கண்டியில் நில அதிர்வு ? சிறப்பு குழு ஸ்தலத்தில் ஆராய்வு!

கண்டியில் தலாத்து ஓயாவை அண்மித்த ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பாரிய சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டது. எனினும் இந்த அதிர்வு நில நடுக்கம் அல்ல என்று புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் சஜ்ஜன டி சில்வா தெளிவுபடுத்துகையில் ,

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் கீழ் 24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 4 நிலையங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையங்களில் பதிவாகின்ற சம்வங்களை தினமும் சுனாமி மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்படுவதோடு அவை தொடர்பில் கண்காணித்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்படும்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 8.30 – 8.31 மணிக்கிடையில் சிறிய அதிர்வொன்று பதிவாகியிருந்தது. இது நிலநடுக்கம் அல்ல. நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற 4 நிலையங்களில் பல்லிகலையில் அமைந்துள்ள ஒரு நிலையத்தில் மாத்திரமே இந்த அதிர்வு பதிவாகியது. ஏனைய நிலையங்களில் இந்த அதிர்வு பதிவாகவில்லை.

இந்த அதிர்வு நிலநடுக்கம் இல்லை என்றாலும் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இனங்காண வேண்டும். அதற்கமைய இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழு ஆராய்வினை ஆரம்பித்துள்ளது.

கண்டியிலிருந்து 12 கிலோ மீற்றர் தூரம் வரை உள்ள பிரதேசங்களிலேயே அதிர்வு பதிவாகியுள்ளது. அதற்கு அப்பாலுள்ள பகுதிகளில் பதிவாகவில்லை. குறித்த 12 கிலோ மீற்றருக்கு இடைப்பட்ட பிரதேசங்கள் ஆராய்விற்கு உட்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதே வேளை ஏற்பட்ட அதிர்விற்கு 3 சம்பவங்கள் காரணங்களாக அமையலாம் என நியமிக்கப்பட்டுள்ள குழு அனுமானித்துள்ளது.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!

கற்குவாரியில் வெடி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வு இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லை எனின் சுண்ணாம்பு கற்பாறை உடைந்து வீழ்ந்திருப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விக்டோரியா உள்ளிட்ட அதனை அண்மித்த நீர்த்தேக்கங்களில் ஏற்பட்ட உயர் நீர் அழுத்தம் மூன்றாவது காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்வின் காணமாக குடியிருப்புக்கள் அல்லது கட்டங்கள் எவையும் சேதமடையவில்லை என்பதோடு மக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதே வேளை அதிர்வு ஏற்பட்ட பிரதேங்களில் வசிக்கின்ற அதனை உணர்ந்த பொது மக்கள் , ‘குண்டு வெடிப்பதைப் போன்று பாரிய சத்தமொன்று கேட்டது. கதவு ஜன்னல்கள் அதிர்ந்தன. பூமிக்கடியில் அதிர்வதைப் போன்றே நாம் உணர்ந்தோம். குறுகிய நேரத்தில் என்ன ஆனது என்பதை எம்மால் யோசிக்க முடியாமல் போனது. ஒன்று தொடக்கம் ஒன்றரை நிமிடங்கள் மாத்திரமே இந்த அதிர்வினை உணர முடிந்தது. ‘ என்று கூறினார்கள்.

SOURCEவீரகேசரி பத்திரிகை (எம்.மனோசித்ரா)