மோசமான லெபனானின் பாதையில் இலங்கை!

உலகின் மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த நாடுகள் என்கிற பட்டியலில் அண்மையில் போய்ச் சேர்ந்துகொண்ட நாடு லெபனான். அடுத்த நாடு எது என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். சென்ற வருடம் லெபனானில் இருந்தபோது, அப்பொருளாதார நெருக்கடியால் மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாகப் பார்த்தேன். ஆறே மாதங்களில் மத்திய வர்க்கம் (Middle class) என்கிற ஒரு மக்கள்கூட்டம் முற்றாக அழிந்துவிட்டிருந்தது. இவ்வகையான பொருளாதார நெருக்கடிகளின் போது இரண்டு தரப்பு (wealth groups) மட்டுமே மிஞ்சும். ஒன்று பணக்காரர்கள் (rich) மற்றையது ஏழைகள் (poor).

தவிர, இவ்வாறானதொரு அசாதாரண சூழலில் இன்னுமொரு மாற்றமும் நமக்குத் தெரியாமல் நடக்கும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவார்கள் , ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுவார்கள் (Rich will become richer. Poor will become poorer). மத்திய வர்க்கம் (Middle class) என்கிற ஒரு இனம் அதுவாகவே அழிந்துபோய்விடும்.

லெபனானின் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதானமான காரணங்கள் இரண்டு. நிதி நெருக்கடி (Fiscal crisis) மற்றையது அரசியல் இஸ்திரத்தன்மையின்மை. தவிர, உள்ளூர் நாணயத்தின் மதிப்பிழப்பு மற்றும் அமெரிக்க டாலர் புழக்கமின்மை. முதல் மூன்று மாதங்களுக்குள் நடந்த முடிந்த அத்தனையும் மக்களின் கண்களுக்குப் புலப்படாத அழிவுகளாக இருந்தன. சுமார் 5000 தனியார் வியாபாரங்கள் (சிறிய & நடுத்தர) மூடப்பட்டன. ஒரு மில்லியன் பேர் தங்கள் வேலைகளை இழந்தார்கள். பண வீக்கம் 250% ஆல் அதிகரித்தது. மாத வருமானம் மாறாமல் அப்படியே இருக்க, அதன் பெறுமதி பாரியளவில் குறைந்தது. முன்னர் ஒரு நாளுக்கு மூன்று தடவைகள் சாப்பிடுவதற்கு ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்குப் போதுமானதாக இருந்த மாத சம்பளம் இப்போது இரண்டு நேர சாப்பாட்டிற்கே போதுமானதாக இருந்தது. Informal sector கொஞ்சம் உறுதியாக இருந்ததால் (கருப்பு பணம் – USD) குறித்த அத்தியாவசிய இறக்குமதிகள் குறைந்த அளவில் நடந்துகொண்டிருந்தன. மறுபுறம் அரசாங்கம் எவ்வித ‘நல்ல’ ‘அவசர’ முடிவுகளையும் எட்ட முயற்சிக்காமல் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மறுபக்கம், வங்கிகளிலிருக்கும் தங்கள் பணத்தை வெளியே எடுக்க முடியாமல் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டார்கள். மக்கள் பணத்தினை மீள எடுப்பதை வங்கிகள் கட்டுப்படுத்தியது. அதுவும் USD இல் பணம் எடுப்பதை வங்கிகள் முற்றாக நிறுத்திக்கொண்டன. பாவம், வங்கியில் போதுமான அளவு சேமிப்பு இருந்தும் அவற்றை மக்களால் வெளியே எடுக்க முடியவில்லை. பிரச்சினையின் அடிப்படைக் காரணம் தெரியாத மக்கள் வங்கிகளை அடித்து நொருக்கினார்கள்.

மக்கள் எதிர்பார்த்திராத அந்தப் பயங்கரமான நாள் வந்தது. எரிபொருள் விலையைக் கூட்டினால் மட்டுமே தங்கள் sector ஆல் உயிர்வாழ முடியும் என்கிற நிலை வந்தபோது, பெற்றோலியக் கம்பனிகளின் சமாசம் ஒரே நாளில் – இதற்கு முதலும் பல தடவைகள் விலை அதிகரித்ததுண்டு – அத்தனை எரிபொருட்களினதும் விலைகளைக் கூட்டினார்கள். எரிபொருள் விலை அதிகரிப்பு எப்போதும் ஒரு snowball affect ஐ உண்டு பண்ணும். அதன்படி லெபனானின் தலையெழுத்து மாற ஆரம்பித்தது. லெபனானின் அடிப்படை உணவாகிய ரொட்டியின் விலை உயர்ந்தது. பொதுப் போக்குவரத்து, டக்ஸி, மரக்கறி, மருந்து, ஏனைய உணவுப்பொருட்கள் என அனைத்து பொருட்கள்/சேவைகளினதும் விலைகள் உயர்ந்தன. குடி தண்ணீரின் விலை எகிறியது. மின்சாரம் விலை கூடியது. இதனால் வறிய மக்களின் வாழ்க்கை வீதிக்கு வந்தது. வீதியில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குற்றச்செயல்கள் அதிகரித்தன. ‘மத்திய கிழக்கின் குட்டி பாரிஸ்’ என்று அழைக்கப்பட்ட லெபனான், கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வாழ்வதற்குக் கடினமான ஒரு தேசமாக மாறிக்கொண்டிருந்தது.

இரண்டு மாதங்கள் கடந்தன. அப்போதுதான் தேசியச்சிக்கல் உச்சத்தைத் தொட்டது. எரிபொருள் தட்டுப்பாடு லெபனானை முழுவதுமாக முடக்கியது. பணம் இருந்தாலும் எரிபொருள் இல்லை என்கிற நிலை லெபனானில் உண்டாகியபோது மக்கள் வீதியில் நின்றபடி வாய்விட்டு அழ ஆரம்பித்தார்கள். இத்தட்டுப்பாட்டிற்கு அடிப்படைக் காரணம், பெற்றோலிய கம்பனிகளால் இனி ஒருபோதும் வெளிநாடுகளிலிருந்து எருபொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என்கிற நிலை ஏற்பட்டதுதான். காரணம்? அவர்களிடமோ, ஏன் ஒட்டுமொத்த நாட்டிடமோ இறக்குமதிக்குத் தேவையான டாலர்கள் இல்லை. லெபனிய பவுண்ட்களைக் கொடுத்து ஒரு மிட்டாய் இனிப்பைக்கூட வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாது. டாலர் இல்லையென்றால் இறக்குமதியில் தங்கியிருக்கும் ஒரு நாடு உயிர்வாழ முடியாது.

தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் காத்து நின்றன. சிலர் அதிகாலை இரண்டு மணிக்கே தங்கள் வாகனங்களைக் கொண்டுவந்து எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள வரிசையில் விட்டுவிட்டு நாள் பூராவும் காத்திருந்தார்கள். அப்படிக் காத்திருந்தாலும் ஒரு நாளுக்கு ஒரு வாகனத்திற்கு 20 லீட்டர் எருபொருள் மட்டுமே வழங்கப்பட்டன.

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் பல பாரிய பிரச்சினைகளுக்கு வழிகோலியது. அதில் மிக முக்கியமான பிரச்சினை மின்சார விநியோகத் தடை. இரண்டே வாரங்களில் லெபனானின் இரண்டு பாரிய மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று தன்னால் இனி ஒருபோதும் இயங்க முடியாது எனத் தெரிவித்து தன் கதவுகளை மூடியது. அது ஒட்டுமொத்த லெபனானின் மின்சார விநியோகத்தை 40% ஆல் குறைத்தது. மறு பக்கம், தனியார் கம்பனிகளே லெபனான் மின்சார விநியோகத்தின் முதுகெலும்புகளாக இருப்பதால், அவர்களும் தங்கள் மின் உற்பத்தி இயந்திரத்தை நாள் பூராகவும் இயக்க முடியாத நிலையில், விநியோகத்தை இடைநிறுத்தினார்கள், அல்லது குறைத்துக்கொண்டார்கள். ஆக, ஆறு மாதக் கடைசியில் ஒட்டுமொத்த லெபனானும் 14-18 மணிநேர மின் வெட்டை ஐச் சந்திக்கவேண்டியிருந்தது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருளுக்குள் மூழ்கிப்போனார்கள்.

இத்தனைக்குள்ளும் இன்னுமோர் ‘அதிசயமும்’ நடந்தது. பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமான ஒரு நிலையை அடைந்துவிட்டால், அதை மீட்பதற்கான ஒரே வழி, ஐஎம்எஃப் (IMF – உலக நாணய நிதியம்) இன் கால்களில் போய் விழுவதுதான். இப்பெரும் இடரிலிருந்து எழுந்து வர அதைவிட்டால் வேறு வழியே இல்லை. ஆனால் நடந்தது ஆச்சரியம். IMF இடம் போய் கைகளை ஏந்த லெபனான் விரும்பவில்லை. காரணம் ஆட்சியிலிருந்தவர்களின் ஈகோ. (இலங்கை மத்திய வங்கி ஆளுனரின் அண்மைய பேட்டிகள் ஞாபகம் இருக்கிறதா?). இப்படி, கடைசி நம்பிக்கையாக இருந்த ஐஎம்எஃப் உம் லெபனானைக் கை விட்டது.

லெபனானின் பொருளாதாரச் சிக்கல் இன்னமும் தீர்ந்தாய் இல்லை. (ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்ய 10-15 வருடங்கள் தேவை). அங்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாறாக நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. எவ்வித தீர்வையும் லெபனானால் கண்டடைய முடியவில்லை. அவற்றைக் கண்டடைவதற்குரிய அரசியல் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பான எவ்வித முடிவுகளையும் அவர்களால் இதுவரை எட்ட முடியவில்லை. நிலையமை கைமீறிப்போய்விட்டதாக IMF சொல்கிறது. கூடவே, “வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்று” என்று இதை அவர்கள் வர்ணிக்கிறார்கள்.

சரி, இதையெல்லாம் ஏன் இப்போது உசிரைக் கொடுத்து எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குப் புரியாமல் இருக்காது. இவற்றை எழுதிக்கொண்டிருக்கும் போது எப்படி எனக்குள் ஓர் இனம்புரியாத பயம் உளன்றுகொண்டேயிருந்ததோ, அதே உணர்வு இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும் ஏற்பட்டிருக்கும்.

நாம் போய்க்கொண்டிருக்கும் பாதை சரியானதல்ல. நம்மைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

-அமல்ராஜ் பிரான்சிஸ்- விடிவெள்ளி 23/12/21 P4