அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலையானார் அசாத் சாலி

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவினை இன்று காலை பிறப்பித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை  அண்மித்த நாளொன்றில்,  கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடத்தி மத, இன பேதங்களை  தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) ( ஈ ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-வீரகேசரி-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price