மனைவியை இருட்டறையில் அடைத்து வைத்திருந்தனர் – ரிஷாட் பதியூதீன்

அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த தனது மனைவியை சிறைச்சாலையில் உள்ள இருட்டறையில் அடைத்து வைத்திருந்ததாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரிஷாட் பதியூதீன், ஆளுங்கட்சி உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களையும் இருட்டறையில் அடைப்பீர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிந்தவூரில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் நான் கைது செய்யப்பட்டிருந்தேன். என்னை கைது செய்ய வந்த அதிகாரிளிடம் நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

நான், வரமுடியாது என்று கூறியபோதும் அவர்கள் என்னை தூக்கிச் செல்வேன் என அச்சுறுத்தினார்கள். பெரிய குற்றம் செய்தவரை கண்டுபிடிப்பதுபோல் என்னை கைது செய்தார்கள். யாரை திருப்திப்படுத்த என்னை கைது செய்தார்கள் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்துக்கு துணைபோனதாகக் கூறி என்னை தடுத்து வைத்திருந்தார்கள். எனது சகோதரரையும் இதே குற்றச்சாட்டில் கைது செய்திருந்தார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் தொடர்
கோரிக்கைகளால் நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடிந்தது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவலகத்தில் உள்ள எனது அறையில் என்னை எனது கட்சி எம். பிகள் சந்தித்து, உங்களின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச வேண்டுமா? எனக் கேட்டார்கள். எனது விடுதலைக்காக அரசாங்கத்தோடு பேச வேண்டாம். இதனை காரணமாக வைத்து அரசாங்கம் கொண்டுவரும் அனைத்து சட்டங்களுக்கும் உங்களை கையை உயர்த்த சொல்வார்கள் எனவும் தான் அப்போது கூறியதாக தெரிவித்தார். எந்தவொரு தவறும் செய்யாத எனது மனைவி கைது செய்யப்பட்டார்.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

எனது மனைவி நோன்பு திறப்பதற்கு கூட சிறைச்சாலையில் உள்ள அதிகாரிகள் தண்ணீர் வழங்கவில்லை. மனைவியை இருட்டறையில் அடைத்து வைத்திருந்தனர். இதனை பார்த்த ஏனைய சிறை கைதிகள் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டையிட்டனர் எனவும் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியின் எம்.பி ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டிருந்தால் இவ்வாறு அவர்களையும் நடத்தியிருப்பார்களா? எனவும், என்னுடைய மாமானார் ஒரு சிறந்த வியாபாரி அவருக்கு 71 வயது அவரையும் சிறையில் அடைத்தார்கள்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையையும், இன்னொரு யுத்தம் நடைபெறக்கூடாது என இந்த அரசாங்கம் நினைத்திருந்தால், ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரரரை அரசாங்கம் நியமித்திருக்காது எனவும் தெரிவித்தார்.