பொதுமக்கள் மீது தொடர்ந்து சுமையேற்றும் நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு. சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் வெடிப்புச் சம்பவங்களினால் முன்னொரு போதுமில்லாதவாறு பொதுமக்கள் பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்போது எரிபொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டிருப்பது மக்களை கிலிகொள்ள வைத்திருக்கிறது.

ஒரு லீற்றர் பெற்றோல் விலை 20 ரூபாவாலும் மசல் விலை 10 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது அதேசமயம் பெற்றோல் 95 ஒக்டேன்: விலை 23 ரூபாவினால் 207 ரூபாவாக உயர்த்தப்பட்டிருக்கிறது இந்த நேரத்தில் எரிபொருள் விலையை உயர்த்தும் முடிவால் நடுத்தர மற்றும் வறிய மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சர்வதேச எரிபொருள் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து வருவதாக காரணம் கூறப்படுகிறது. இந்த எரிபொருட்களின் விலை உயர்வின் முதல் விளைவு விவசாயிகளுக்கு ஏற்படும். இரண்டாவது தாக்கம் பொருட்களுக்கான போக்குவரத்தில் ஏற்படும். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் நீர்ப்பாசன இயந்திரங்கள் எரிபொருட்களில் இயங்குகின்றன. இதனால்,விவசாயப் பொருட்க ளின் உற்பத்திச் செலவு உயரும். அதனால் அவை அதிக விலையில் நுகர்வோரைச் சென்றடையும்,

ஏறக்குறைய அனைத்து வகையான காய்கறிகளும் பல்வேறு சமையல் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வால் லொறி உரிமையாளர்களும் கட்டணத்தை உயர்த்துவார்களென காய்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் விலையேற்றத்தால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் உடனடியாகவே எழுந்துள்ளது. கட்டணத்தை உயர்த்தாவிட்டால் பொதுப் போக்குவரத்தை நிறுத்தப்போவதாக தனியார் போக்குவரத்துத் துறையினர் எச்சரிக்கக்கூடும்.

அதேவேளை மின் உற்பத்தியில் எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், மின் உற்பத்தித் துறையிலும் தாக்கம் ஏற்படும் . இதன் விளைவாக, இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் அழுத்தத்திற்கு உள்ளாகலாம். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை உயர்வை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்த போதிலும் அக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலையை உயர்த்த அரசாங்கம் அனுமதிக்கவில்லை. நாடு தற்போது கையிருப்பு வீழ்ச்சியுடன் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

Read:  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்

டிசம்பர் தொடக்கத்தில், கையிருப்பு ஒரு மாத இறக்குமதிக்கு மட்டும் போதுமானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. நவம்பரில், டொலர் நெருக்கடி காரணமாக நாட்டின் ஒரேயொரு எரி பொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதற்குப் பதிலாக பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் விருப்பம் தெரிவித்திருந்தது.

சமீபத்தில், நியூயோர்க்கை தளமாகக் கொண்ட பிற்ச் தர நிர்ணய நிறுவனம் இலங்கையின் இறைமை தர மதிப்பீட்டை ‘சிசிசி ‘இலிருந்து ‘சிசி” க்கு தரமிறக்கியது. வெளிநாட்டு பணப்புழக்கத்தின் மோசமான நிலைமையின் அடிப்படையில், எதிர்வரும் மாதங்களில் நிலைமை மோசமடையக் கூடுமெனவும் புதிய வெளிநாட்டு நிதி வளங்கள் இல்லாத நிலையில், 2022 2023 ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன் கடப்பாடுகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும் என்று இந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக பிற்ச் கூறியிருந்தது. அந்நிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதுடன் நவம்பர் இறுதியில் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டிருந்தது. இது தற்போதைய ஒரு மாதத்துக்கும் குறைவான வெளிக் கொடுப்பனவுகளுக்கு சமமானதாகும்.

கையிருப்பு நெருக்கடியை சமாளிப்பதற்காக, இறக்குமதி குறைக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழி வகுத்திருக்கிறது. போக்குவரத்துக் கட்டண உயர்வு, பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தட்டுப்பாடு காரணமாக அண்மைய நாட்களில் நகரப் பகுதிகளில் அரிசி, காய்கறிகள், உருளைக்கிழங்கு. வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்நிலையில் தற்போது எரிபொருள் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், போக்குவரத்துக் கட்டணங்கள் கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் தொற்றுநோயால் வருமானத்தை இழந்த ஏழைகள் மற்றும் நிலையான வருமானம் கொண்ட மக்களுக்கு தாங்க முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

Read:  மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை - ஜனாதிபதி

நாடு தற்போது எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்குத் தீர்வாக நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து எரிபொருளின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நட வடிக்கையினால் பல வழிகளிலும் பாதிக்கப்படும் பொதுமக்களின் துன்பங்களை அரசாங்கம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தினக்குரல் யாழ் – 23/12/21 P 04