ஆட்சியை இராணுவத்திடம் கொடுக்க வேண்டும் – ஞானசார தேரர் (முழுமையான பேட்டி)

நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதுமட்டுமல்ல இராணுவ ஆட்சியென கூவிக்கொண்டு ஜனநாயக கதைகளை கூறி வருவோரை பிடித்து சிறையிலடைக்க வேண்டுமென பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளரும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் கேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அவருடனான செவ்வி முழுமையாக,

கேள்வி: ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள் எவ்வாறான நிலையில் உள்ளது?

பதில்: ஒரு நாட்டுக்குள் சகலருக்கும் ஒரே விதமான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பரிந்துரைகளை முன்வைக்கவும் அதற்கான வரைபையும், அதனை நடை முறைப்படுத்துவதற்கு பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்கவுமே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்திற்கான வரைபை உருவாக்கும் பணிகளையே நாம் முன் னெடுத்துக் கொண்டுள்ளோம்.

கேள்வி: அப்படியென்றால் இப்போது ஒரே நாடாக இலங்கை இல்லையா?

பதில்: ஆரம்பித்தில் நாட்டை இரண்டாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சிகள் 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது ஒரே நாடு தான் இருக்கின்றது. யாரும் எங்கேயும் செல்ல முடியும். எனினும் பிரிவினைவாத, பயங்கரவாத செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் கூட இன்றும் இந்த நாட்டை துண்டாக்கும் வெவ்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளதை நாம் அவதானித்துள்ளோம். சமூகத்தை பிரிவுபடுத்தும் வேலைத் திட்டங்களே இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரே நாடாக எழுவோம் என்று சகலரும் கூறினாலும் யதார்த்தம் அதுவல்ல. எனவே தான் நாட்டில் சகல பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்து தகவல்களை திரட்டி வருகின்றோம். அதன் மூலமாக சிறந்த பிரேரணை ஒன்றினை முன் வைக்க முயற்சிக்கின்றோம். முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கிற்கு எமது பயணத்தை ஆரம்பித்தோம்.

கேள்வி: வடக்கு விஜயத்தின் போது நீங்கள் அவதானித்தவை என்ன?

பதில்: வடக்கைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் படும் வேதனை, அவர்களின் கண்ணீர் கதைகளைக் கண்கூடாக பார்க்க முடிந்தது. அந்த மக்களின் உண்மையான பிரச்சினைகளுடன் துணை நிக்கும் நபர்களை நாம் சந்தித்தோம். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு ஆயரின் சட்டமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நாட்டிற்கு ஒரு சட்டமும் ஆயர்களுக்கு வேறு சட்டமும் இருக்க முடியாது.

மன்னார், வவுனியா மாவட்டங்களில் தமிழர்கள் மதம் மாற்றப்படுகின்றனர். இந்துக்கள் கிறிஸ்த்தவத்திற்கு மாற்றப்படுவதாக அம்மக்கள் வேதனைப்படுகின்றனர். இது குறித்து இந்துத் தலைவர்கள் கவனத்தில் கொள்ளாமை காரணமாக கிறிஸ்தவர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் இந்துக்கள் பாரிய அளவில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே வடக்கில் ஒரே சட்டம் செயற்படவில்லை. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் யுத்தத்திற்கு பின்னரும் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை.

கேள்வி: கிழக்கு விஜயம் எவ்வாறானதாக அமைந்தது?

பதில்: கிழக்கை எடுத்துக்கொண்டால் அங்கும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. காத்தான்குடியை எடுத்துக்கொண் டால் அங்கு வேறு விதமானதொரு சூழலே உள்ளது. மத பயங்கரவாதமே அந்தப் பகுதிகளில் காணப்படுகின்றது.

வஹாப் வாதத்திற்கு எதிரான சகலரும் இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் என்று அடையாளப்படுத்தியுள்ளதுடன் அதற்கு மரணமே தண்டனை என்பதை அவர்களின் மதரஸா பாடப்புத்தகங்களில் கூட உள்ளடக்கியுள்ளனர்.

கடலில் குளிப்பதற்குக்கூட பெண்களுக்கு ஒரு தினமும் ஆண்களுக்கும் வேறு தினமும் என்று மிக இறுக்கமான அரக்கர் யுகத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதிகாரத்தில் உள்ள அடிப்படைவாத குழுக்கள் அங்குள்ள அப்பாவி முஸ்லிம் மக்களை வாழ விடாத நிலைமையை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

Read:  பாடசாலை இஸ்லாம் பாட நூல்களை உடன் மீளப் பெற உத்தரவு

சஹ்ரான் போன்றவர்கள் உருவாக ஜம்இயத்துல் உலமா வெளியிட்ட பர்தாவே காரணமாகும். இவ்வாறே இவர்கள் இளைஞர்களின் மனதை மாற்றுகின்றனர். ஒரு சில சட்டத்தரணிகள் வஹாப் கொள்கையில் இருந்துகொண்டு சட்டத்தை பக்கசார்பாக கையாள்வதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் கூட வஹாப் வாதத்திற்குள் மாறியுள்ளது. இவை ஒட்டுமொத்தமாக மாற்றப்பட வேண்டிய விடயமாகவே நாம் கருதுகின்றோம்

கேள்வி: இந்த முயற்சிகள் நாட்டில் இனக்குழுக்கள் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாதா?

பதில்: ஒரு நாடு என்றால் ஒரே இனமாக மாற வேண்டும், இங்கு சிறுபான்மை இனத்தவர் என்ற வசனம் பயன்படுத்தக் கூடாது. இது எம் அனைவரதும் நாடாகும், இங்கு கலாசாரம் இனம் என்பதையும் தாண்டி நாம் அனைவரும் ஒன்றாக சிங்கள நாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இங்கு தமிழர்கள் வாழலாம், முஸ்லிம்கள் வாழலாம் ஆனால் இது சிங்கள நாடாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் பெண்களுக்கு ஒரே சட்டமே இருக்க முடியும். இன, மத அடிப்படையில் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட சகல சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் அப்போது தான் நாடாக ஒன்றாக முடியும். சிங்கள சட்டமே எம் அனைவரதும் சட்டமாகும்.

கேள்வி: சிங்கள சட்டம் எனும்போது அதுவும் ஒரு சமூகம் சார்ந்த சட்டமாகத் தானே இருக்க முடியும் ?

பதில்: இந்த நாட்டில் முதல் முதலில் அடையாளப்படுத்தப்பட்டது சிங்கள சட்டமேயாகும். அந்தச் சட்டத்திற்குள் தான் தமிழர்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ்ந்தனர். 1700களில் ஒல்லாந்தர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையின் சட்டம் என்னவென கேட்டபோது எமது தேரர்கள் நாட்டின் சட்டம் சிங்கள சட்டம் என்றே கூறினர். வரலாறுகளை மீட்டுப் பார்க்க வேண்டும்.

தற்போது உலகம் நவீனமடைந்துள்ளது. அதற்கமைய ஒரு நாட்டிற்குள் சகலரும் பாதிக்காத வகையில் வாழக் கூடிய சட்டத்தை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர் என்று கூறுகின்றனர். ஆனால் இலங்கையர் என்றால் சகலரும் தியாகம் செய்ய வேண்டும். சிங்களவர்கள் மாத்திரமே தியாகம் செய்ய முடியாது. முஸ்லிம்கள் அதற்கு தயாராக உள்ளனரா? தமிழர்கள் அனைவருமே தயாராக உள்ளனரா? இல்லையே.

ஆகவே இதுவெறும் வார்த்தைகளில் முடிந்துவிடக்கூடாது. கல்வியில், அடிப்படை விடயங்களில் சகலரும் பிரிந்துள்ளனர். இந்த நாட்டில் தமிழர் ஒருவரும் ஜனாதிபதியாக முடியும், இது சிங்கள பௌத்த நாடு என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என்ற மனநிலையுடன் இருந்தால் தமிழர்களாலும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும்.

கேள்வி: ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவத்திற்கு நீங்கள் பொருத்தமானவரென நினைக்கின்றீர்களா? உங்களுக்கு எதிரான விமர்சனங்களை எவ்வாறு கருதுகின்றீர்கள்?

பதில்: நான் நேர்மையானவன், அதேபோல் நான் கூறவேண்டிய விடயங்களை வெளிப்படையாக கூறிவேன். எமக்கு இருக்கும் அழுத்தம் காரணமாக சில நேரங்களில் ஆக்ரோஷமாக செயற்படுவதாக தெரியலாம். நாம் அனைவரும் மனிதர்கள் தானே, எமக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் என்னை விமர்சிக்கின்றனர் என்றால் நான் சரியாக செயற்படுகின்றேன் என்றே அர்த்தப்படுத்த வேண்டும். நாம் சரியானதை பேசுகின்றோம். எமது நோக்கம் நேர்த்தியாக உள்ளது என்பதை தெரிந்துகொண்ட காரணத்தினால் தான் அதனை குழப்பியடிக்க நினைக்கின்றனர். விமர்சனங்களை நாம் கருத்தில் கொள்ளவில்லை. நான் தகுதியான நபரென நினைக்கின்றேன்.

கேள்வி: நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் உங்களுக்கும் உள்ள முரண்பாடு என்ன?

Read:  முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

பதில்: செயலணியில் என்னை நியமித்த வேளையில் இருந்தே அவர் என்னை எதிர்க்கின்றார். முதலில் அவர் யார்? அவர் என்ன தேர்தலில் வெற்றி பெற்று வந்தவரா, இல்லையே. ஜனாதிபதியின் நம்பிக்கையால் அவரை நீதி அமைச்சராக்கியுள்ளார். அதற்கு நாம் எதிர்ப்பை வெளிப்படுத்தவும் இல்லை.

ஆனால் அவரால் எந்தவித நன்மையும் இந்த சமூகத்திற்கு கிடைக்கப்போவதில்லை. அவரும் காலத்தை கடத்தும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்துச் செல்கின்றார். அவருக்கும் எனக்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் உள்ளன. விரைவில் அவற்றை எல்லாம் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகாலம் அவர் அமைச்சராகத்தானே உள்ளார். ஒரு மதரஸாவையேனும் அவர் மூடியுள்ளாரா, இல்லையே. மத ஆக்கிரமிப்புகளை நிறுத்துவதற்காகவே 69 இலட்சம் மக்களின் ஆணை கிடைத்தது. ஆனால் இன்றுவரை எந்தவித மாற்றங்களும் ஏற்பட்டதாக தெரியவில்லை. வெளியில் அழகான வார்த்தைகளில் பேசிக்கொண்டு தம்மைச் சான்றோர்கள் போன்று காட்டிக்கொண்டாலும் மறைமுக மாக கபடத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை. இவர்களின் மதவாத கொள்கையால் இன்றும் தற்கொலை குண்டுதாரர்கள் உள்ளனர், வெளியில் இவர்கள் சாந்த மானவர்கள் போன்று பேசினாலும் இவர்களின் அடிப்படிவாத கொள்கை மாறவில்லை. இவற்றை எம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

கேள்வி: செயலணியின் செயற்பாடுகள் என்னவாக இருந்தாலும் இறுதியாக நீங்கள் நீதி அமைச்சரிடம் தானே செல்ல வேண்டியுள்ளதே?

பதில்: நான் இன்னமும் அவரை சந்திக்கவில்லை. எமது வரைபை நாம் முன்வைப்போம், புதிய அரசியலமைப்பில் அவற்றை உள்ளடக்க கூறுவோம். இந்த ஜனாதிபதியின் கீழ் இவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றால் புதிய ஜனாதிபதி ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வந்தேனும் எமது கொள்கை திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம். இது இன்று நேற்று நாம் கையில் எடுத்த விடயமல்ல. கடந்த 1020 ஆண்டுகளாக நாம் இந்த அநீதிகள் குறித்து பேசிக்கொண்டுள்ளோம்.

மக்களுக்கும் இது நன்றாகத் தெரியும். ஜனதிபதியும் அதே நோக்கத்தில் இருந்தாலும் அவர் நியமித்த அமைச்சரவை அதற்கு இடம் கொடுக்காது நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டுள்ளது. அரசியல்வாதியாக இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி சரியான தீர்மானம் எடுக்கின்றார். ஆனால் நீதி அமைச்சர் போன்றவர்கள் அதற்கு தடையாக உள்ளனர். நீதி அமைச்சரும் அவரை சுற்றியுள்ள நபர்களும் யார் எவர் என்பது எமக்கும் நன்றாக தெரியும். இவர்களுக்கு தைரியம் இருந்தால் எம்முடன் விவாதிக்க வரச் சொல்லுங்கள்.

கேள்வி: நீதி அமைச்சிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தகுதியற்றவர் என்பதா உங்களின் நிலைப்பாடு?

பதில்: நாளையே அலி சப்ரியை நீதி அமைச்சுப்பதவியில் இருந்து நீக்குவதென்றால் அதற்கும் நான் விருப்பத்தை தெரிவிப்பேன். அலி சப்ரி இந்த பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர் நீதி அமைச்சராக இருக்கும் வரை யில் சஹ்ரான் மேற்கொண்ட குற்றத்திற்கு நீதி, நியாயம் கிடைக்கும் என்று நாம் நினைக்கவில்லை. ஏனென்றால் இவர் காலத்தை கடத்திக்கொண்டுள்ளார்.

கேள்வி: செயலணியை நியமித்த வேளையில் அவர் நீதி அமைச்சுப் பதவியை துறக்க தயாராக இருந்த போதும் ஜனாதிபதியின் கோரிக் கைக்கு அமையவே அவர் மீண்டும் நீதி அமைச்சுப்பதவியில் தொடர்கின்றாரே?

பதில்: காற்சட்டை அணிந்து கொண்டு, நியாயமான கொள்கையுடன் செயற்படும் நபர்கள் என்றால் இவர்கள் பதவி விலகியிருக்க வேண்டாமா, யாரும் கூறுவதை கேட்டுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டியதில்லையே. ஊடகங்களுக்கு ஒன்றை கூறிக்கொண்டு மறுபுறம் ஆசையில் அமைச்சுப்பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவர் முற்றுமுழு பொய்யராக மாறிவிட்டார். சொல்வது ஒன்று செய்வது வேறொன்று.

கேள்வி: ஜனாதிபதியிடம் இந்த விடயங்களை ஏன் கூறவில்லை?

Read:  அனைத்து வரிகளையும் நிதி அமைச்சு அறவிடுவது ஏன்? ரணில் கேள்வி 

பதில்: நாம் ஜனாதிபதியை இன்னமும் சந்திக்கவில்லை, கொரோனா நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் முகங்கொடுத்து வருகின்ற நிலையில் இன்னமும் அவரை சந்திக்க முடியவில்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதனையும் செய்யவும் மக்களை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்தி மக்களை எம்பக்கம் திசை திருப்ப முடியாத நிலையொன்றும் உள்ளதால் எம்மால் சரியாக இவற்றை பேச முடியாதுள்ளது. நீதி அமைச்சருக்கு நாட்டின் அரசியலமைப்பை மீறிச் செயற்பட என்ன அதிகாரம் உள்ளது? இது பாரிய பிரச்சினையாகும்.

கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷவின் மீதும் நம்பிக்கை இல்லாது போய்விட்டதா?

பதில்: இல்லை, ஜனாதிபதி சாதாரண அரசியல்வாதிகளை போன்றவர் அல்ல, ‘சேர் பெயில்’ ஆகவில்லை. பொதுத் தேர்தலை நடத்தி புதிய அமைச்சரவையை அவர் நியமிக்கும் வரையில் நாடு முழுமையாக ஜனாதிபதியின் நிருவாகத்தின் கீழே இயங்கிய போது நாட்டில் எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லையே. எப்போது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் இயங்க ஆரம்பித்ததோ அன்றில் இருந்து பிரச்சினைகளும் ஆரம்பமாகிவிட்டது. ஆகவே நாட்டின் இன்றைய பிரச்சினைக்கு யார் காரணம் என்பது இதில் இருந்தே வெளிப்படுகின்றது தானே. ஜனாதிபதிக்கு தூர நோக்கு சிந்தனையொன்று உள்ளது.

இந்த பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு உள்ளது. ஏனையவர்கள் குழப்பியடிகின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமல்ல அரச அதிகாரிகளும் கூட இந்த பிரச்சினைக்கு காரணமாகும்.

கேள்வி: அப்படியென்றால் இந்த பொறிமுறையை உருவாக்க என்ன செய்ய முடியும்;?

பதில்: கூட்டுப்பொறுப்பு மூலமாகவே எம்மால் நாட்டை மீட்டெடுக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை சாதாரண ஒன்றல்ல, எனவே எதிர்காலத்தில் நாம் சகலரும் பல தியாகங்களை செய்ய வேண்டிவரும். புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். கடன்களை நம்பி இனியும் பயணிக்க முடியாது. மாற்று சிந்தனையில் கொள்கையொன்று உருவாக வேண்டும்.

கேள்வி: நீங்கள் கூறும் அந்த மாற்றுக் கொள்கை தான் என்ன?

பதில்: எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்னவென்றால், அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதே எனது பதிலாக இருக்கும்.

கேள்வி: இராணுவமயமாக்கலா? இது ஜனநாயகத்தை பாரிய கேள்விக்கு உட்படுத்துமே?

பதில்: நாட்டின் இந்த நிலைமைக்கு அரசியல்வாதிகள் சகலரும், அதிகாரிகள் சகலரும் பொறுப்புக்கூற வேண்டாமா, இவர்கள் தானே மக்களை பட்டினிக்குள் தள்ளியுள்ளனர். நாட்டை கடனில் தள்ளியுள்ளனர். இதற்கு ஜனாதிபதி காரணமல்ல. இராணுவ ஆட்சியென கூவிக் கொண்டு ஜனநாயக கதை பேசும் சகலரையும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையேல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

கேள்வி: மனித உரிமை மீறல்கள் என்ற கேள்விகள் எழாதா?

பதில்: மனித உரிமை மீறல்கள் என்பதெல்லாம் முற்று முழுதாக பொய்க் கதைகள் மட்டுமேயாகும். மனித உரிமையாளர்களுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி நல்ல பதிலொன்றை கூறி னார் தானே, அவர் கூறியதையே நானும் கூற வேண்டியுள்ளது.

கேள்வி : பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களின் கனவு என்னவானது?

பதில்: வாய்ப்புக்கிடைத்தால் பார்ப்போம் என நினைக்கின்றேன். எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பாராளுமன்ற ஆசனத்தை இலக்குவைத்தே செயற்பட்டேன். இடைநடுவே சில முரண்பாடுகள் காரணமாக அது தடுக்கப்பட்டது. இப்போதும் ஆசனம் கிடைத்தால் செல்வேன், அங்கு சென்று எனது சேவையை முன்னெடுப்பேன். இல்லையேல் இங்கிருந்தே செய்வேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் என்னை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். ஆகவேதான் இவ்வளவு தடைகள் ஏற்பட்டுள்ளதென நினைகின்றேன்.

நேர்காணல் : ஆர்.யசி படப்பிடிப்பு : தினேத் சமல்க – வீரகேசரி 26/12/2021