சொந்த வீடு வாங்க நடுத்தர வருமானம் பெறுவோர்  வாய்ப்பு – அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய செயற்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு, அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறாக வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கடந்த மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஆரம்ப மூலதனத்தைத் திரட்டிக்கொள்வதற்கான 5 வருடகாலத்திற்கு செல்லுபடியாகக்கூடியவாறாக 25 பில்லியன் ரூபா நிதியைக் கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கோரியிருந்தது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிதியின் ஊடாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் நடுத்தர வருமானம் பெறுபவர்கள் கொள்வனவு செய்யக்கூடிய விலையில் விற்கப்படும் அதேவேளை, அதன்மூலம் பெறப்படும் வருமானத்தின் ஊடாக இந்தத் திட்டத்திற்காகக் கடனாகப் பெறப்பட்ட மூலதனம் மீளச்செலுத்தப்படும்.

அதேவேளை இந்த செயற்திட்டத்தின் கீழ் வீடுகளை வாங்குவதற்கு முன்வரும் நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்களுக்கு அரசவங்கிகளின் ஊடாக 25 – 30 வருட மீளச்செலுத்தும் காலத்திற்கு குறைந்த வட்டிவீதத்தில் வீட்டுக்கடனைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Read:  மீண்டும் ரணில் !!
SOURCEவீரகேசரி பத்திரிகை (நா.தனுஜா)