பாத்திமாவின் உயிரைப் பலியெடுத்த “சூதாட்டம்” (முழு விபரம்)

கொலை செய்யப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில், பிரயாண பைக்குள் திணிக்கப்பட்டு சபுகஸ்கந்த – மாபிம பாதையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கருகில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்த பெண்ணொருவரின் சடலம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேக நபரை பொலிஸார் நேற்று முன் தினம் வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்துள்ளனர். ஏற்கனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று (9)மன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக் கப்பட்ட, கணவன் மனைவியில், மனைவியின் சகோதரரான 34 வயதான மொஹம்மட் நௌஷாட் எனும் சந்தேக நபரே வெல்லம்பிட்டிய மெகட கொலன்னாவை பகுதியில் ஒளிந்திருந்த போது சிறப்பு பொலிஸ் குழுவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கொலை செய்யப்பட்ட மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த மொஹம்மட் ஷாபி பாத்திமா மும்தாசுக்கு சொந்தமான இரு கையடக்கத் தொலை பேசிகளையும், சந்தேக நபரிடமிருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கணவன் மனைவி நேற்று முன்தினம் மஹர நீதிவான் கேமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், சமிட்புர, மட்டக்குளி எனும் முகவரியில் வசித்த மொஹம்மட் சித்தி ரொஷானா (36), சேகு ராஜா கணேஷ் ஆனந்த ராஜா (36) எனும் கணவன் மனைவியர் ஆவர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, 48 மணி நேர தடுப்புக் காவலில் இந்த கணவன் மனைவியை விசாரித்துள்ள பொலிசார் பல விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். மனைவியான ரொஷானாவிடம் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் பிரகாரம், கொலை செய்யப்பட்ட பாத்திமா மும்தாஸ் கொலை செய்யப்படும் போது அணிந் திருந்ததாக கூறப்படும் தங்க சங்கிலி, காதணி ஜோடி, மோதிரம் ஆகியன செட் டியார் தெருவில் தங்க ஆபரண கடைய ஒன்றில் உருக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக சப்புகஸ்கந்தை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தனர். இந்த தங்க நகைகளை ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாவுக்கு சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பெண் குறித்த நகைக் கடைக்கு விற்பனை செய்துள்ளதாகவும், இந் நிலையிலேயே உருக் கப்பட்டிருந்த நிலையில் அந்த தங்கம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் நேற்று முன்தினம் பிற்பகல் கைது செய்யப்பட்ட, கொலையின் பிரதான சந்தேக நபர், இந்த கொலையை முன்னெடுக்க பயன்படுத்தியதாக கூறப்படும் இரும்பினாலான உலக்கை மற்றும் சடலத்தை சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு சென்ற முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர். இந்த முச்சக்கர வண்டியானது, சந்தேக நபரான ரொஷானா எனும் பெண்ணின் மாமனாருக்கு சொந்தமானது என பொலிசார் மன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றுக்கு அளித்துள்ள தகவல்கள் பிரகாரம், சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள ரொஷானா எனும் பெண், சமிட் புர பகுதியில் ‘ரத்னா மாமி” என அறியப்படும் ஒருவரின் தங்க வளையல்கள் மற்றும் சங்கிலியைப் பெற்று அதனை 90 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளார். அடகு வைத்து பெறப்பட்ட 90 ஆயிரம் ரூபாவில் 50 ஆயிரம் ரூபாவால் கடனடைத்துள்ள சந்தேக நபரான ரொஷானா, 30 ஆயிரம் ரூபாவை மும்தாஸிடம் சூதாடி தோற்றுள்ளார். இந் நிலையிலேயே அந்த தங்க ஆபரணங்களை மீட்டுத் தரு மாறு கூறியே, சந்தேக நபர் ரொஷானா, பாத்திமா மும்தாஸை (உயிரிழந்த பெண்) அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிரகாரம் மும்தாஸ், சந்தேக நபரான பெண்ணின் கோரிக்கைக்கு அமைய, குறித்த அடகுக் கடைக்கு சென்று தங்க ஆபரணங்களை மீட்டு, மேலும் 30 ஆயிரம் ரூபாவை சந்தேக நபரான ரொஷானாவுக்கு வழங்கியுள்ளார். இந் நிலையில் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி, சந்தேக நபரான ரொஷானா, மும்தாசின் வீட்டில் சூது விளையாடி. ஒரு இலட்சத்து 12 அயிரம் ரூபாவை வென்றுள்ளார். இந் நிலையில் அப்பணத்தில் ஒரு இலட்சம் ரூபாவை மும்தாஸிடம் கொடுத்துள்ள சந்தேக நபரான ரொஷானா, ‘ரத்னா மாமி” யின் தங்க நகைகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரியுள்ளார். இந் நிலையில், அந்த தங்க நகைகளை அடகி லிருந்து மீட்டது, மீள ஒப்படைப்பதற்காக அல்ல எனவும். அவற்றை மீண்டும் எவருக்கும் வழங்கப் போவதில்லை எனவும் மும்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையிலேயே பிரச்சினை இருவருக்கும் இடையே தோன்றியுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டதாக சப்புகஸ்கந்த பொலிஸார் நீதிமன்றுக்கு அளித்துள்ள மேலதிக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அவ்வறிக்கையின் பிரகாரம், ‘ரத்னா மாமி” தனது தங்க நகைகளை மீள கோரி வந்த நிலையில், ரொஷானா விடயத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, மும்தாஸை அச் சுறுத்தி அந்த தங்க நகைகளை பெற முதலில், ரொஷானாவும் பிரதான சந்தேக நபரான அவரது சகோதரரும், மும்தாஸின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். எனினும் அப்போதும் மும்தாஸின் வீட்டின் வேறு இருவர் இருந்தமையால், மும்தாஸை ஏமாற்றி மட்டக்குளி, சமிட்புரவில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்து வந்து இந்த கொலையை புரிந்துள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கொலை செய்த பின்னர், கொல்லப்பட்ட மும்தாஸ் அணிந்திருந்த “ரத்னா மாமி” யின் நகைகளை கழற்றி, தான் அடகிலிருந்து அவற்றை மீட்டதாக கூறி அவரிடமே ரொஷானா ஒப்படைத்துள்ளதுடன், ஏனைய நகைகளை விற்பனை செய்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே கொலை செய்யப்பட்ட மும்தாஸின் சடலத்தை, தனது கணவரின் துணையுடன் ரொஷானா, பிரதான சந்தேக நபரான சகோதரருடன் சேர்ந்து வீட்டிலிருந்த பயணப் பையில் இட்டு சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு வந்து கைவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந் நிலையில், தற்போது கைதாகியுள்ள பிரதான சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ரொசானா மற்றும் அவரது சகோதரர் நௌசாட் ஆகிய இருவரும் இணைந்தே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக களனிய பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். கடந்த 4 ஆம் திகதி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் மாபிம பகுதியில் குப்பை மேட்டில் பிரயாண பைக்குள் திணிக்கப் பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட சடலம் சபுகஸ்கந்த பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நபரொருவர் 119 அவசர தொலை பேசி அழைப்புக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி வீதியால் பயணித்த ஒருவர் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதியை நோட்டம் விட்டுள்ளார். அங்கே குப்பை மேட்டில் காணப்பட்ட பிரயாணப் பையிலிருந்தே துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். இதனையடுத்தே அவர் 119 இலக்கத்தை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். இவ்விடயம் பின்பு சபுகஸ்கந்த பொலி ஸாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து குறித்த பிரயாணப் பையை சோதனையிட்டுள்ளனர். அப்போதே பிரயாண பைக்குள் பெண்ணின் சடலமொன்று இருப்பது அறியப்பட்டது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

இது தொடர்பில் நீதித்துறைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மஹர பதில் மஜிஸ்திரேட் ரமணி சிறிவர்தன சபுகஸ் கந்த பொலிஸ் பிரிவுக்குள் இருக்கும் சடலம் அடங்கிய பிரயாணப்பை தொடர்பில் ஆரம்ப விசாரணையை நடத் தினார். அதுவரை இந்தச் சடலம் யாருடை யது என அடையாளம் காணப்பட்டிருக்க வில்லை. இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலை பிரேதசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து களனிய பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் டயஸின் அறிவு ரைகளுக்கமைய சபுகஸ்கந்த பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட் டன. விசாரணைகளுக்கு பேலிய கொட குற்றவியல் விசாரணைப் பிரிவின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் பிரிவுக்குள் காணாமல் போன பெண்களை தேடிகண்டுபிடிப்பதற்காக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட் டது. இக்குழுவின் அறிக்கையின்படி அண்மையில் இருவர் காணாமற் போயுள்ளதாகவும் அவர்கள் இருவரும் முஸ்லிம்கள் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.

இதேவேளை பிரயாணப் பைக்குள் இருந்த சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் அப்பெண் சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஊகித்தனர். இந்த சடலத்தின் ஆடைக்கு அமைய அப்பெண் முஸ்லிமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகித்தனர். அப்பெண்ணின் சடலம் சிந்தெட்டிக் பாயினால் சுற்றப்பட்டி ருந்ததுடன் அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது ஒருவர் பியகமயைச் சேர்ந்தவரெனவும் மற்றவர் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் பொலிஸாரால் அறியப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பொலிஸ் குழு வொன்று பியகம பகுதியில் காணாமற்போயிருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றது. ராகம வைத்தியசாலை பிரேதசாலையில் பெண்ணின் சடலமொன்று வைக்கப்பட்டிருப்பதாகவும் அச்சடலத்தை இனங்காணுமாறும் அவ்வீட்டாரிடம் பொலிஸார் வேண்டினார்கள். இதனையடுத்து பியகம பகுதியிலிருந்து காணாமற்போன பெண்ணின் உறவினர்கள் பிரேதசாலைக்கு வந்து சடலத்தை பார்வையிட்டதுடன் இச்சடலம் காணாமற்போன தங்களது பெண் ணினது அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்கள். தொடர்ந்தும் பொலிஸார் விசாரணை நடத்தியதில் அப்பெண்ணை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது. அப்பெண் இளைஞர் ஒருவருடன் பியகம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந் தபோது பொலிஸாரால் கண்டுபிடிக்கப் பட்டார். இதனையடுத்து மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி காணாமல்போயுள்ளதாக ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு செய்திருந் ததால் பொலிஸார் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு ராகம வைத்திய சாலை பிரேதசாலையில் வைக்கப்பட்டி ருக்கும் பெண்ணின் சடலத்தை அடை யாளம் காணுமாறு வேண்டினார்கள். அதற்கிணங்க அங்கு சென்ற அவர் அங்கு வைக்கப்பட்டுள்ள சடலம் தனது மனைவியினுடையது என அடையாளம் கண்டார். அவரது மூக்கில் இருந்த மூக் குத்தி மூலமே சடலத்தை அடையாளம் கண்டுள்ளார். பின்பு அவரது இரு பிள்ளைகளும் சடலம் தங்களது தாயினுடையது என அடையாளம் கண்டனர். பின்பு பொலிஸார் கணவரை நீண்ட விசாரணைக்கு உட்படுத்தினார்கள். கொலை செய்யப்பட்ட பெண் மாளிகாவத்தை மாடி வீட்டுத்திட்டத்தில் வசித்த மொஹமட் சாபி பாத்திமா மும்தாஸ் (45) எனும் இரு பிள்ளைகளின் தாயாவார்.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

‘தனது மனைவி கடந்த மாதம் 28ஆம் திகதி அவளது நண்பியான மட்டக்குளியில் வதியும் சித்தி ரொசானாவைச் சந்திக்க வீட்டிலிருந்தும் வெளியேறிச் சென்றதாக அவளது கணவர் ஏ.எம். அமானுல்லா பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். கணவரும் பிள்ளைகளும் கடந்த 5 ஆம் திகதி சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் சூது விளையாட்டில் ஈடுபடுபவரென்றும் அடகு வைக்கப்பட்டு மீட்பதற்கு முடியாமல் இருக்கும் நகைகளை மீட்டெடுப்பவரெனவும் விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கணவரிடமிருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் ரொசானாவின் வதிவிடமான மட்டக்குளியில் உள்ள அவளது வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். ஆனால் அவளது வீடு பூட்டப் பட்டிருந்தது. பொலிஸார் அயலவர்கள்ளிடம் விசாரித்தார்கள். ரொசானாவும் அவரது கணவரும் முன்னைய தினம் வீட்டு சாமான்களை லொறியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக அயலவர்கள் கூறினார்கள்.

அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமையை உறுதி செய்து கொண்ட பொலிஸார் அருகிலிருந்த சி.சி.ரி.வி கமெராக்களின் பதிவுகளை பார்வையிட்டனர். அவர்கள் வீட்டு சாமான்களை லொறியில் ஏற்றிக்கொண்டு வெளியேறிச் செல்வது சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியிருந்தது. அத்தோடு லொறியின் இலக்கத்தையும் பொலிஸாரால் அப்பதிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. பொலிஸார் குறிப்பிட்ட லொறி மற்றும் அதன் சாரதியை இனங்கண்டு விசாரணைகளைத் தொடர்ந்தார்கள். ‘தான் வாடகைக்கு லொறி செலுத்துவதாகவும் குறிப்பிட்ட தம்பதி லொறியை வாடகைக்கு அமர்த்தி மினுவாங்கொடயில் புதிய வீடொன்றுக்கு இடமாறியதாகவும்’ லொறிச்சாரதி வாக்குமூலமளித்தார். பின்னர் பொலிஸார் லொறிசாரதியுடன் மினுவங்கொடயிலுள்ள குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு வாடகை வீட்டில் இருந்த சந்தேக நபர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபரான பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் கொலை சம்பவத்தின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

கொலை நடந்த அன்று இரவு ரொசானாவின் கணவர் வீடு திரும்பியதும் அங்கிருந்த பயணப் பை தொடர்பில் வினவியிருக்கிறார். அப்போதே ரொசானா அனைத்து விபரங்களையும் கூறியிருக்கிறார். மறுதினம் வீட்டிலிருந்த குளிர் சாதனப் பெட்டியொன்றினை திருத்த வேலைகளுக்கு எடுத்துச் செல்வதற் கென்று கூறி அவர் லொறியொன்றினை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அந்த லொறியில் குளிர்சாதனப்பெட்டியுடன் பிரயாணப்பையில் திணிக்கப்பட்டிருந்த பாத்திமாவின் சடலத்தையும் எடுத்துக்கொண்டு வெல்லம்பிட்டிக்குச் சென்றுள்ளார்கள்.

வெல்லம்பிட்டியவில் குளிர்சாதனப் பெட்டி திருத்தும் நிலையத்துக்கு குளிர் சாதனப்பெட்டியை வெளியில் இறக்கி கொடுத்துள்ளார். அடுத்து பாத்திமாவின் சடலம் அடங்கிய பிரயாணப் பையை லொறியில் இருந்து வெளியே எடுக்கும் போது முச்சக்கரவண்டியொன்று அங்கே வந்துள்ளது. அந்த முச்சக்கரவண்டியில் ரொசானாவின் சகோதரர் நௌசாட்டே வந்துள்ளார். அவர் சடலம் அடங்கிய பிரயாணப்பையை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று சபுகஸ்கந்த பிரதேசத்திலுள்ள குப்பை மேட்டில் வீசியுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் கடந்த மாதம் 29ஆம் திகதியே சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளது. 29ஆம் திகதியிலிருந்து கடந்த 4ஆம் திகதி சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கும்வரை குப்பை மேட்டில் இருந்துள்ளது.

சந்தேக நபரான ரொசானா அதிகளவில் கடன் பெற்றுள்ளவரெனவும் அத்தோடு சூது விளையாடுவதில் ஈடுபடுபவரெனவும் விசாரணைகளில் பொலிஸார் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோனின் கண்காணிப்பின் கீழ் களனி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் டயஸின் ஆலோசனைகளுக்கு அமைவாக களனி பிரிவு குற்றவியல் விசாரணை பிரிவு விசாரணைகளை தொடர்கிறது.

ஏ.ஆர்.ஏ.பரீல் (விடிவெள்ளி 11-11-2021 pg 09)