முஸ்லிம்களின் அடுத்த தலைவர் யார்?

ஒரு நாடு என்றாலும் சரி, சமூகம் என்றாலும் சரி, அடுத்தடுத்த அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதனை ‘தலைமைத்துவச் சங்கிலி’ எனலாம். ஆனால், தற்காலத்தில் தமிழர்களின் அரசியலிலும் முஸ்லிம்களின் அரசியலிலும் தலைமைத்துவச் சங்கிலி ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக, முஸ்லிம் அரசியலில் தலைமைத்துவச் சங்கிலி என்ற ஒன்றே. இல்லாமல் போயிருக்கின்றது. முஸ்லிம்களின் அடுத்த தலைவர், யாராக இருக்கப் போகின்றார் என்பது, நம்முன்னுள்ள கேள்வியாகும்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அல்லது, கணிசமான முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்கால தலைவர் யார் என்ற கேள்விக்கே துல்லியமான விடை தெரியாதுள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமைத்துவம் யார் என்பது பற்றிய பிரக்ஞையோ. அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்பதற்கான முனைப்போ முஸ்லிம் சமூகத்திடம் கொஞ்சம்கூட இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலைமை, தமிழ்ச் சமூகத்திலும் இருப்பதாகச் சொல்லலாம். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம். பி. போன்ற மூத்த அரசியல்வாதிகளின் காலத்துக்குப் பிறகு, தமிழ்த் தேசிய அரசியலை யார் தலைமை தாங்கப் போகின்றார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை.

ஆனால், முஸ்லிம் சமூகத்தில்தான் இந்தத் தலைமைத்துவ வெற்றிடம், வெகுவாக உணரப்படுகின்றது. இதுவொரு பாரதூரமான நிலைமையாகும். முஸ்லிம் அரசியல் சூழலில் முதல்நிலை தலைவர்கள், இரண்டாம் நிலை தலைவர்கள். அதற்கடுத்த நிலையில் உள்ளவர்கள் என்று ஒரு தலைமைத்துவச் சங்கிலி உருவாகாமல்

போனதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, தலைவர்களின் பதவி ஆசையாகும். அதாவது, நாம்தான் இந்தக் கட்சியின், சமூகத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்றும், முழு அமைச்சுப் பதவி உள்ளடங்கலாக பிரதானமான வரப்பிரசாதங்கள் தங்களது கஜானாவுக்குள்

வந்து விழ வேண்டும் என்ற எண்ணமாகும். இரண்டாவது, தமக்கு கீழுள்ளவர்கள் மீதான நம்பிக்கை இன்மையாகும். இரண்டாம்நிலைத் தலைவர்களை, தமக்கு அடுத்த தலைவர்களாக முன்மொழிந்தால் அவர்கள் குறுக்குவழியில் தமது தலைமைத்துவ பதவியைப் பறித்து, தம்மையே விஞ்சி விடுவார்கள் என்ற அச்சமாகும்.

மூன்றாவது, முஸ்லிம் சமூகத்தை எதிர்காலத்தில் வழிநடத்தக் கூடியவர்கள் என்று நம்பக்கூடிய அரசியல்வாதிகள் யாரும், முஸ்லிம் அரசியலுக்குள் பிரவேசிக்காமை ஆகும். இளம் அரசியல்வாதிகள் தம்மைப் புடம்போட்டுக் கொள்ளாமல், கிடைப்பதைச் சுருட்டிக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்ற போக்காகும். இதனை வேறு விதமாகவும் கூறலாம். அதாவது, கடந்த கால் நூற்றாண்டாக, முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் தலைமைத்துவப் பண்புகள் அற்றவர்களுக்கே வாக்களித்து, தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்றனர்.

எத்தனையோ சமூக சிந்தனையாளர்கள், அர்ப்பணிப்புமிக்க அரசியல்வாதிகள், அறிவார்ந்த மக்கள் பிரதிநிதிகள் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதற்குப் பதிலாக, தலைவருக்கே ‘ஆப்பு’ சீவும் தளபதிகளும் மோசமான பழக்க வழக்கங்களைக் கொண்ட வியாபாரத்தனமான எம்.பிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்கள். அப்படியென்றால், இருக்கின்றவர்களில் ஒப்பீட்டு தெரிவு அடிப்படையில், ஒருவரைத் தலைவராக முன்னிறுத்த முடியுமே தவிர, இவர்களுக்குள் இருந்து மிகச் சரியான ஒரு தலைவரை இனம் காண முடியாது. இந்தக் குப்பைகளுக்குள் இருந்து, ஒரு குண்டுமணியை கண்டுபிடிப்பது சாத்தியமும் இல்லை.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், நல்லதோர் அரசியல் தலைவராவார். அதற்கு முன்னரும் பல முஸ்லிம் தலைமைகள் இருந்தார்கள். என்றாலும், முஸ்லிம்களை ஒரு தனியினமாக அடையாளப்படுத்தும் அரசியல் சிந்தனையை, துணிச்சலுடன் முன்னகர்த்திய முதலாமவர் அவர் எனலாம். அவர் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு நேசித்தார் என்பதையும், அவரது தலைமைத்துவப் பண்புகள் எந்தளவுக்கு மக்களைக் கவர்ந்திழுந்தன என்பதையும் நாமறிவோம். ஆனால், அவர்கூட தனக்கு அடுத்த தலைவரை பொதுவெளியில் முன்னிறுத்தி, தலைமைத்துவச் சங்கிலியை ஆரம்பித்து வைக்கவில்லை. அவரது அகால மரணத்திற்குப் பிறகு. இரண்டாம்நிலைத் தலைவர்கள் பலர் தலைமைத்துவத்தை ஏற்கத் தயங்கியமையும், வேறுசில அரசியல்வாதிகள் அப்பதவியை ‘வாயாலேயே கேட்டு’ப் பெற்றதுமே இவ்வாறு கூறுவதற்கான காரணமாகும். அதாவது, தலைமைத்துவ சங்கிலி சரியாக இருந்திருந்தால், இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

அஷ்ரபின் பாரியாரான பேரியலுக்கு, தனது கணவரின் அரசியல் வழித்தடம் பற்றிய பெரிய பிரக்ஞையோ உடன்பாடோ இருந்ததில்லை. ரவூப் ஹக்கீம், அப்போது சிறந்ததோர் ஆளுமையாக, கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டிருந்தார். என்றாலும், தனித்துவ அடையாள அரசியலோ, கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளோ அவருக்கு சரிவரத் தெரிந்திருக்கவில்லை.

தலைமைத்துவச் சங்கிலி சரியாகக் கோர்க்கப்படாமையால், ரவூப் ஹக்கமும் பேரியல் அஷ்ரப்பும் முஸ்லிம் காங்கிரஸின் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். பிறகு, ரவூப் ஹக்கீம் தனித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார். பேரியல் அஷ்ரப், தேசிய ஐக்கிய முன்னணியை கையில் எடுத்தார்.

ஆனால், சொற்ப காலத்திலேயே கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் வலுவடைந்தன. ஹக்கீமை தலைவராகக் கொண்டு வந்த அதாவுல்லா போன்றவர்களே எதிர்த்தனர். ஹக்கீம் தலைவராக இருந்தபோது, எம்.பியாக தெரிவு செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் போன்றவர்களும் விமர்சித்தார்கள். இதன் விளைவாக, மேலும் பல காங்கிரஸ்கள் உருவாகின. முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்தன. ஊருக்குள் – ஏன் குடும்பத்திற்குள் கூட அணிகள் தோற்றம் பெற்றன. ஆகவே, துலைமைத்துவச் சங்கிலியில் உள்ள குறைபாடுதான், இதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.

இன்று, பல முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணிகள் உள்ளன. ஆயினும், ‘முஸ்லிம் சமூகத்தின் தேசிய ரீதியான அரசியல் தலைமை எது?’ என்று கேட்டால், விடைசொல்ல ஒரு கணம் தடுமாற வேண்டியிருக்கின்றது. ஏனெனில், இன்றைய உண்மை நிலைவரப்படி, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றார்கள். அரசியல் அணிகளிற்கு தலைமை தாங்குகின்றவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைமை என்று யாரும் இல்லை. ரவூப் ஹக்கீமோ, ரிஷாட் பதியுதினோ, அதாவுல்லாவோ அல்லது ஏனைய அரசியல்வாதிகளோ, தம்மை ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவர்களாக முன்னிறுத்தி இருக்கின்றார்களே தவிர, சமூகத்தின் தலைவர்களாகதத் தம்மைப் புடம்போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலைமை முஸ்லிம் சமூகத்தின் அடுத்த அரசியல் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று கொண்டாடப்படுகின்றவர்களில் பல குறைகள் உள்ளன.

சமூகத்தைச் சரியாகத் தலைமைதாங்கி, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்ற வகையான பல விமர்சனங்கள் உள்ளன. அது வேறு விடயம்! ஆனால், அவர்களுக்குப் பிறகு வந்த முஸ்லிம் எம்.பிக்கள், மாகாண முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், இவர்களை விட மோசமான பண்பியல்புகளையே கொண்டிருக்கின்றார்கள். இன்னுமின்னும் பிற்போக்குத்தனமான அரசியல் சுலாசாரத்தை உருவாக்கவே முற்படுகின்றார்கள். தலைவர்களைக் குற்றம் சொல்லிக் கொண்டு, அவர்களை விடக் கேடுகெட்ட காரியங்களில் ஈடுபட்டு, சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற எம். பிக்களே இன்று அதிகமுள்ளனர். பழையவர்கள் அப்படியென்றால், புதிதாக பாராளுமன்றத்திற்கு, அரசியலுக்கு வந்தவர்கள், அதைவிட மோசமானவர்களாகத் தெரிகின்றார்கள்.

முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில், சமூகம் என்ற சிந்தனை மறந்து, கிடைப்பதைச் சுருட்டிக் கொண்டு போவோம் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. பணத்துக்கும் பதவிகளுக்கும் பின்னால், மக்கள் பிரதிநிதிகள் போய்விடுவதால், திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல, முஸ்லிம் சமூகம் நிற்கின்றது. ஆக மொத்தத்தில், முஸ்லிம் அரசியலில் தலைமைத்துவப் பண்புகள். இறங்குமுகமாக இருக்கின்றன. இதனால் அடுத்த தலைவர் யார் என்பதை, மக்களால் அடையாளப்படுத்த முடியவில்லை.

அதேவேளை. இப்போதிருக்கின்ற தலைமைகள், தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வது ஒருபுறமிருக்க, தங்களுக்கு அடுத்த வேண்டியுள்ளது. தமது கட்சியில், அணியில் உள்ளவர்களில், உண்மையில் சமூகத்திற்காக பாடுபடக் கூடிய ஆளுமையுள்ளவர் யார் என்பதை அடையாளம் காண வேண்டும்.

நிலையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை எதிர்காலத் தலைவர்களாக சிருஷ்டிக்க இப்போது, முஸ்லிம் அரசியலுக்குள் அப்படியான தகுதி தராதரங்களுடன் யாரும் இல்லாதிருக்கவும் வாய்ப்புண்டு. அப்படியென்றால், உடனடியாக வெளியில் இருக்கின்ற பொருத்தமான ஆளுமைகளை அரசியலுக்குள் உள்வாங்கி, அடுத்தடுத்த தலைவர்களை உருவாக்குவதுடன், அதை மக்களுக்கு முன்னிலைப்படுத்துவதும் அவசியம்.

இல்லையென்றால், இப்போதிருக்கின்ற ஒரு முஸ்லிம் தலைவரின் பதவி, எதிர்பாராத காரணத்தால் வெற்றிடமாகும்போது, மர்ஹூம் அஷ்ரபின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பங்களையும் தலைமைத்துவ வெற்றிடத்தையும் விட பன்மடங்கு பாரதூரமான விளைவுகளை முஸ்லிம் சமூகம் சந்தித்தே தீரும்.

மொஹமட் பாதுஷா – Tamil Mirror 23-11-21

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page