தலைமைகளால் கைவிடப்பட்ட சமூகமாக முஸ்லீம்

தமிழ்‌, முஸ்லிம்‌ கட்சிகள்‌ தாங்கள்‌ பிரதிநிதித்துவம்‌ செய்யும்‌ சமூங்களின்‌ அரசியல்‌ அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு ஒற்றுமையுடன்‌ செயற்பட வேண்டும்‌. இதில்‌ மாற்றுக்‌ கருத்துக்கள்‌ கிடையாது. ஆனால்‌, தமிழ்‌, முஸ்லிம்‌ கட்‌சிகளின்‌ ஒற்றுமை என்பது குறுகிய நோக்‌கத்தை அடைந்து கொள்வதற்காக மட்‌டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது.

தமிழர்களினதும்‌, முஸ்லிம்களினதும்‌ உரிமைகளும்‌, அரசியல்‌ அபிலாஷைகளும்‌, சுயநிர்ணயமும்‌ பாதிக்காத வகையில்‌ ஒற்றுமை அமைய வேண்டும்‌. வடக்கு, கிழக்கு மாகாணங்களில்‌ தமிழர்‌களுக்கும்‌, முஸ்லிம்களுக்கும்‌ இடையே தீர்க்கப்படாத பல பிரச்சினைகள்‌ உள்‌ளன. அவற்றை தீர்ப்பதற்கு விட்டுக்‌ கொடுப்புக்கள்‌ அவசியம்‌.

ஆனால்‌, இரண்டு சமூகங்களும்‌ தாம்‌ நினைத்தது போன்று தீர்வு அமைய வேண்டுமென்று நீண்ட காலமாக செயற்பட்டுக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. ஆகவே, இதற்கு தீர்வு காணாது பேரினவாதக்‌ கட்சிகளிடம்‌ நாங்கள்‌ ஒற்றுமையாக செயற்பட்டுக்‌ கொண்டிருக்‌கின்றோம்‌ என்று காட்டிக்‌ கொண்டிருப்‌பது குறுகிய நோக்கத்தைக்‌ கொண்டதாகவும்‌, தற்போது ஆட்சியில்‌ உள்ள அரசாங்கத்திற்கு நெருக்கடிகடிகளை ஏற்‌படுத்துவதற்காக எடுக்கப்படும்‌ முன்னெடுப்பாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ்‌, முஸ்லிம்கட்சிகள்‌ ஒன்றிணைந்து 13ஆவது திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்றும்‌, இன்னும்‌ சில கோரிக்கைகளையும்‌ முன்‌ வைத்து இந்திய பிரதமருக்கும்‌, வெளிவிவகார அமைச்சருக்கும்‌ அனுப்புவதற்கு ஒரு ஆவணத்தை தயார்‌ செய்து வருகின்றன. இந்த ஆவணம்‌ தமிழர்களின்‌ கோரிக்‌கையாக இருக்கின்ற இணைந்த வடக்கு, கிழக்கு என்பதற்கு வலுச்சேர்க்கும்‌ ஒன்‌றாகவும்‌ அமையும்‌.

அதேவேளை, இணைந்த வடக்கு, கிழக்கு என்பது முஸ்லிம்களை பொறுத்த வரை அவர்களின்‌ அரசியல்‌ அபிலாஷைகளுக்கு எதிரானது, வடக்கும்‌, கிழக்கும்‌ இணையும்‌ போது முஸ்லிம்களின்‌ இனவிகிதாசாரம்‌ சுமார்‌ 17சதவீதமாக வீழ்ச்சியடையும்‌. அதுமட்டுமன்றி இணைந்த வடக்கு, கிழக்கில்‌ முஸ்லிம்களின்‌ சுய நிரண உரிமையையும்‌, அரசியல்‌ அபிலாஷைகளையும்‌ உள்ளடக்கியதான உத்‌தரவாதங்கள்‌ இன்று வரைக்கும்‌ தமிழ்‌, முஸ்லிம்‌ கட்சிகளினால்‌ முன்‌ வைக்கப்படவில்லை. மேலும்‌, இணைந்த வடக்கு, கிழக்கு என்பதனை எந்தவொரு பேரினவாதக்‌ கட்சியும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்போவதுமில்லை. ஆயினும்‌, இலங்கையின்‌ இனப்பிரச்சினைக்கு ஆட்சியாளர்களும்‌, பேரினவாதக்‌ கட்சிகளும்‌ தீர்வை முன்‌ வைத்தாக வேண்டும்‌.

இதேவேளை, தற்போது இந்திய பிரதமருக்கும்‌, வெளிவிவகார அமைச்சருக்கும்‌ அனுப்புவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள ஆவணம்‌ இனப்‌ பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பதற்கு அப்பால்‌ இந்தியாவின்‌ தேவைக்காக, இந்தியாவினதும்‌, அமெரிக்காவினதும்‌ ஆலோசனைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றாகவே அமைந்துள்ளது.

இலங்கையில்‌ சீனாவின்‌ ஆதிக்கம்‌ வெகுவாக அதிகரித்துள்ளது. இது இந்‌தியாவின்‌ தேசிய பாதுகாப்புக்கு ஆபத்‌தாகும்‌.

அமெரிக்காவின்‌ வல்லாதிக்கத்திற்கும்‌ எதிரானதாகும்‌. இதனால்‌, இந்தியா தமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்து கொள்‌வதற்கும்‌, சீனாவின்‌ ஆதிக்கத்தை இலங்‌கையில்‌ குறைப்பதற்கும்‌ இலங்கையின்‌ உள்விவகாரத்தில்‌ நேரடித்‌ தலையீட்டை மேற்கொண்டு இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுக்குள்‌ வைத்துக்‌ கொள்வ தற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவின்‌ ஒத்துழைப்பும்‌ உள்ளது.

இந்தியாவின்‌ இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்‌ கொள்வதற்காக இலங்‌கையில்‌ உள்ள தமிழ்‌, முஸ்லிம்‌ கட்சிகளின்‌ கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌ 13ஆவது திருத்தச்‌ சட்ட மூலத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்று இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்‌களை கொடுப்பதே இந்த ஆவணத்தின்‌ பின்னணியில்‌ உள்ள திட்டமாகும்‌.

ஆகவே, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடாகவோ, இந்தியாவின்‌ தேவைக்காக என்பதாகவோ இல்லாமல்‌ தமிழ்‌, முஸ்லிம்‌ மக்களின்‌ எதிர்காலத்திற்‌கானது என்று அமைய வேண்டும்‌. குறிப்‌பாக, இந்த ஆவணத்தில்‌ முஸ்லிம்களின்‌ அபிலாஷைகள்‌ எவ்வாறு உள்வாங்கப்‌பட்டுள்ளது என்பதனை தமிழ்‌, முஸ்லிம்‌ கட்சிகள்‌ தெளிவுபடுத்த வேண்டும்‌. குறித்த ஆவணம்‌ முழுமையாக மூடுமந்‌திரமாக இருக்க முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்தில்‌ முஸ்லிம்‌களுக்கு எதிராக பல அட்டூழியங்கள்‌ பெளத்த இனவாதிகளினால்‌ பேரினவாத அரசியல்வாதிகளின்‌ தேவைக்காக மேற்கொள்ளப்பட்டது. அதன்போது முஸ்லிம்‌ விரோத செயற்பாடுகளில்‌ ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்‌கைகளை எடுப்பதில்‌ அசமந்த போக்கே பின்பற்றப்பட்டது.

இதன்போது முஸ்லிம்‌ கட்சிகளும்‌, தமிழ்‌ கட்சிகளும்‌ நல்லாட்சி அரசாங்கத்‌திற்கு ஆதரவாகவே செயற்பட்டன. தமிழ்‌ தேசிய கூட்டமைப்பினர்‌ எதிர்க்கட்சியில்‌ உள்ள ஆளுந்‌ தரப்பினராகவே செயற்பட்டனர்‌. இந்நிலையில்‌ முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்‌களுடன்‌ தொடர்புடையவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று நல்லாட்சி அரசாங்கத்‌திற்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளூம்‌ அது குறித்து அதிக கவனம்‌ கொள்ளவில்லை. காரணம்‌, நல்லாட்சி அரசாங்கம்‌ இந்தியா, அமெரிக்க நாடுகளின்‌ அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு தமது செயற்பாட்டை மேற்கொண்டமையாகும்‌.

நாங்கள்‌ அரசாங்கத்தில்‌ இருப்பதனால்‌ தான்‌ முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள்‌ கட்டுப்படுத்தப்பட்டுள்‌ளது. இல்லாது போனால்‌ முஸ்லிம்களின்‌ ‘கப்பு’ இன்னும்‌ கிழிந்திருக்கும்‌ என்று தலைவர்‌ முதல்‌ பாராளுமன்ற உறுப்பினர்களும்‌ சொல்லிக்‌ கொண்டார்கள்‌.

தலைவர்கள்‌ எதிர்க்கட்சியில்‌ உள்‌ளார்கள்‌. பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ ஆளுந்‌ தரப்பினருடன்‌ தேனிலவு நடத்திக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. தற்‌போதைய அரசாங்கமும்‌ முஸ்லிம்களின்‌ கொரோனா மரண உடல்களை எரித்தது முதல்‌ முஸ்லிம்‌ தனியார்‌ சட்டத்தை இல்‌லாமல்‌ செய்தல்‌, ஒரு நாடு ஒரே சட்டம்‌ என்று நீண்டு கொண்டிருக்கும்‌ முஸ்லிம்‌ விரோத செயற்பாடுகளை வெறுமனே பார்த்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌.

அவை குறித்து பேசாதுள்ளார்கள்‌. இவ்வாறு எல்லாவற்றுக்கும்‌ தலையாட்டிக்‌ கொண்டு இருக்கின்ற நிலையில்‌ நாங்கள்‌ ஏழு பேரும்‌ இல்லாது போனால்‌ முஸ்லிம்களின்‌ ‘கப்பு’ எப்போதோ கிழிந்‌திருக்கும்‌ என்று சொல்லிக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. முஸ்லிம்களின்‌ ‘கப்பு’ கிழிந்து நீண்ட காலமாகிவிட்டது. முஸ்‌லிம்களின்‌ ‘கப்பு’ கிழிவதற்கு காரணமாக இருந்தவர்கள்‌ வீராப்பு பேசிக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌.

முஸ்லிம்‌ கட்சிகள்‌ கடந்த காலங்களில்‌ ஆளுந்‌ தரப்பினராக இருந்து கொண்டு முஸ்லிம்‌ விரோத செயற்பாடுகளை பார்த்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஆளுந் தரப்பில்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ இருந்து கொண்டு முஸ்லிம்‌ விரோத செயற்பாடுகளை அங்கிகரித்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. தலைவர்கள்‌ எதிர்க்‌ கட்சியில்‌ இருந்து கொண்டு முஸ்லிம்‌களின்‌ அபிலாஷைகளை உள்ளடக்காத ஆவணத்தை தயார்‌ செய்து ஒப்பமிட்டுக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. மொத்தத்தில்‌ தங்களின்‌ சுயதேவைக்காக முஸ்லிம்‌ கட்‌சிகளின்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ செயற்பட்டுக்‌ கொண்டிருக்கின்றனர்‌.

முஸ்லிம்‌ கட்சிகளினதும்‌, பாராளுமன்ற உறுப்பினர்களினதும்‌ இந்த கபடத்தனத்தை புரிந்து கொள்வதற்கு முடியாதவர்களாக முஸ்லிம்கள்‌ உள்ளார்கள்‌. முஸ்‌லிம்கள்‌ பிரதேசவாதங்களினால்‌ பிரிந்து தமது பிரதேசம்‌, அபிவிருத்தி என்று சிந்‌தித்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌. தமது இந்த குறுகிய சிந்தனையால்‌ முஸ்லிம்‌களின்‌ பொது அபிலாஷைகளும்‌, ஒற்றுமையும்‌ சீரழிந்து கொண்டிருப்பதனை நினைத்துக்‌ கூட பார்க்காதுள்ளார்கள்‌.

மேலும்‌, முஸ்லிம்‌ கட்சிகளினதும்‌, பாராளுமன்ற உறுப்பினர்களினதும்‌, அரசாங்கத்தினது முஸ்லிம்‌ சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள்‌ குறித்து முஸ்லிம்‌ புத்திஜீவிகள்‌ எந்தவொரு கருத்துக்களையும்‌ வெளியிடாதுள்ளார்‌கள்‌. குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்‌ கழகத்திலுள்ள முஸ்லிம்‌ பேராசிரியர்கள்‌, விரிவுரையாளர்கள்‌ தமது சமூகம்‌ குறித்து சிந்திக்காதுள்ளார்கள்‌ என்ற கசப்பான உண்மையை முஸ்லிம்கள்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌.

முஸ்லிம்‌ புத்திஜீவிகள்‌, அரசியல்வாதிகள்‌, பாராளுமன்ற உறுப்பினர்கள்‌, அரசியல்‌ கட்சிகள்‌ தங்களை முஸ்லிம்‌களின்‌ பிரதிநிதி என்று அடையாளப்படுத்துகின்றார்கள்‌. ஆனால்‌, சமூகத்திற்காக எதனையும்‌ செய்யாதுள்ளார்கள்‌. முஸ்லிம்களின்‌ அரசியல்‌ பலம்‌ சிதைந்து கொண்டிருப்‌பதனையும்‌, முஸ்லிம்‌ சமூகம்‌ நசுக்கப்‌பட்டுக்‌ கொண்டிருப்பதனையும்‌ கவலையில்லாது பார்த்துக்‌ கொண்டிருக்கின்‌றார்கள்‌. மொத்தத்தில்‌ முஸ்லிம்‌ தலைவர்‌ களினால்‌ கைவிடப்பட்டதொரு சமூகமாகவே முஸ்லிம்கள்‌ உள்ளார்கள்‌.

எம்.எஸ். தீன் (வீரகேசரி 27/12/2021)