அக்குறணை வெள்ள பிரச்சினைக்கு தீர்வு என்ன?

2012இல் ஏற்பட்ட வெள்ளத்தின் ஒரு பகுதி வீடியோ (By: akuranatoday.com)

உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதனை இறைவனை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மழைவீழ்ச்சி அதிகமானால் மண்சரிவு. வெள்ள பெருக்கு வருவது சகஜமான விடயம்தான். எனினும் மலையக பகுதிகளை எடுத்து கொண்டால் மண்சரிவு அபாயம்தான் அதிகமாகும். வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். எனினும் கண்டி மாவட்டத்தின் இயற்கை எழில்மிகு அழகிய நகரமாக காட்சியளிக்கும் அக்குறணையில் மாத்திரம் விதி வேறு மாதிரி விளையாடுகின்றது.

அக்குறணை வெள்ள பெருக்கு நிலைமையை மாற்றி அமைக்க முடியும். அதற்கு அரசாங்கத்தின் பாரிய நிதி ஒதுக்கீடும் பிரதேச மக்களின் ஆதரவும் அத்தியாவசியமாகும். சிறு மழைக்கு அப்பால் மழைவீழ்ச்சி எல்லைமீறும் போது அக்குறணை நகரில் அதிலும் குறிப்பாக ஆறாம் கட்டை பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு பெரும் அச்சத்தை தோற்றுவிக்கும் நிலைமை தற்போது உருவெடுத்துள்ளது. அக்குறணை நகரம் மலை மேடுகளுக்கு மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. மலை மேடுகளிலுள்ள கிராம பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் மற்றும் வாகல் ஓயா மழைநீர் முழுவதும் அக்குறணை நகரில் ஓடும் சிறிய நீரோடைக்கு வந்துசேர்கின்றது. குறித்த நீரோடை மகாவலி கங்கையில் ஒன்று சேர்கின்றது.

அக்குறணை நகருக்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டால் 600 வர்த்தக நிலையங்களில் 100 க்கும் அதிகமான வர்த்தக நிலையங்களே நீரில் மூழ்கின்றன. குறிப்பாக ஆறாம் கட்டையிலுள்ள வர்த்தக நிலையங்களே இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இவ்வாறு வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்குவதனால் குறித்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரும் சிக்கலுக்குள் தள்ளப்படுகின்றது. வர்த்தக நிலையங்களிலுள்ள விற்பனை பண்டங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் நீரில் மூழ்குவதனால் அக்குறணை நகர வியாபாரிகள் மழை பெய்தாலேயே பெரும் அச்சம் கொள்ளும் மன நிலையே உள்ளது. இதன்படி அக்குறணை நகரில் ஆடை விற்பனை நிலையங்கள், சில்லறை கடைகள், தொலைபேசி மற்றும் இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்கள், ஹோட் டல்கள்,கட்டட நிர்மாணத்திற்கு தேவையான உபகரண விற்பனை நிலையங்கள், இறைச்சி, மீன் கடைகள், தபால் நிலையம் வீட்டு உபகரண விற்பனை நிலையங்கள் குறித்த வெள்ள பெருக்கினால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அத்துடன் அக்குறணை நகரம் ஏ 9 வீதியில் அமைந்துள்ளமையினால் பொது போக்குவரத்து மற்றும் வர்த்தக போக்குவரத்துக்கு நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன.

அக்குறணை நகரிலுள்ள நீரோடையில் சேற்று மணல் குவிந்து குறிப்பிட்ட எல்லை வரை தேங்கி இருப்பது இந்த வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது. அடுத்ததாக அக்குறணையில் உள்ள ஒரு சில பாலங்கள் பழையதாகவும் மிகவும் சிறியதாக உள்ளமையினால் நீரில் வரும் குப்பைகள் பாலத் திற்கு கீழே ஒன்று சேர்வதனாலும் நீர் ஓட்டத் திற்கு பாதிப்பை செலுத்துகின்றது.

மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களின் கட்டட அமைப்பும் வெள்ள அனர்த்தம் ஏற்பட காரணமாக அமைகின்றது வெள்ள பெருக்கை தடுக்க தற்காலிக தீர்வாக நீரோடையிலுள்ள சேற்று மணலை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளை தற் போதைய பிரதேச சபை ஓரளவு முன்னெடுத்து வருகின்றது. எனினும் நீரோடையிலுள்ள அதிகளவிலான மணலை எடுக்க வேண்டும். அத்துடன் நிரந்தர தீர்வாக பழைய பாலங்களை மீள புனரமைக்க வேண்டும். நகரிலுள்ள கட்டங்களை உடைத்து புனரமைப்பு செய்ய வேண்டும். இந்த நிரந்தர தீர்வுகளுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகளவிலான நிதி ஒதுக்கீடும் பிரதேச மக்கள்,வர்த்தகர்களின் ஆதரவு கட்டாயம் அவசியமாகும். இல்லையேல் வெள்ள பெருக்கை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய முஸ்லிம் விவகார அமைச்சரான எம்.எச்.ஏ ஹலீமின் வழிகாட்டலில் விசேட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த நடவடிக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமும் தலைமைத்துவம் வழங்கினார். அக்குறணை வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்காக பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு அது அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. அதற்கு அங்கீகாரம் கிடைத்ததுடன் இது தொடர்பாக அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் வந்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் எம்.எச்.ஏ ஹலீம் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நிதி ஒதுக்கீடு தொடர்பில் பேச்சு நடத்தியதுடன் அக்குறணை வெள்ள தடுப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் அனுமதி வழங்கியிருந்தார். எனினும் 56 நாள் ஆட்சி மாற்றத்தினாலும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்றமையினால் இந்த திட்டம் இடைநடுவே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது அக்குறணை பிரதேசசபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களும் வெள்ள பெருக்கை தடுப்பதற்காக தற்காலிக தீர்வாக மணல் அகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும் மேல் மட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்த நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ ஹலீம் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய இருவரும் பூரண தலைமைத்துவ ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். அண்மை காலமாக பலத்த மழை பெய்து வருவதனால் பல தடவை வெள்ள பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இதன் போது நிரந்தர தீர்வு குறித்து அக்குறணை பிரதேச தவிசாளரினால் அழுத்தம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மத்திய மாகாண பிரதான செயலாளரினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ள பெருக்கு தொடர்பாக பிரதேசவாசிகள், நகர வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சாரதிகளிடம் வினவிய போது பொதுவான கருத்துகளையே அவர்கள் எமக்கு குறிப்பிட்டனர். அவர்கள் குறிப்பிட்டதாவது,

அக்குறணை நீரோடையில் சேற்று மணல் அதிகமாக குவிந்துள்ளது. இதுதான் பிரதான பிரச்சினையாகும். குறித்த மணல்களை துரிதமாக எடுக்க வேண்டும். பாலங்கள் சிறியதாக உள்ளது. அதனை பெரிதாக்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் குறிப்பிடுகையில்,

அக்குறணை வெள்ள பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக சேற்று மணல் அகழ்வு பணிகளை ஓரளவு முன்னெடுத்து வருகின்றோம். அனைத்து சேற்று மணல்களையும் எடுக்க முடியாது ஏனெனில் மணல் அகழ்வினால் நீரோடைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலைய கட்டடங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அத்துடன் இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நாம் பெரும் அழுத்தம் பிரயோகம் செய்தமையினால் மாகாண பிரதான செயலாளர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். அந்த குழு எதிர்வரும் 10 ஆம் திகதி கூடுகின்றது. அந்த குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ ஹலீம், ரவூப் ஹக்கீம், ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொள்வர். அக்குறணை வெள்ள பிரச்சினை தொடர்பாக மாகாண ஆளுநர் லலித் யூ கமகே விசேட அவதானம் செலுத்தியுள்ளார். இந்த பிரச் சினையை நிரந்தரமாக தீர்க்க ஒரு சில பாலங்கள் மீளவும் புனரமைப்பு செய்ய வேண்டும். கட்டடங்கள் புனரமைப்பு செய்ய வேண்டும். இந்த பணிகளை முன்னெடுக்க மத்திய அரசாங்கத்தினதும் பிரதேச மக்களின் ஆதரவும் அவசியமாகும் என்றார்.

இது தொடர்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம் குறிப்பிட்டதாவது,

அக்குறணை வெள்ள பிரச்சினையை தீர்க்க நல்லாட்சி அரசாங்கத்தில் நானும் ஹக்கீமும் விசேட அவதானம் செலுத்தினோம். இந்த திட் டத்திற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தார். எனினும் ஆட்சி மாற்றம் காரணமாக அந்த பணிகள் கைவிடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீர்க்க வேண்டுமாயின் அம்பதன்னை எல்லை வரையில் உள்ள நீரோடை சேற்று மணல்களை அகற்ற வேண்டும். பழைய பாலங்களை மீள புனரமைக்க வேண்டும். கட்டடங்களை புனரமைக்க வேண்டும். இதற்கு அதிகளவிலான நிதி அவசியமாகும். மேலும் பிரதேச மக்களின் ஆதரவும் அவசியமாகும் என்றார்.எனவே வெள்ளப் பெருக்கு இல்லாத அக்குறணை உருவாக்க நிரந்தர தீர்வை நோக்கி துரிதமாக பயணிப்பது அவசியமாகும். இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் ஆதரவும் பிரதேச மக்களினதும் நகர வர்த்தகர்களின் பூரண ஆதரவும் அத்தியாவசியமாகும். நிதி ஒதுக்கீடு செய்தாலும் பிரதேச மக்களின் ஆதரவு கிடைக்காதவிடத்து இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது எனவே இந்த பிரச்சினையை தீர்க்க ஆளும்,எதிர்க்கட்சி பேதம் பாராமல் அனைத்து அரசியல் தலைமைகளும் பிரதேச புத்திஜீவிகள், வர்த்தகர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இல்லையேல் அக்குறணை குட்டி வெல்லம்பிட்டியாக மாறுவதனை தடுத்து நிறுத்த முடியாது போகும்.

எம்.எம்.மின்ஹாஜ் <வீரகேசரி 15-11-21>
“அக்குறணை டுடே” செய்திக்காக (ரஹ்மின் அஹ்மத்)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page