அக்குறணை வெள்ள அனர்த்தத்தை தடுக்க செயற் திட்டம்

USAID SCORP அமைப்பின் உதவியோடு அக்குறணை பிரதேச சபை மற்றும் அக்குறணை பிரதேச செயலகம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அக்குறணை நகரில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் செயற்றிட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி அக்குறணை நகரில் ஏற்படும் பீங்கா ஓயா வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற் கான விசேட கலந்துரையாடல் USAID SCORP அமைப்பின் செயற்திட்ட பணிப்பாளர் ட்ரிவிஸ் கார்டினர் மற்றும் அங்கத்தவர்களோடு அக்குறணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்ட அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,..

ஆற்றினுள் வெள்ளப் பெருக்கினால் சேர்ந்திருக்கும் சேறுகளை அப்புறப்படுத்தி ஆற்றின் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் ஊடாக இந்த வெள்ள அனர்த்தத்தை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய இச்செயற்றிட்டம் டிசம்பர் மாதம் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

USAID SCORP அமைப்பின் உதவியோடு அக்குறணை பிரதேச சபை, அக்குறணை பிரதேச செயலகம், அக்குறணை ஜம்மியதுல் உலமா, அக்குறணை வர்த்தக சங்கங்கள் உட்பட சிவில் அமைப்புக்கள் இணைந்த வகையில் இந்த செயற்றிட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

அக்குறணையின் புவியியல் தரைத்தோற்ற அம்சங்கள் குறித்தும் கடந்த அனர்த்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் குறுகிய கால, நீண்ட கால திட்ட வரைபுகளை உருவாக்கி செயற்படுத்த வேண்டி இருக்கிறது. கூடிய விரைவில் செயற்படுத்த எதிர்பார்த்துள்ள இந்த குறுகிய கால திட்டமானது அக்குறணை பிரதேசத்தின் வெள்ளபிரச்சினைக்கு முழுவதுமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்குரிய காத்திரமான அத்திவாரமாக அமையுமென அவர் தெரிவித்தார்.

Read:  இன்றைய வைத்தியர்கள் Today Doctors - Thursday, January 20

இந்த கலந்துரையாடலின் போது அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி குமாரி அபேசிங்க, அக்குறணை ஜமியத்துல் உலமா தலைவர் மௌலவி சியாம். வர்த்தக சங்க செயலாளர் நஸ்லான் உட்பட அங்கத்தவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாவத்தகம தினகரன் நிருபர் (02-12-2021)