பெரும்பான்மையிடம் புஷ்வணமாகிய “கருத்தடை” நாடகம்

புனைகதைகளையும்‌, மிகைப்படுத்தப்பட்ட விடயங்களையும்‌ கூறி மக்களது உணர்வுகளை துண்டி விட்டு, அதிலிருந்து தாம்‌ எதிர்பார்த்த பிரதிபலன்‌ கிடைத்த பிறகு எல்லாவற்றையும்‌ அப்படியே ‘பூச்சியத்தால்‌ பெருக்கிவிடுகின்ற’ அரசியலும்‌, அதனோடிணைந்த இனவாத நகர்வுகளும்‌ இன்னும்‌ இலங்கையில்‌ தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

எல்லா எதிர்விளைவுளும்‌ நடந்து முடிந்த பிறகு பொய்யானவை’ எனத்‌ தெரிய வருகின்றன. மக்களுக்கு செய்த சேவைகளைச்‌ சொல்லி, கொள்கைப்‌ பிரகடனங்களை தெளிவுபடுத்தி, கருத்தியல்‌ ரீதியான மாற்றத்தை செய்ய முடி யாதவர்கள்‌ இவ்வாறான சூட்சுமமான நகர்வுகளைச்‌ செய்து இன, மத உணர்வுகளை உச்சாணிக்‌ கொம்பில்‌ ஏற்றிவிட்டு, தமக்கு வேண்டியவற்றை அடைந்து கொள்கின்ற போக்கு, இலங்கை போன்ற நாடுகளில்‌ வாடிக்கையானதுதான்‌.

சிங்கள சமூகத்தின்‌ இன விருத்தியைத்‌ தடுப்பதற்காக முஸ்லிம்கள்‌ கொத்து ரொட்டி போன்ற உணவுகளில்‌ கருத்தடை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்கின்றார்கள்‌. முஸ்லிம்‌ வைத்தியர்‌ ஒருவர்‌ ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பப்‌ பெண்களுக்கு கருத்தடை செய்திருக்கின்றார்‌. முஸ்லிம்‌ கடைகளில்‌ விற்பனை செய்யப்படும்‌ உள்‌-கீழாடைகளில்‌ கருத்தடையை உண்டாக்கும்‌ மருந்து தடவப்பட்டுள்ளது என பெரும்‌ புரளிகள்‌ கிளப்பி விடப்பட்டன.

இதற்குப்‌ பின்னால்‌ அரசியல்‌ இலாப நோக்கு இருந்தது. அதுதவிர, முஸ்லிம்களின்‌ வர்த்தகத்தையும்‌ பொருளாதாரத்தையும்‌ நசுக்குகின்ற வேலைத்‌ திட்டங்களும்‌ இருந்தன. இதனைச்‌ செய்வதற்கான ஆயுதமாக இனவாதம்‌ கூர்தீட்டப்பட்டது என்பதே யதார்த்தமாகும்‌.

இக்கதைகள்‌ எல்லாம்‌ வெறும்‌ கட்டுக்‌ கதைகள்‌ என்பதை இப்போது சிங்கள மக்கள்‌ தெளிவுற உணர்ந்திருக்கின்றார்கள்‌. ஆனால்‌, இதற்கு வினையூக்கியாக செயற்பட்ட தரப்புக்களால்‌, இதனால்‌ ஏற்பட்ட இன விரிசலை மட்டும்‌ சரிப்படுத்த முடியவில்லை.

அளுத்கமை கலவரத்தை விட திகண கலவரத்தில்‌ பள்ளிவாசல்களின்‌ அளவுக்கு முஸ்லிம்களின்‌ சொத்துக்கள்‌, வர்த்தக நிலையங்களும்‌ இலக்கு வைத்துத்‌ தாக்கப்பட்டன. அதுபோல உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப்‌ பின்னர்‌ வடமேல்‌ மாகாணத்தில்‌ கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளிலும்‌ வியாபார நிலையங்கள்‌ பிரதான இலக்குகளாக இருந்தன.

ஜூலைக்‌ கலவரத்தில்‌ தமிழர்களின்‌ சொத்துக்கள்‌ குறிவைக்கப்பட்டதை இது நினைவுபடுத்தியது.

2078ஆம்‌ ஆண்டு பெப்ரவரியில்‌ அம்பாறை நகரில்‌ உள்ள ஒரு முஸ்லிம்‌ கடையில்‌ சிங்கள வாடிக்கையாளர்‌ ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட கொத்துரொட்டியில்‌ மலட்டுத்‌ தன்மையை அல்லது கருத்தடையை ஏற்படுத்தும்‌ மாத்திரைகள்‌ கலக்கப்பட்டி ருந்தன என்று கூறப்பட்டு. பெரும்‌ வன்முறையே துண்டி விடப்பட்டது.

அந்த உணவில்‌ அவ்வாறு ஏதேனும்‌ கருத்தடை பதார்த்தம்‌ கலக்கப்பட்டிருந்ததா? என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தாமலும்‌, அதன்படி சட்ட நடவடிக்கை எடுக்காமலும்‌ இரவோடிரவாக இனவாதம்‌ தூண்டி விடப்பட்டது.

ஆனால்‌, இவ்வளவும்‌ நடந்து கொண்டிருந்த போது பொலிஸாரும்‌ சட்டமும்‌ வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருந்தன. அன்றேல்‌, எல்லாம்‌ நடந்து முடிந்த பிறகு களத்திற்கு வந்தன. இதற்குப்‌ பின்னால்‌ சிங்கள அரசியல்வாதி ஓரிருவர்‌ இருக்கின்றனர்‌ என்று தகவல்கள்‌ வெளியாகின.

ஆனால்‌, நல்லாட்சி அரசாங்கம்‌ இது விடயத்தில்‌ காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மைச்‌ சமூகங்கள்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டாடிய பிரதமர்‌ ரணில்‌ விக்கிரமசிங்க, ஒலுவிலில்‌ கூட்டத்தை நடாத்தி விட்டு, ஸ்தலத்திற்குச்‌ சென்று பள்ளியை பார்வையிடாது, கொழும்புக்குப்‌ பறந்தார்‌.

முன்னதாக சில சிங்கள ஊட கங்களில்‌ கருத்தடைக்‌ கதைகள்‌ உலாவரத்‌ தொடங்கியிருந்தன. முஸ்லிம்‌ கடைகளில்‌ உணவுகளை வாங்குவதை தவிர்க்குமாறு பொதுபலசேனா, சிங்கஹலே போன்ற கடும்போக்கு அமைப்புக்களும்‌ சிங்கள மக்களிடையே பிரசாரத்தை மேற்கொண்டி ருந்தன.

அம்பாறை ஹோட்டலில்‌ அது கையும்‌ களவுமாக பிடிபட்டது’ என்ற விம்பத்தை ஏற்படுத்த இனவாத தரப்பினர்‌ முயன்றனர்‌. அதனூடாக்‌ உணவு மற்றும்‌ உள்ளாடை ஊடாக முஸ்லிம்கள்‌ சிங்கள மக்களின்‌ இன விருத்தியை குறைக்க முற்படுகின்றார்கள்‌ என்று கற்பித்ததை நம்ப வைப்பதே அவர்களது நோக்காக இருந்தது.

சரி அப்படியென்றாலும்‌, ஹோட்டலில்‌ பிரச்சினை என்றால்‌, பள்ளிவாசல்‌ ஏன்‌ தாக்கப்பட்டது என்ற கேள்விக்கெல்லாம்‌ இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இது விடயத்தில்‌ கணிசமான முஸ்லிம்‌, தமிழ்‌ வைத்தியர்கள்‌ மெளனம்‌ காத்தனர்‌. அரச வைத்திய அதிகாரிகள்‌ சங்கம்‌ இதன்‌ சாத்தியப்பாடு பற்றிய எவ்வித கருத்துக்களையும்‌ முன்வைக்கவில்லை.

அதனையும்‌ தாண்டி, பல சிங்கள வைத்திய நிபுணர்கள்‌ இவ்வாறு உணவில்‌ கலக்கக்‌ கூடிய அல்லது உள்ளாடையில்‌ பூசக்‌ கூடிய கருத்தடை மருந்துகள்‌ இல்லை என்பதை பகிரங்கமாகவே சொன்னார்கள்‌.

இந்த நிலையில்தான்‌ 2019 ஏப்ரல்‌ தாக்குதல்‌ இடம்பெற்றது. இந்த தாக்குதலுக்குப்‌ பின்னால்‌ பெரிய திட்டமும்‌ சூழ்ச்சியும்‌ இருந்தது என்பதை பின்னர்‌ சிங்கள மக்கள்‌ உணர்ந்திருக்கின்றார்கள்‌. ஆனால்‌ ஒரு பயங்கரவாத கும்பலின்‌ செயற்பாட்டுக்காக அப்போது ஒட்டுமொத்தமாக முஸ்லிம்‌ சமூகம்‌ மீதே சுட்டுவிரல்‌ நீட்டப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனவாதிகள்‌ மீண்டும்‌ ஒரு புரளியைக்‌ கிளப்பிவிட்டாரர்கள்‌. அதாவது, குருணாகல்‌ வைத்தியசாலையில்‌ பணிபுரியும்‌ வைத்தியர்‌ ஷாபி, தன்னிடம்‌ சிகிச்சைக்காக வந்த பல நூற்றுக்கணக்கான பெண்களுக்கு கருத்தடை செய்திருக்கின்றார்‌’ என்ற மிக அபத்தமான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கருத்தடை செய்வது என்பது அவ்வளவு சிறிய விடயமல்ல. அது நீண்டநேரம்‌ எடுக்கின்ற ஒரு செயன்முறை. அப்படியிருக்க ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களுக்கும்‌ அவர்களது கணவன்‌ மற்றும்‌ சுகாதார ஊழியர்களுக்கும்‌ தெரியாமல்‌ கருத்தடை செய்வது என்பது கற்பனைக்குக்‌ கூட எட்டாத ஒரு விடயமாகும்‌.

அப்படியான ஒரு அறிகுறி தெரிந்திருந்தால்‌, எப்போதோ இந்த விவகாரம்‌ வெடித்திருக்கும்‌. சம்பந்தப்பட்டோர்‌ வைத்தியரின்‌ சட்டையைப்‌ பிடித்திருப்பர்‌ அல்லது சட்டத்தின்‌ முன்‌ நிறுத்தியிருப்பர்‌.

ஆனால்‌, இக்‌ குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிறகு இவ்விடயத்தை புத்திசாலித்தனமாக சிந்திக்காமல்‌ இனவாத அடிப்படையில்‌ சிந்தித்ததால்‌ சிங்கள மக்களும்‌ ஏன்‌ சில தமிழர்களும்‌ கூட இதனை நம்பினார்கள்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. இந்தப்‌ பின்னணியில்‌ ஷாபி சிறைப்பிடிக்கப்பட்டார்‌.

இந்த தருணத்தில்‌, ஒரு வைத்தியரால்‌ இத்தனை பேருக்கு கருத்தடை செய்ய முடியாது. மருத்துவ ரீதியாக அது சாத்தியமே இல்லை என்பதை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள்‌ சங்கம்‌ முன்வரவில்லை. அதிலிருந்த முஸ்லிம்‌ வைத்தியர்களும்‌ பெரும்‌ வரலாற்று தவறை இழைத்தனர்‌.

ஒரு வைத்தியருக்கு சிறியதோர்‌ அவமானம்‌ நடந்தாலும்‌ பணிப்பகிஷ்கரிப்பில்‌ குதித்கின்ற இச்‌ சங்கம்‌, இது விடயத்தில்‌ வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. அதன்‌ நடவடிக்கைகளில்‌ அரசியல்‌ சாயம்‌ வெளுக்கத்‌ தொடங்கிய காலமாக இதனைக்‌ குறிப்பிடலாம்‌.

அதேபோல்‌, நல்லாட்சி அரசாங்கமோ அதன்‌ பின்னர்‌ வந்த இவ்வரசாங்கமோ இந்த உண்மையை மக்களுக்கு கூறாமல்‌ விட்டதன்‌ மூலம்‌ பெரும்‌ தவறிழைத்தன. சிங்கள மக்களின்‌ உணர்வுகளோடு ஒத்திசைந்து பயணித்து, வாக்குகளைச்‌ சுருட்டிக்‌ கொள்ளவே அவர்கள்‌ கணக்குப்‌ போட்டனர்‌,

குறிப்பிட்ட வைத்தியர்‌ பதவி இடைநிறுத்தப்பட்டு, கைதாகி, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சமகாலத்தில்‌ நூற்றுக்கணக்கான பெண்களின்‌ வாக்குமூலங்கள்‌ பதிவு செய்யப்பட்டதாக பாதுகாப்புத்‌ தரப்பினர்‌ நீதிமன்றுக்கு அறிவித்தனர்‌.

ஆனால்‌ எந்தக்‌ குற்றச்சாட்டுக்களையும்‌ விஞ்ஞான ரீதியாகவோ சட்ட அடிப்படையிலோ இரு வருடங்களாக நிருபிக்க முடியவில்லை. அதுமட்டுமன்றி, கருத்தடை செய்யப்பட்டதாக முறையிட்டி ருந்தவர்கள்‌ பிறகு கர்ப்பம்‌ தரித்தமை, இவர்களை வெட்கித்‌ தலைகுனிய வைத்தது.

இந்நிலையில்‌, இப்போது வைத்தியர்‌ ஷாபியை மீண்டும்‌ சேவைக்கு அழைப்பதற்கும்‌ இடைப்பட்ட காலத்துக்கான சம்பளத்தை வழங்குவதற்கும்‌ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும்‌, முஸ்லிம்கள்‌ கருத்தடை மாத்திரைகளை போட்டு உணவுப்‌ பொருட்களை வழங்குகின்றனர்‌ என்றும்‌, உள்ளாடைகளில்‌ மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்‌ பதார்த்தங்களை தடவுகின்றனர்‌ என்றும்‌, டாக்டர்‌ ஷாபி ஏகப்பட்டோருக்கு கருத்தடை செய்தார்‌ என்றும்‌ கூறப்பட்ட பொய்யான கட்டுக்‌ கதைகளும்‌ ஊடகப்‌ பிரசாரங்களும்‌ தலைகுப்புற விழுந்து மண்கவ்வியுள்ளன.

மொஹமட் பாதுஷா (புஷ்வணமான கருத்தடை கதைகள் – தமிழ் மிற்றோர் 21/12/2021)