முஸ்லிம்களின் நிலைப்பாட்டையே தலைவர்கள் முன்வைக்க வேண்டும்

சமூகத்தின் தலைவர்கள், அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை, இரண்டு விதங்களில் முன்கொண்டு செல்ல முடியும். முதலாவது, மக்களின் கருத்தறிந்து அதன்படி, நிலைப்பாடுகளையும் தீர்மானங்களையும் எடுத்தல். இரண்டாவது, எடுக்கின்ற தீர்மானங்களை மக்களுக்குத்‌ தெளிவுபடுத்தி, அதற்கான ஒப்புதலைப்‌ பெறுவதாகும்‌.

தமிழர்‌ அரசியலில்‌, இந்தப்‌ போக்கை பெருமளவுக்குக்‌ காணலாம்‌. ஆனால்‌, முஸ்லிம்களுக்கான அரசியலில்‌ மட்டும்‌, இந்த அடிப்படைப்‌ பண்பியல்பை காணக்‌ கிடைப்பதில்லை.

முஸ்லிம்‌ சமூகத்தின்‌ பிரச்சினைகள்‌, அபிலாஷைகளை முன்னிறுத்தி, அரசியல்‌ தலைவர்கள்‌, நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ தீர்மானங்களை எடுப்பதும்‌ இல்லை; அரசியல்‌ நகர்வுகளைச்‌ செய்வதும்‌ இல்லை. அதேபோல்‌, தாம்‌ எடுக்கின்ற முடிவுகளின்‌ பின்னாலுள்ள நியாயங்களை, மக்களுக்குத்‌ தெளிவுபடுத்துவதும்‌ கிடையாது.

இதற்குப்‌ பல காரணங்கள்‌ உள்ளன.

ஒன்று, அரசியல்‌ தலைவர்கள்‌, தங்களைப்‌ பெரும்‌ மேதைகள்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருக்கின்றமை.

இரண்டாவது, மக்கள்‌ முட்டாள்கள்‌, அவர்களைப்‌ பேய்க்காட்டலாம்‌ என்ற நம்பிக்கை.

மூன்றாவது, தாம்‌ ஏமாற்றப்படுவதற்கு எதிராக, முஸ்லிம்‌ மக்கள்‌ கிளர்ந்தெழாமை,

இவற்றின்‌ காரணமாக முஸ்லிம்‌ சமூகத்தின்‌ நிலைப்பாடுகளைப்‌ பற்றி அலட்டிக்‌ கொள்ளாமல்‌, தான்தோன்றித்தனமான அரசியல்‌ முடிவுகளை எடுக்கின்ற போக்கு, நாள்பட்ட நோயைப்‌ போல, முஸ்லிம்‌ அரசியலில்‌ பரவியிருக்கக்‌ காண்கின்றோம்‌.

சமாதானப்‌ பேச்சுவார்த்தைகள்‌ தொடக்கம்‌, கடந்த வாரம்‌ நிறைவேற்றப்பட்ட வரவு- செலவுத்‌ திட்டம்‌ வரையில்‌, முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ உள்ளடங்கலாக ஏனைய எல்லாக்‌ ‘காங்கிரஸ்களும்‌ எடுத்த முடிவுகளால்‌ சமூகத்துக்குக்‌ கிடைத்த நன்மை என்ன என்ற கேள்விக்கு, அவர்களிடமே விடையில்லை.

ஆனால்‌, புத்திபேதலித்தவன்‌ போன்று மற்றவர்களைப்‌ பற்றிக்‌ கவலைப்படாதவன்‌ வீதியில்‌ விரும்பியவாறு நடந்து கொள்வதைப்‌ போல, முஸ்லிம்‌ அரசியல்வாதிகளும்‌ தமது சொந்த விருப்பு வெறுப்பின்‌ அடிப்படையிலேயே செயற்படுகின்றனர்‌.

சமூகத்தின்‌ நலன்சார்ந்து முடிவெடுக்காமல்‌, தனது முடிவை சமூகத்தின்‌ மீது வலுக்கட்டாயமாகத்‌ திணிக்க முனைவது இன்னும்‌ தொடர்கின்றது. இந்த வரிசையில்‌, இன்னுமோர்‌ அரசியல்‌ நகர்வு நடப்பதான உணர்வு அண்மைக்காலமாக மேலெழத்‌ தொடங்கியுள்ளது.

தமிழ்க்‌ கட்சிகள்‌ சிலவற்றுடன்‌ இணைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸூம்‌, அர்த்தமுள்ள அதிகாரப்‌ பகிர்வை இலங்கை அரசாங்கம்‌ வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசை வலியுறுத்தத்‌ தீர்மானித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Read:  ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

தமிழ்‌ மக்கள்‌, அதிகாரப்‌ பகிர்வைக்‌ கேட்டு நீண்டகாலமாகவே போராடி வருகின்றார்கள்‌. அதன்‌ ஆழ அகலங்கள்‌, அதிலுள்ள சூட்சுமங்கள்‌ எல்லாவற்றையும்‌, அந்த மக்களுக்கு தமிழ்த்‌ தேசிய அரசியல்வாதிகள்‌ போதுமானளவுக்குத்‌ தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்‌.

மறுபுறத்தில்‌, முஸ்லிம்‌ மக்கள்‌ ஒருக்காலும்‌ தனிநாடு கேட்கவும்‌ இல்லை; தனியே தமக்கு அதிகாரம்‌ பகிரப்பட வேண்டும்‌ என்று கோரவும்‌ இல்லை. அதிகாரப்‌ பகிர்வு பற்றியும்‌ அதிகாரப்‌ பரவலாக்கம்‌ பற்றியும்‌ சுயநிர்ணயத்தின்‌ தாற்பரியங்கள்‌ பற்றியும்‌ 99 சதவீதமான முஸ்லிம்‌ அரசியவல்வாதிகளுக்கே இன்னும்‌ தெரியாது என்பதே நிஜமாகும்‌.

ஆனால்‌, தமிழர்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்படும்‌ போது, அதில்‌ ஒர்‌ உபதீர்வு முஸ்லிம்களுக்கும்‌ கிடைக்க வேண்டும்‌. அத்துடன்‌, வடக்கும்‌ கிழக்கும்‌ எவ்விதத்திலும்‌ இணைக்கப்படக்‌ கூடாது என்பதே, இங்கு வாழும்‌ முஸ்லிம்களின்‌ பொதுவான நிலைப்பாடாகும்‌.

அதாவது, நீண்டகாலமாகப்‌ போராடி வருகின்ற தமிழ்‌ மக்களுக்கு, ஒரு நிரந்தரத்‌ தீர்வு வழங்கப்பட வேண்டும்‌ என்றே முஸ்லிம்கள்‌ விரும்புகின்றனர்‌. இருப்பினும்‌, சமஷ்டியோ அல்லது அதிகாரமோ அவர்களுக்கு வழங்கப்படும்‌ போது, அது எவ்வகையிலும்‌ முஸ்லிம்களின்‌ நலன்களையும்‌ சுதந்திரத்தையும்‌ பாதிக்காதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌ என்பதே இதன்‌ அர்த்தமாகும்‌.

ஆனால்‌, இன்று இந்தியாவிடம்‌ கோரிக்கை விடுக்க நினைக்கும்‌ பிரதான முஸ்லிம்‌ கட்சித்‌ தலைவரான ரவூப்‌ ஹக்கீம்‌, இந்த விடயத்தை இலங்கையிலுள்ள தமிழ்த்‌ தேசிய தலைமைகளிடம்‌ தெட்டத்‌ தெளிவாக, நேரிடையாக எடுத்துரைத்ததாகத்‌ தெரியவில்லை.

அவர்‌ மட்டுமல்ல, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச்‌ சேர்ந்த எம்‌. பிக்களும்‌ இதனை ஒருமித்த குரலில்‌ வலியுறுத்தவில்லை. முஸ்லிம்களின்‌ அபிலாஷைகள்‌ என்னவென்பதை வெளித்தரப்புகளிடம்‌ கூறத்‌ தேவையில்லை. அதை அரசாங்கத்திடமும்‌ ஏனைய சமூகங்களின்‌ பிரதிநிதிகளிடமும்‌ தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்‌. ஆனால்‌, இதில்‌ எல்லோரும்‌ கூட்டத்தோடு தவறிழைத்து விட்டனர்‌,

சில வாரங்களுக்கு முன்னர்‌, யாழ்ப்பாணத்தில்‌ தமிழ்க்‌ கட்சிகள்‌ சந்திப்பொன்றை நடத்தியிருந்தன. இதில்‌ தமிழரசுக்‌ கட்சி கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ கலந்து கொண்டது. அக்கூட்டத்தில்‌ சில தீர்மானங்கள்‌ எடுக்கப்பட்டன.

Read:  முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

இந்த யாழ்‌. சந்திப்பில்‌, முஸ்லிம்‌ காங்கிரஸின்‌ தலைவர்‌ முஸ்லிம்களின்‌ நிலைப்பாடுகளைச்‌ சரியாக பிரதிவிம்பப்படுத்தினாரா என்ற சந்தேகம்‌ எழுந்தது. ஏனெனில்‌, “ஹக்கீம்‌ இந்தக்‌ கூட்டத்தில்‌ கலந்து கொள்கின்றார்‌ என்றால்‌, அவர்‌ வடக்கு-கிழக்கு இணைப்புக்கு சம்மதம்‌ தெரிவிப்பாரா” என்ற கேள்வியை, தமிழ்‌ அரசியல்வாதி ஒருவர்‌ முன்வைத்திருந்தார்‌.

இந்த நிலையிலேயே, தமிழ்க்‌ கட்சிகளுடன்‌ முஸ்லிம்‌ காங்கிரஸூம்‌ இணைந்து அதிகாரப்‌ பகிர்வை வலியுறுத்தப்‌ போவதாகத்‌ தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்‌-முஸ்லிம்‌ உறவு என்பது, மிகவும்‌ முக்கியமானது. இரண்டு சிறுபான்மை இனங்களும்‌ துருவப்படுவதானது பெருந்தேசிய சக்திகளுக்கும்‌, பிரித்தாளுவோருக்கும்‌ சாதகமாகப்‌ போய்விடும்‌ என்பது வரலாறு. அத்துடன்‌, அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்காக தமிழ்‌ அரசியல்வாதிகள்‌ குரல்‌ கொடுத்துவருகின்ற பின்னணியில்‌, அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்காக முஸ்லிம்களும்‌ கைகோர்ப்பது சிறப்பாகும்‌.

அந்தவகையில்‌, ஏனைய அரசியல்‌ தலைவர்களை விட, அதிகமாக தமிழ்‌ தேசியத்துடன்‌ உறவு கொண்டாடுவதற்காக முஸ்லிம்‌ காங்கிரஸின்‌ தலைவரை பாராட்டலாம்‌. ஆனால்‌, எது எப்படியாயினும்‌ ஒரு விடயத்தில்‌ கவனமாக இருக்க வேண்டும்‌.

அதாவது, தமிழ்‌ அரசியல்வாதிகள்‌ ஏனைய சமக அரசியல்வாதிகளோடு எவ்வளவு நெருக்கமாகப்‌ பழகினாலும்‌, தமது சமூகத்துக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டால்‌, யார்‌ என்றும்‌ பார்க்காமல்‌ அதனை எதிர்ப்பார்கள்‌. சொல்ல வேண்டிய இடத்தில்‌ தமது சமூகத்தின்‌ நிலைப்பாட்டை சொல்லி விட்டுத்தான்‌ வெளியேறுவார்கள்‌. அதுதான்‌ தார்மிகமும்‌ ஆகும்‌.

இந்தப்‌ பண்பை, முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ தலைவர்‌ ரவூப்‌ ஹக்கீம்‌ உள்ளடங்கலாக மக்கள்‌ காங்கிரஸ்‌, தேசிய காங்கிரஸ்‌ போன்ற கட்சிகளின்‌ தலைவர்கள்‌, முஸ்லிம்‌ எம்‌. பிக்களும்‌ கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.

சகோதர சமூகங்களுடனான நல்லுறவு மிக அவசியமானது. ஆனால்‌, தாம்‌ எந்த சமூகத்தின்‌ அரசியல்‌ தலைவர்‌, பிரதிநிதி என்பதை எந்த இடத்திலும்‌ மறந்து விடக்‌ கூடாது. நாம்‌ கட்டணம்‌ செலுத்தி நியமித்த ஒரு சட்டத்தரணி, மறுதரப்பின்‌ குரலாக இருப்பதை யாரும்‌ ஏற்றுக்‌ கொள்ள மாட்டார்கள்‌

Read:  முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

வடக்கு, கிழக்கில்‌ வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு நீண்டகாலப்‌ பிரச்சினைகள்‌ உள்ளன. முஸ்லிம்கள்‌ மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள்‌, காணிப்‌ பிரச்சினைகள்‌, யுத்தத்தால்‌ ஏற்பட்ட இழப்புகள்‌, இனப்பிரச்சினைக்கான தீர்வில்‌ அவர்களது வகிபாகம்‌ எனப்‌ பல விடயங்கள்‌ உள்ளன. தென்னிலங்கை, மலையக முஸ்லிம்களின்‌ பிரச்சினைகள்‌ சற்று வேறுவிதமானவை.

எனவே, முஸ்லிம்‌ சமூகம்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டாடுகின்ற தலைவர்களும்‌ மக்கள்‌ பிரதிநிதிகளும்‌, தமது முதன்மைத்‌ தெரிவு முஸ்லிம்‌ சமூகம்‌ என்ற அடிப்படையில்‌, இப்பிரச்சினைகளைப்‌ பேச வேண்டிய இடத்தில்‌ பேசியே ஆக வேண்டும்‌.

அரசாங்கத்துடன்‌ பேசினாலும்‌, பெருந்தேசியக்‌ கட்சிகளுடனும்‌ பேசினாலும்‌ தமிழ்க்‌ கட்சிகளுடன்‌ கலந்துரையாடினாலும்‌, அங்கு பேசப்படுகின்ற விடயதானம்‌ தொடர்பில்‌ முஸ்லிம்‌ சமூகத்தின்‌ நிலைப்பாடு என்ன என்பதை மிகத்‌ தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்‌.

அப்படியென்றால்‌, குறிப்பிட்ட ஒரு விடயம்‌ தொடர்பில்‌ எவ்வாறான கருத்தைக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌ என்பதை தலைவர்களும்‌ எம்‌. பிக்களும்‌ முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும்‌. அதனை உரிய சந்திப்பில்‌ நேர்மையான முறையில்‌ முன்வைப்பது, முஸ்லிம்‌ பிரதிநிதிகளின்‌ அடிப்படைக்‌ கடமையாகும்‌.

யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ தமிழ்க்‌ கட்சிகளுடன்‌ ஒரு சந்திப்பு நடக்கின்றது என்றால்‌, அதில்‌ முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ மட்டுமன்றி, ஏனைய முஸ்லிம்‌ கட்சிகளும்‌ பங்கேற்க முன்வர வேண்டும்‌.

அங்கு முஸ்லிம்‌ சமூகத்துடன்‌ தொடர்புபட்ட விடயங்கள்‌ குறிப்பாக வடக்கு, கிழக்கு இணைப்பு, இனப்‌ பிரச்சினைக்கான தீர்வுத்‌ திட்டம்‌, காணி விவகாரங்கள்‌ பேசப்படுமாக இருந்தால்‌, அந்த இடத்தில்‌ முஸ்லிம்களின்‌ குரலாக முஸ்லிம்‌ தலைவர்கள்‌ ஒலிக்க வேண்டும்‌.

இது, முஸ்லிம்‌ தலைவர்கள்‌, எம்‌. பிக்களிடம்‌ சமூகம்‌ முன்வைக்கின்ற கோரிக்கை அல்ல. இது, அவர்கள்‌ ஏற்றுக்‌ கொண்ட கதாபாத்திரத்துக்கும்‌ அதனூடாக அனுபவிக்கின்ற வரப்பிரசாதங்களுக்குமான பிரதான கடமை என்பதை, கனவிலும்‌ நினைவிருக்கட்டும்‌.

மொஹமட் பாதுஷா – Tamil Mirror 14-12-2021