5000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக அரசாங்க வர்த்தமானியில் ஏற்பட்ட குளறுபடிகள்

அரசாங்கத்தின் 5000.00 ரூபா கொடுப்பனவு தொடர்பாக அரசாங்க வர்த்தமானியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவே கிராம சேவகர்களும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஏனைய மாவட்டங்களைவிட நுவரெலியா மாவட்டத்தில் கிராம சேவகர்கள் பிரிவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதும் இந்த சிக்கலான நிலைமைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இதன் காரணமாகவே நாங்கள் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் கிராம சேவகர்கள் பிரிவை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

ஒரு சில கிராம சேவகர்கள் சமுர்த்தி உத்தியேகஸ்தர்களை தவிர்ந்த ஏனையவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை சிறப்பாக செய்திருக்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக அரசாங்கம் வருமானம் குறைந்த அனைவருக்கும் 5000.00 ரூபா வழங்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பல முறை பல திருத்தங்கள் செய்யப்பட்டே வெளியிடப்பட்டது.

இது பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இந்த வர்த்தமானி தொடர்பாக மக்களுக்கும் சரியான தெளிவுபடுத்தல் இல்லை.

தொழிற்சங்க பிரதிநிதிகளும் இது தொடர்பாக உரிய விளக்கங்கள் இல்லாமலேயே இருந்தார்கள்.

அவர்கள் ஏனையவர்கள் கூறுவதை மாத்திரமே கேட்டுக் கொண்டார்கள்.

அரசாங்கம் இந்த வர்த்தமானி தொடர்பாக மக்களை முறையாக தெளிவுபடுத்த தவறியமையும் இந்த குழப்பத்திற்கு இன்னுமொரு காரணமாகும்.

எனவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கின்ற பொழுது அதனை சரியாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் முகமாக அவர்களுக்கு இந்த வர்த்தமாணி அறிவித்தல் தொடர்பாக பிரதிகளை வழங்கியிருக்கலாம்.

அல்லது அவர்களுடைய மின்னஞ்சல் அல்லது வட்ஸ் அப் போன்ற ஏதாவது ஓரு வழியில் இதனை அவர்களுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தால் அவர்கள் இது தொடர்பாக தங்களுடைய மக்களுக்கு தெளிவுபடுத்தியிருப்பார்கள்.

இந்தளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது.எனவே வெறுமனே அரசாங்கம் அறிவித்தல் விடுவதனால் மாத்திரமே இதனை நடைமுறைபடுத்த முடியாது.

மேலும் இதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இதன் காரணமாக கிராம சேவகர்கள் தங்களுடைய பகுதிக்கு உட்பட்ட அனைவரையும் தெளிவுபடுத்துவதற்கோ அல்லது இது தொடர்பாக முறையான விளக்கமளிப்பதற்கோ அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை.

அவர்களுக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் காணப்பட்டது.ஏனைய மாவட்டங்களைவிட அதிக மக்கள் தொகை ஒரு கிராம சேவகருக்கு சேவை செய்யக்கூடிய நிலைமை மலையகத்தில் இருக்கின்றது.

எனவே இவ்வாறான விடயங்களை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.அரசாங்கம் விடுகின்ற பிழைகளால் பாதிக்கப்படுகின்றவர்கள் கீழ் மட்டத்தில் இருக்கின்ற கிராம சேவகர்களும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுமே எனவே இந்த அசாதாரண நிலைமை வழமைக்கு திரும்பியதும் இந்த மாவட்டத்தில் கிராம சேவகர்கள் பிரிவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எதிர்காலத்திலும் இவ்வாறான நிலைமை ஏற்படுகின்ற பொழுது எங்களுடைய மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது.

இதிலே அரசியல் வாக்குவாதங்கள் தேவையில்லை.மலையகத்தில் இருக்கின்ற எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் இதனை செய்தால் அதற்கு எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இன்று எங்களால் அதிகரிக்கப்பட்ட பிரதேச சபைகளை மாற்று கட்சினர் ஆட்சி செய்தாலும் அதனை நினைத்து நாங்கள் கவலைப்படவில்லை மாறாக சந்தோசமடைகின்றோம்.

ஏனெனில் எங்களுடைய மக்களுக்கு அந்த சேவைகள் சென்றடைவதற்காகவே நாங்கள் அந்த முயற்சிகளை மேற்கொண்டோம். எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters