அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவருக்கும் இரு வார கால அவகாசம்

பட்ஜெட்டை ஆதரித்த 3 எம்.பி.க்களுக்கும் விளக்கமளிக்க இருவார காலம் அவகாசம் அ.இ. ம. கா. தலைவர் ரிஷாத் அறிவிப்பு

கற்பிட்டி, முந்தல், புத்தளம் நிருபர்கள் கட்சித் தலைமையின் முடிவை மீறி வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவருக்கும் விளக்கமளிக்க இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

புத்தளம், கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்கு விஜயமென்றை மேற்கொண்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடம் கூடி முடிவெடுத்தது.இந்த முடிவு கட்சியின் எனக்கும் ஏனைய மற்றைய மூன்று எம்.பி.க்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. எனினும், எமது கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்களான இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன், அலிசப்ரி ரஹீம் ஆகிய மூவரும் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இவ்வாறு கட்சியின் உயர்பீடம் எடுத்த தீர்மானங்களையும் யாப்பையும் மீறி பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமையால் குறித்த மூன்று எம்.பி.க்களும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் விளக்கமளிக்குமாறு இருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் எமது கட்சியின் யாப்பின் பிரதி ஒன்றையும் கேட்டனர். அதன்படி, எமது கட்சியின் யாப்பின் பிரதி ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தினக்குரல் 19/12/21 pg-10

Read:  அரசாங்கத்துக்கு முஜிபூர் எம்.பி சவால்