சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வில்கமுவ, பிதுருவெல்ல, தேவகிரிய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குண்டசாலை பகுதியில் உள்ள பெண்ணின் வாடகை வீட்டில் டிசம்பர் 1 ஆம் திகதி காலை அவர் உணவு சமைத்துக்கொண்டிருந்த போது எரிவாயு தொடர்பான வெடிப்பு ஏற்பட்டது.

இதனால் தீக் காயங்களுக்கு உள்ளான அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையிலேயே வெள்ளிக்கிழமை (10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

-வீரகேசரி- (2021-12-13)