருப்பத்தின் அடிப்படையில் காதி நீதிமன்றத்தை நீக்கும் யோசனையை முன்வைப்பதாக குறிப்பிட்ட மொஹமட் சுபைர் நீதிமன்ற சேவை கட்டமைப்பின் 40 வருட கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது துறைசார் அமைப்புக்கள்,மக்கள் சமூகத்தினர், தொழிற்துறையினர் உள்ளிட்ட பல்வேறுதரப்பினர் தங்களின் யோசனைகளை முன்வைத்தனர்.

முஸ்லிம் விவாகச்சட்டம், பல் விவாகச்சட்டம்,அத்துடன் மத அடிப்படையிலான பல்வேறுப்பட்ட அமைப்புக்கள் ஆகியன தடை செய்யப்பட வேண்டும் என்பதை மொஹமட் சுபைர் செயலணியிடம் குறிப்பிட்டார். காதி நீதிமன்றில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டத்தரணி விசாரணைகளை முன்னெடுப்பதில்லை.

காதியே வழக்கு விசாரணையினை முன்னெடுப்பார்.சட்ட முறைமைகளை காதியால் விளங்கிக் கொள்ள முடியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காதி நீதிமன்றினால் சரியான தீர்ப்பு வழங்கப்படுவதில்லை.

காதி நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்புக்களும் முறையாக செயற்படுத்துவதுமில்லை.முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தினால் சமூக மற்றும் சட்ட ரீதியிலும் பாரிய அநீதி இழைக்கப்படுகிறது. ஆகவே இச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்.

மதத்தை பகுதி பகுதியாக வேறுப்படுத்த கூடாது என குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும் பல்வேறு அடிப்படைவாத தரப்பினர் தவறான புரிதல்களுடன் மதத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்துள்ளனர். காதி நீதிமன்றத்தை நீக்குவதை பரிந்துரை செய்யுமாறு மேல்நீதிமன்றின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் செயலணியிடம் வலியுறுத்தினார்.

இலங்கையில் ஒரே நாடு-ஒரே சட்டம் எண்ணக்கருவை அடைவதற்காக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கோரியுள்ளனர்.

பொது மக்கள் சுயேட்சையாக தங்களின் கருத்துக்களை முன்வைப்பதற்காக கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயலணியின் காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

-வீரகேசரி- (2021-12-27 22:14:15)