பேராசிரியர்‌ கலாநிதி S.M.M மஸாஹீருக்கு பாராட்டும்‌ கெளரவமும்‌

அக்குறணை கல்வி மேம்பாட்டுக்கான ஐக்கிய அமைப்பினர்‌ ஏற்பாடு

அக்குறணைகல்வி மேம்பாட்டுக்கான ஐக்கிய அமைப்பினரின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எஸ். எம். எம். மஸாஹிர் நளிமிக்கு பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டதைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நாளை (05-12-2021) ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணிக்கு அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ. எல்.அன்வர் தலைமையில் இடம்பெறும்.

ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எப். எம். பாஸில் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். எம் நாஜிம், விசேட பேச்சாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, வாழ்த்துரையினை முன்னாள் அக்குறணை முஸ்லிம் பாலிகா கல்லூரி அதிபர் ரிஹானா செய்ன், முன்னாள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். எச். எம். சபீக், பேருவளை ஜாமியா நளிமியா கலாபீடத்தின் பகுதி நேர விரிவுரையாளர் உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர், அக்குறணை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எம். எப். எம். அஸ்மி, அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம். ஏ. எம். சியாம் (யூசுபி) ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

நிகழ்ச்சித் தொகுப்பினை பெரோஸ் மஹ்ரூப்மும் ஏற்புரையினை தென்கிழக்குப் பல்கலைக் கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். எம். எம். மஸாஹிரும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் எம். ஜே. எம். பைசல் நன்றியுரையினையும் நிகழ்த்துவர்.

விழாவில் விசேட அம்சமாக வரவேற்பு கீதம், வாழ்க்கை வரலாறு தொடர்பான காணொளி காட்சிப்படுத்தல், மலர் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பேராசிரியர் எஸ்.எம். எம். மஸாஹிர் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற வகையில் பேராசிரியர் எஸ். எம். எம். மஸாஹிர் அறிவுப்புலமையும் ஆளுமையும் அமைதியும் அடக்கமும் தன்னகத்தே கொண்டவர் என்பதை கல்வி உலகம் நன்கறியும். இது வெறும் புகழ்ச்சியல்ல.

பேராசிரியர் பதவித் தகைமை பெற்றுக் கொள்வது என்பது சாதாரண விடயமல்ல. கல்வித் தகைமைகளில் அதி உச்ச பதவி பேராசிரியர் பதவியாகும். நமது அக்குறணை மண்ணுக்கு கல்வித் துறையின் பால் பன்முக மேதா விலாசத்தைப் பெற்றுக் கொடுத்த உன்னதமான பேராசிரியர் மஸாஹிரை பாராட்டி கௌரவிப்பதில் ஊர் சமூகம் பெருமிதம் கொள்கின்றது.

Read:  விசாரணை அறிக்கையை வெளியிட்டால் சூத்திரதாரி யார் என தெரிந்துகொள்ளலாம் - ஹலீம் MP

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபுமொழிப் பீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றிவரும் கலாநிதி எஸ். எம்.எம். மஸாஹிர் இஸ்லாமிய கலாசாரப் பேராசி யராவார். 13/12/2019 முதல் பதவி உயர்வு பெற்றார். குறித்த துறையில் பேராசிரியரான முதல் இலங்கைப் பிரஜையுமாவார். அத்துடன் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் முதலாவது பேராசிரியர் மற்றும் ஜாமிஆ நளீமிய்யா பட்டதாரிகளுள் முதலாவது பேராசிரியர் என்ற மகுடத்தையும் பெற்றுள்ளார்.

கண்டி அக்குறணையில் 1967 மேமாதம் 09 ஆம் திகதி பிறந்த இவர்,மர்ஹும்களான செய்யத் முஹம்மத், ஸபா உம்மா தம்பதியினரின் பத்துப் பிள்ளைகளுள் நான்காவது புதல்வராவார். இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணிய ஒரு சாதாரண வியாபாரியான இவரது தந்தை, தனது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் கொண்டிருந்த அதீத ஆர்வமே இலங்கையின் பிரபலமான மார்க்கக் கல்வியகமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் இவர் இணைவதற்கான முக்கிய தூண்டுகோலாக அமைந்தது. மத்திய மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்த இவரது சிறிய தந்தையான மர்ஹும் என்.எம்.எம். இஸ்ஹாகின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இவரது கல்வி வாழ்க்கைக்குத் துணை நின்றன.

1997இல் பாதிமா நிபாஸா என்பவரைக் கரம்பிடித்த இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரின் மூத்த புதல்வி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். பேராசிரியர் மஸாஹிர் அக்குறணை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலத்தில் (அப்போது அது ஒரு கலவன் பாடசாலை) தனது ஆரம்பக் கல்வியைக் (தரம் 15வரை) கற்ற இவர், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தார். அத்துடன் தனது இரண்டாம் நிலைக் கல்வியை (தரம் 6-10 வரை) அக்குறணை அஸ்ஹர்கல்லூரியில் கற்ற இவர், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றார். 1984 ஆம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி, அங்கு கற்பதற்குத் தெரிவானார்.

இலங்கையின் பிரபல இஸ்லாமிய அறிஞர்களான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, உஸ்தாத், எம்.ஏ.எம். மன்ஸுர், அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத், அஷ்ஷெய்க் சீ. ஐயூப் அலி, மர்ஹூம் அஷ்ஷெய்க் கைருல் பஷர் போன்றோரின் வழிகாட்டல்களின் கீழ் பண்பாடும், அறிவும், ஒழுக்கமும் நிறைந்த ஆன்மீகச் சூழலில் சுமார் ஏழு வருடங்கள் (1984 1991) இக்கலாசாலையில் கல்வியைத் தொடர்ந்தார்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

இவர் நளீமிய்யாவில் படித்த காலப்பகுதி இவரது வாழ்வில் பல்வேறு திருப்பு முனைகளை ஏற்பட்டது இக்காலப் பகுதியிலேயே இவர் க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றியதோடு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட கலைமாணிப் பரீட்சைக்கு வெளிவாரி மாணவராகத் தோற்றி, இரண்டாம் தர உயர்தரத்தில் (Second Class Upper Division) சித்தியெய்தினார். இதுவே இவரது பல்கலைக்கழக வாழ்வுக்கு அடியெடுப்பாக அமைந்தது.

இக்கால கட்டத்தில் நளீமிய்யாவின் அதிபராகப் பணியாற்றிய பங்களாதேசை சேர்ந்த ஷஹீதுல்லாஹ் கௌஸர், அதிபராக இருந்த மர்ஹும் மௌலவி புகாரி (புத்தளம்) உப ஆகியோர் இவரது கல்வி வளர்ச்சியில் காத்திரமாகப் பங்களித்தோராவர். ஜாமி ஆ நளீமிய்யாவின் இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில் (Lecturer [Probationary]) சித்தியடைந்து, அக்கலாசாலையில் சுமார் நான்கு வருடங்கள் (1991-1995) உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர்,மாணவர்களின் பல்துறைசார் ஆளுமை விருத்தியில் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பின் அயராத முயற்சியினால் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக விரிவரையாளர்களுள் ஒருவராக 1995ஆம் ஆண்டு இணைந்து கொண்டார்.

1997ஆம் ஆண்டு அறபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதோருக்கு அறபு மொழியைக் கற்பித்தல் தொடர்பாக பட்டப்பின் படிப்பு டிப்ளோமா கற்கையைக் கற்பதற்காக புலமைப் பரிசில் பெற்று சவூதி அரேபியா, ரியாத் நகரில் அமைந்துள்ள மன்னர் சுஊத் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அதில் உயர் பிரிவு, இரண்டாம் நிலையில் (Second Class Upper Division) சித்திபெற்று, நாடு திரும்பினார்.

1998இல் தகுதிகாண் விரிவுரையாளராகத் (Senior Lecturer, Grade II) தெரிவு செய்யப்பட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்திலேயே தொடர்ந்து பணியாற்றினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணிக் கற்கைக்காகப் (PhD) பதிவு செய்து கொண்ட இவர்,மர்ஹும் கலாநிதி காமில் ஆசாத்தின் மேற்பார்வையில் அறபுத் தமிழில் வந்துள்ள அல்குர்ஆன் விரிவுரைகள் தொடர்பாக, சுமார் 700 பக்கங்களைக் கொண்ட ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து, 2006ஆம் ஆண்டு அக் கற்கையைப் பூர்த்தி செய்தார். அதே ஆண்டிலேயே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளர், 2ஆம் தரத்திற்கு (Senior Lecturer, Grade 11) பதவி உயர்த்தப்பட்டார்.

2011ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தனது கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக (Phd) மலேசியா, கோலாலும்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட இவர், இஸ்லாமிய காப்புறுதி (தகாபுல்) தொடர்பாக தனது ஆய்வினை மேற்கொண்டு, 2017ஆம் ஆண்டு அத்துறையில் தனது கலாநிதிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார். தகாபுல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையும் இவரையே சேரும்.

Read:  எரிபொருள் நெருக்கடிகள் விமான சேவைகளை பாதிக்காது

இதற்கிடையில் 2012ஆம் ஆண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இவருக்கு முதுநிலை விரிவுரையாளர், முதலாம் தரமும் (Senior Lecturer, Grade I) கிடைத்தது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் துறையின் தலைவராக இவர் இரு முறை நியமிக்கப்பட்டதோடு, 2014 முதல் இன்று வரை தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபுமொழிப் பீடத்தின் பீடாதிபதியாக அப்பீட உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Interactive Sociall Renaissance Assembly (ISRA), அக்குறணை ஜம் இய்யதுல் உலமா மற்றும் அக்குறணை பைத்துஸ் ஸகாத் போன்ற நிறுவனங்களில் இணைந்து பணியாற்றிய இவர், தற்போது மானிட மறுமலர்ச்சிக்கான சங்கம் Human Renaissance) அக்குரணையில் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான அமைப்பு (Association for Social & Educational Development in Akurana (ASEDA] நீதி மற்றும் மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கம் People’s Movement for Justice and Development [PMJD]) அக்குறணை ஆய்வு நிறுவகம் (ARF), இமிஷ் காத் இஸ்லாமிய ஆய்வு நிறுவனம்,அல் முஃமினாத் பெண்கள் அறபுக் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி, சமூக மேம்பாட்டு நிறுவனங்களில் உறுப்பினராவும் பல்வேறு பதவிகளிலும் சேவையாற்றி வருகின்றார்.

அத்தோடு இவர், சமூகம் வேண்டி நிற்கும் பல்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவுகளையும் கருத்தரங்குகளையும் மேற்கொண்டுள்ளதோடு எழுத்து, ஆய்வுத் துறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றார். இது வரையில் 20இற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள இவர் கணிசமான ஆய்வுக் கட்டுரைகளை தரமான உள்நாட்டு, வெளிநாட்டு சஞ்சிகைகளில் பதிப்பித்துள்ளதோடு, தேசிய, சர்வதேசஆய்வு மாநாடுகளில் அவற்றை சமர்ப்பித்துமுள்ளார்.

தென்கிழக்கு அறப் பீடத்திற்கு புதிய தொரு பரிமாணத்தைக் கொடுத்தவர். எந்த விடயத்திலும் தனித் தன்மையான பார்வையை கொடுக்கும் திறமை இவருக்கு உண்டு. இத்தகைய பன்பமுக ஆளுமை கொண்டவரை அக்குறணை சமூகம் பாராட்டுவதையிட்டு பெருமிதம் அடைகின்றோம். இவரது சேவைகள் மென்மேலும்‌ தொடரவேண்டும்‌ எனவும்‌ அதனூடாக சமூக எழுச்சியும்‌ மேம்பாடூம்‌ ஏற்படவேண்டும்‌ எனவும்‌ வல்ல இறைவனை நாம்‌ பிரார்த்திக்கின்றோம்‌.