இறக்குமதிகளை கட்டுப்படுத்த வேண்டி வரும் – பசில் ராஜபக்ஷ

நாட்டில் தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்  என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் எரிபொருள், மருந்து பொருட்கள், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான தேவைகளை இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என திங்கட்கிழமை (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்ததாக தெரியவருகிறது. 

டொலர் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந் நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறிய அவர்  இந்தியா அரசாங்கத்துடனான தனது பேச்சுவார்த்தை வெற்றி அடைந்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்திதுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ வெளி நாடு சென்றுள்ள நிலையில், நாட்டில் நீண்ட காலமாக நிலவும் டொலர் தட்டுப்பாடு குறித்து கலந்துரையாடப்படுவதற்க்காக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் அலறி மாளிகையில் இடம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் இந்த சந்திப்பின் போது பல அமைச்சர்கள் டொலர் பற்றாக்குறையை தீர்க்க தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா, இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-வீரகேசரி- (2021-12-14)

Read:  எரிபொருள் நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?