சதிகளால் வைரமான சவால்களின் பரிணாமம் (முஸ்லீம் அரசியல்)

சுதந்திரத்துக்குப் பின்ர் இலங்கையின் ஏனைய இனக்குழுக்களுடன் ஒப்பிடும்போது கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் என்பது சமூகத்தின் மேட்டுக்குடிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி அழகு பார்க்கும் ஒரு செயற்பாடாக மட்டுமே இருந்தது. அவர்கள் தங்களினதும், தங்களின் மேட்டுக்குடியினதும் ஆடம்பரத் தேவைகளுக்கு தங்களின் பாராளுமன்ற உறுப்புரிமைகளை பேணிப் பாதுகாத்துக் கொண்டனர். அதுதான் நமது அரசியல் என்று வெகுஜனமும் மகிழ்ச்சிக்கடலில் மல்லாந்து கிடந்தது.

சிலர் புதிய புதிய கூட்டுறவுச் சங்கங்களைப் பதிந்து தங்களின் அடுத்த தேர்தலைக் கவனித்துக் கொள்ளத்தக்க சிறு சிறு செல்வந்தர்களை உருவாக்கிவிட்டனர். இதற்கும் மேலதிகமாக, எந்தவித வருமானமும் இல்லாத கைம் பெண்களுக்கு அரசாங்க உதவித்தொகையைப் பெற்றுக் கொடுப்பதில் சிலர் முன்னின்று உதவினர் . இதுவே தமது சாதனை என்றும் அவர்கள் கருதினர். மக்களும் அவ்வாறே நம்பினர். இதற்குப் புறநடையாக சில உறுப்பினர்கள் சமுதாயப் பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டும் உள்ளனர். ஆனால் கல்வி கற்ற தலைமுறை ஒன்று உருவாகியதால் புதிய சிந்தனைகள் தோன்றி 1958இன் பின்னர் கூர்மைப்பட்ட சமூகப் பிரச்சினைகள் மக்கள் மயப்படுத்தப்பட்டன. பேரினவாதம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடாக நிலைபெறத் தொடங்கியதும் அதன் அடக்கு முறை பற்றிய பிரக்ஞை ஏற்பட்டதால இனத்துவ அரசியல் சிறுபான்மையினரிடத்தே முளைவிடத் தொடங்கிற்று.

சமுதாய நலன் பேணும் ஒரு தூய்மைவாத அடிப்படையில் முஸ்லிம் சமூக விடுதலை என்னும் கோட்பாட்டை முதன்மைப்படுத்தி செயற்பாட்டு முஸ்லிம் அரசியல் 1980களில் தோற்றம்பெற்றது. அந்தக் கால கட்டத்தில் ஆயுதத்தின் மீது சன்னஞ் சன்னமாக கிழக்கு இளைஞர்களும் கவரப்பட்டுப்போன ஒரு நிலைமை முஸ்லிம் சமூகத்தினுள்ளேயும் பரவ ஆரம்பித்திருந்து ரௌத்திரம் பிடித்த துப்பாக்கிகளைக் கொண்டே பேரம்பேசும் சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நூறு வீத நம்பிக்கையோடு இளைஞர்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அப்படிச் செயல்பட்டுக் கொண்டி ருந்த இளைஞர்களோடு திணறிப்போய் வேறு வழியின்றி அயல் வீட்டு தமிழ் சமூகம் ஊரோடு ஒத்தோடிக்கொண்டு இருந்தது. அந்த சமூகத்தின் கருத்தியல் ஆதிக்கத்தால் கவரப்பட்ட அதன் அயலவர்களான இன்னொரு சமூகமும் இறுதியில் புலிவாலைப் பிடித்தது போல தினறிக் கொண்டு இருந்தது.

தம் சமூகத்தைப் பீடித்திருந்த ஆயுதம் ஏந்துதல் என்ற தொற்று நோயால் சொல்லொணாத துயரங்கள் ஏற்படுமேதவிர அது எந்த விமோசனத்தையும் தராது என்ற அனுபவத்தை அயல் வீட்டில் வாழ்ந்த சமூகம் பெற்றுக்கொண்டது. அதன் உடனடித் தாக்கம் முஸ்லிம் வெகுஜனத்திடமும் பிரதிபலித்தது. அத்துடன் சமூகத்துக்காக தியாகம் செய்யும் மற்ற சமூகத்தைப் போன்ற இளைஞர் படையை உருவாக்குவது இனிமேல் சிரமசாத்தியம் என்பதையும் அது கண்டுகொண்டது. இதனிடையே காட்டிக்கொடுக்கும் ஒரு புதிய வர்க்கத்தை யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பாரும் மூன்றாம் சமூகத்தில் இருந்து உருவாக்கிக் கொண்டனர் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது. மேற்படி காரணங்களால் ஆயுதப் போராட்டத்தில் இருந்து புத்திசாலித்தனமாக நழுவிக்கொள்ளவே முஸ்லிம் சமூகம் ஆசைப்பட்டது எனினும் பேரினவாதத்தின் பிடி மேலும் மேலும் இறுகிக்கொண்டே வந்தது ஆயுத மோகத்தின் மீதாள மூன்றாம் இனத்தின் நம்பிக்கை தளரத் தளர தவிர்க்க முடியாமல் பாராளுமன்ற அரசியல் பற்றியே அந்த சமூகம் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிற்று.

பாராளுமன்ற அதிகார சமன்பாட்டைத் தக்க வைக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையைக் கொண்டே அதனைக் கூட்டல் விருத்தியாகவும் பெருக்கல் விருத்தியாகவும் மடைமாற்றம் செய்து பேரம் பேசும் சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் ஒரு கருதுகோளாய் வந்து சேர்ந்தது. அந்த சமூகத்திலிருந்து உருவான புத்தம் புதிய இளைய தலைமை இந்த பரிசோதனை முயற்சியில் ஈடுபடலானது. 1994இல் இருந்து அந்த பரிசோதனை முயற்சி பயனளிக்கத் தொடங்கிற்று முஸ்லிம்களிடத்தே மட்டுமன்றி ஏனைய சமூகத்தினரின் மத்தியிலும் அதனை நிறுவிக்காட்டிய பெருமை முஸ்லிம் அரசியலை சாத்தியப்படுத்திய அந்த இளைய தலைமுறைத் தலைமையையே சாரும்.

தத்தம் அரசியல் சமன்பாட்டைத் தக்க வைத்துக்கொள்ளும் பெரும்பான்மைக் கட்சிகளின் போட்டாபோட்டியின் இடையே சிக்கிக்கொள்ளாமல் தாமாகவே வளர்ந்து வந்த முஸ்லிம் அரசியல் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் சிதைந்துபோன தனது சமூகத்தின் புனர்நிர்மாணத்தின் பங்குகளுக்கான உரிமை கோரலையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது பாராளுமன்ற அரசியலின் மற்றொரு படித்த தரமான அமைச்சரவைக்குள் பிரவேசிக்க வேண்டிய ஒரு நிலைமையும் முஸ்லிம் அரசியலுக்கு ஏற்பட்டது. அதனால் சில பத்தாண்டுகளாக சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்டுவந்த தொழில் வாய்ப்பு நிலைமை சற்று மாற்றம் அடைந்தது. புத்தம் புதிய அந்தச் சூழ்நிலையில் சற்று காத்திரமான வாய்ப்புகளையும் அந்தப் போக்கானது ஏற்படுத்தித் தந்தது. குறிப்பாக துறைமுகம் மற்றும் கப்பற்றுறை தொழில் வாய்ப்புக்கள், அது சார்ந்த சிறுபான்மையினருக்கான வணிகமய தொழிற்றுறை வாய்ப்புக்கள், சேதமடைந்த பகுதிகளில் ஓரளவுக்காவது புனர்வாழ்வு புனர் நிர்மாண வாய்ப்புக்கள். துறைமுக அபிவிருத்தி முதலியனவற்றின் கால்வாய்கள் சிறுபான்மையினரின் பக்கமாகவும் திரும்பிப் பாய்ச்சப்படும் வழிகள் என்பன பிறந்தன. எல்லாவற்றுக்கும். மேலாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற மாபெரும் வரம் அரசியல் அதிகாரம் கைவரப் பெற்ற இந்தக் காலத்தில்தான் சாத்தியமாயிற்று.

ஆனால்,இந்த அபிவிருத்தியோடு அமைச்சுக்கான அதிகாரத்தின் சுவையை அனுபவிக்கும் ஓர் ஆடம்பாமும் சமூக அரசியல் தலைமையிடம் இல்லாது போனாலும் அதன் பக்க வேர்களிடத்தே மெல்ல மெல்ல அரவம் கட்டத் தொடங்கியது உண்மையே. அரசியல் தலைமையிடம் அது இல்லாதிருந்தது என்பதற்கு ஆதாரம் அவர் அகால மரணம் அடைந்தபோது 2000 ஆம் ஆண்டு போதுத்தேர்தலின் தேசிய அளவிலான செலவுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களைக் கடன்பட்டிருப்பது அறியவந்தது, ஆனால், அவர் அதிகாரம் சார்ந்த அரசியல் நியமனம் வழங்கிய பலர் கோடீஸ்வரர்களாக இன்றும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். துறைமுகத்தின் உள்ளேயும் வெளியேயும் சில முதலாளிகளும் மட்டுமன்றி தொழில் வழங்கும் வியாபாரிகளும் ஆங்காங்கே தோன்றாமலும் இல்லை இளவரசன் போன்று கருதப்பட்ட ஒரு கூட்டுத்தாபத்தின் பிரதித்தலைவா தமது குடும்பத்தின் பெருநாள் கொண்டாட்டத்துக்கு ஜவுளிக் கொள்வனவுக்காக சிங்கப்பூர் சென்றதாக அதே இடத்தில் வேலைசெய்த மற்ற உயர் அதிகாரிகள் பொறாமையுடன் பேசிக்கொள்ளும் அளவுக்கு முஸ்லிம் அரசியலில் பிழைப்பு நடத்த வந்தவர்களிடம் ஆடம்பர மோகம் காணப்பட் டது. மேலும் சில இளவரசர்கள் குடித்துக் கும்மாளம் அடிக்கும் அளவுக்கு சீரழிவு நிகழாமலும் இல்லை. அதன் உச்சக்கட்டமாகத்தான் பத்திரிகைகளின் அப்போதைய சூடான செய்தியாகிய துறைமுகத்திலிருந்து சர்ச்சைக்குரிய மூன்று கொள்கலன்கள் வெளியே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டமை என்ற குற்றச்சாட்டு மேலோங்கியது. குறித்த நிகழ்ச்சி தலைமைக்குத் தெரியாமல் காதும் காதும் வைத்தபடி நடந்து முடிந்திருக்கிறது. அதன் வாப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்றுவரை தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்குச் சேதாரம் ஏற்பட்டுவிடாமல் சௌகரியமாக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அஷ்ரஃபின் மரணத்தின் பின்னர் அவர்கள் முன்னர் இருந்த அவ்வாறே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பேரினவாதத்தின் அனுசாணை அவர்களுக்கு அவசியப்பட்டது. பேரினவாதத்தின் மறைகரங்களும் அவர்களைப் பேணிப் கவனம் செலுத்திக் கொண்டன. அதற்குப் பிரதான காரணம் அனுசரணையைப் பெற்றுக்கொண்ட அவர்கள் முஸ்லிம் அரசியலை ஒழித்துக்கட்டும் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமையாகும். கொள்கலங்கள் வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்ட குற்றச்சாட்டானது தலைமையைத் தலைகுனியச் செய்ததாகவும் 2000ஆம் ஆண்டிள் பாராளுமன்றத தேர்தலுக்கான பேரம் பேசும் சக்தியை அது பலமாக்கிவிட்டதாகவும் ஒரு பலமான கருத்து அப்போது நிலவியது

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அமைச்சின் அதிகாரம் தந்த ஆடம்பாங்களினால்தான் தலைவர் அஷ்ஃாபின் மாணத்தின் பின்னர் தலைமைப்பதவிக்கான அத்தனை தில்லு முல்லுகளும் இடம்பெற்றன. தலைமைப் பதவியானது பிறத்தியாரிடம் சென்றுவிடக் கூடாது என்பதில் அந்த புதுப்பணக்காரர்கள் பல்வேறு சதித்திட்டங்களை உருவாக்கி செயற்பட்டனர். முஸ்லிம் அரசியலின் தலைமை என்பது அதிகாரம் மிக்கதும் ஆடம்பரமானதுமான அமைச்சுப் பதவியொன்றின் கருப்பை என்ற கருத்து முஸ்லிம் வெகுஜனத்தைவிட அரசியலைப் பிழைப்புவாதமாகக் கொண்ட அந்தப் புதுப்பணக்காரர்களின் அனுபவ மூளைக்குள்ளே பயங்கரமாகப் புகுந்து கொண்டது.

இதனால் தலைமைப்பதவி கிட்டாதவர்களும் அமைச்சுப் பதவிக்காக ஆலாய்ப் பறந்தவர்களும் பேரினவாதத்தால் சமூக ஐக்கியத்தைக் கீலங் கீலமாகக் கிழித்தெறிய கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இதன் பிரதான பெறுபேறாக முஸ்லீம் சமூகத்தின் பேரம்பேசும் சக்தி மேலும் மேலும் சிதறடிக்கப்பட்டது முஸ்லிம் சமூகம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பதவிப்பேராசையால்தான் சிதறடிக்கப்படுகின்றது என்ற எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அவர்கள் பேரினவாதம் குட்டக் குட்ட நன்றாகவே தலைகளைக் குனிந்து குனிந்து கொடுத்துக்கொண்டிருந்தனர்,

பேரினவாதத்தின் ஊடுருவல்களை நியாயப்படுத்தியும் அதை எதிர்த்த கோட்பாடுசார் அரசியல் தலைமையைக் கொச்சைப்படுத்தியும்
மக்கள் மத்தியில் பாரிய பிரசாரங்களை அந்த அரசியல் குற்றேவலர்கள் செய்தனர். முஸ்லிம் அரசியல் கோலோச்சிய காலத்தில் கட்சியின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாக்கப்பட்டவர் கட்சியின் புதிய தலைமைக்கு தார்வீசப் பட்டபோது தன் பங்குக்கு அவரும் தொலைக் காட்சிப் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டு இரவோடிரவாக இராஜதந்திரிப் பதவியைப் பெற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு தனியான கட்சி அவசியமில்லை என்ற பேரி னவாதத்தின் தாரக மந்திரத்தை இவர்களே நெட்டுருப் பண்ணவும் ஆரம்பித்தனர். அமைச்சுப் பதவிகளில் தங்களுக்கிருந்த பேராசையினால் தாங்கள் அமைத்த கட்சிகளில் இருந்த முஸ்லிம் என் சொல்லை பேரினவாதத்தின் உத்தரவுக்கிணங்க அகற்றியும் விட்டனர். ரவூப் ஹக்கீம் மாத்திரம் நீதிமன்றம் சென்று முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி அரசியல் இருப்புக்கான உரிமையை மீள உறுதிப்படுத்திக்கொண்டார்.

தொடர்ந்தும் பேரினவாதம் அமைச்சுப் பதவிகள் மூலம் காட்டிக் கொடுப்பவர்களுக்கு நன்றாகத் தீனிபோட்டு சமூகத்தின் உரிமையை விலைபேசிக்கொண்டிருந்தது. நில அபகரிப்பு, பள்ளிவாசல்கள், ஸியாரங்கள் தகர்ப்பு, முஸ்லிம் தனித்துவ ஆடைகளைக் களையுமாறு நிர்ப்பந்தம் என வளர்ந்து வந்து பேரங்காடிகள், தொழிற்சாலைகள் என்பன தீவைப்பு என எல்லைமீறிய அநீதிகள் சமூகத்தின்மீது பிசாசாக ஏவப்பட்டன. தன்மானத்தைப் பலியிட்டுக் கொண்டு தங்கள் கோவணங்களையே தங்களுக்கான தலைப்பாகைகள் ஆக்கி முஸ்லிம் தலைவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட பேரினவாதத்தின் கொந்தராத்துப் பங்கு தாரர்களால் அழுத்கம தாக்குதலின் போது கூட மௌனம்காக்க முடிந்தது. ஆனால் அவர்கள்தான் அப்போது வீராவேஷத்துடன் இயங்கியதாகவும் ரவூப் ஹக்கீம்தான் எதிர் அரசியல் செய்ததின் காரணமாக அச்சப்பட்டு மௌனம் காத்ததாகவும் தங்கள் கைக்கூலிகளைக்கொண்டுபிரசாரங்களை மட்டும் முடுக்கிவிட்டிருந்தனர்.

இந்தத் தலைமைகளின் வளர்ச்சியானது கோட்பாடுசார் முஸ்லிம் அரசியலைக் காட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளை காலத்துக்குக் காலம் சமூகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் தோற்றுவித்தது. இது பேரினவாதத்துக்கு நன்றாக முதுகு சொறியவும் உரிமைகளைப் பற்றிக் கணக்கில் எடுக்காத மந்திரிப் பதவிகளையும் இராஜதந்திரிப் பதவிகளையும் அள்ளியள்ளித் தந்தது. மேலும், அகன்ற நெடுஞ்சாலை உருவாக்கம் முதலிய பெருந்தெருக்கள் புனரமைக்கும் மகா கொந்தராத்து முதலைகளையும் மரவியாபாரிகளையும் மணல் மாபியாக்களையும் அரச தொழில்வாய்ப்புக்களை விலை கூவித்திரியும் தரகு முகவர்களையும், உயர்கல்விக்கான வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களை வியாபாரமாக்கும் கருணையற்ற பேர்வழிகளையும் உருவாக்கிற்று. போதாக்குறைக்கு பேரினவாத சக்தி மிக்க ஊடகங்கள் அவர்களையே அரசியல் அதிகாரத்தின் பலம்வாய்ந்த அதிமானுடர்களாகக் காட்சிப்படுத்தியது. அதனால் மெல்ல மெல்ல முஸ்லிம் வெகுஜனமும் தத்தம் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள தினம் தினம் அவர்களின் அரசியலோடு சங்கமித்தனர்.

மேலும்,அவர்களில் சிலர் பிரதேசவாதத்தைத் தூண்டிவிட்டு தங்கள் தங்கள் ஊர்களை மட்டும் சோடித்துக் காட்டி மற்ற ஊர்மக்களை வாய் பிழக்கச் செய்யவைத்தனர். இதனால் முஸ்லிம் அரசியல் என்ற எண்னாக்கரு உரிமைப் போராட்டம் என்ற மூலமந்திரத்தைப் புறக்கணித்து அபிவிருத்தி அரசியல் என்ற மாயைக்குள் பிரவேசிக்கத் தொடங்கிற்று. இதனால் கோட்பாட்டு அரசியலும் பேரம்பேசும் அரசியலும் காலம் கடந்த செயற்பாடுகளாக மக்களால் நம்பப்பட்டன. தத்தம் வங்கிக் கணக்குகளை பிரமாண்டமாக அதிகரித்துச் செல்லும் பெருச்சாளித்தனமே அரசியல் தலைமையின் உச்சக்கட்ட வரை விலக்கணம் என்ற சமூக நோய் மீண்டும் சமூகத்தைப் பீடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அந்த மூட நம்பிக்கையின் தொடக்கம்தான் உயிர்த்த ஞாயிறின் பயங்கரவாதம் எனலாம். கத்தோலிக்சு மக்களின் உயிர்களைத் துருப்புச் சீட்டாக வைத்து இலங்கை முஸ்லிம்களைக் கூண்டோடு கைலாசம் அனுப்பும் பாரிய பயங்கரவாத சதித்திட்டத்துக்கு சில முஸ்லிம்கள் விலைக்கு வாங்கப்படுவதைக் கூட அந்த மூட நம்பிக்கை சாத்தியமாக்கிற்று, உயிர்த்த ஞாயிற்றின் பேரவலத்தைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களின் இருப்பே கேள்விக் குறியாயிற்று. மைத்திரியின் செல்லப்பிள்ளையாய் இருந்த ஹிஸ்புல்லா. அஸாத் சாலி ஆகியோருக்கு ஆளுனர் பதவி மற்றும் தனிப்பட்ட உடைமைகள் மாத்திரமன்றி உயிர்ப் பாதுகாப்பும் கேள்விக்குறியாயிற்று. அவர்களும் மற்றும் ரிஷாத பதியுதீனும் சமூக ஒற்றுமையைச் சிதறடிப்பதற்காக தாங்கள் கருவியாகப் பாவிக்கப்பட்டு தங்களை வளர்த்துவிட்ட பேரினவாதத்தாலேயே ஓட ஓட விரட்டப்பட்டனர். அவர்களின் பதவிகள் பறிக்கப்படும்வரை சில அரசியல் ஆசாமிகள் உண்ணா விரதம் இருந்தனர். அவர்களின் இழிநிலைக்காக சமூகம் தொண்டைக் குழிக்குள்ளே தன் உயிரை வைத்து பதைபதைத்துக் கொண்டிருந்தது.

அந்த கொலைக்களத் தருணத்தில் சமூகத்தின் குரல்வளைக்கு உள்ளே சிக்கித்தவித்த தம் உயிரைக் காப்பாற்ற தற்காலிகமாகவேனும் அப் பதவிப்பல்லக்கில் இருந்து அவர்கள் கீழே இறங்குவது சமூகத்துக்கு ஆறுதலாக அமையும் என்று அப்பாவி சிறுபான்மைச் சமூகம் நம்பியது. ஆனால், சமூகத்தின் கழிவிரங்கல் நிலையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாது அவர்கள் தத்தம் பதவிப்பல்லக்கில் இருந்து கீழே இறங்கி வரச் சம்மதிக்கவே இல்லை. ஜனாதிபதி மைத்திரி தனது பாஷையில் இந்த வில்லங்கத்திலிருந்து தன்னைப் பாதுகாக்குமாறு அவர்களின் காலில் விழாக்குறையாக வேண்டுகோள் விடுத்தும் பதவி என்ற ஆண்மையோடிருந்து அவர்களும் இறுதிவரை ஆசைப்பட்டனர்.

இதனிடையே தலதாமாளிகையில் இருந்து பேரினவாதத்தின் ஆரப்பாட்ட ஊர்வலம் புறப்பட்டுவிட்டது. கொழும்பு கண்டிவீதியின் பிரதான முஸ்லிம் குடியிருப்புக்களும் உடைமைகளும் பள்ளிவாசல்களும் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களின் இலக்காக இருந்தன. இந்த நிலையில்தான் ரவூப் ஹக்கீமின் துணிச்சலும் விவேகமும் அரவணைப்பும் முஸ்லிம் வெகுஜனத்துக்கு மாத்திரமல்லாது தாங்கள்தான் சமூகத்தின் தலைமைகள் என்று சவால்விட்டுக் கொண்டு சமூகத்தின் பார்வையில் நிருவாணியாக இருந்தவர்களுக்கும் தேவைப்பட்டது. அப்போது ரவூப் ஹக்கீமின் தலைமையில் ஒருமித்துக் கூடிய முஸ்லிம் அமைச்சர்கள் தாங்கள் இராஜினாமாச் செய்வதைத் தவிர வேறு மார்க்கம் இதற்குப் பரிகாரம் தரப்போவதில்லை என்ற அவரின் கூற்றுக்கு முழுவதுமாகத் தலைசாய்த்து உடன்பட்டனர். இதில் பிரதான கட்சியின் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்கள் கூட முன்னணியில் நின்று அதன்படி ஓட்டுமொத்தமாகத் தத்தம் இராஜினாமாக் கடிதங்களை பேரினவாதிகளின் பூச்சாண்டிக்கு அஞ்சிக் கொண்டிருந்த அரசின் முகத்தில் வீசி எறிந்தனர். கடிதங்களை சமர்ப்பித்த பின்னர்தான் ஜனாதிபதி மைத்திரிக்கும் கையைப் பிசைந்துகொண்டிருந்த ரணிலுக்கும் அடுத்த கட்ட நகர்வுக்கான பாதை துலங்கியது.

அதன் பின்னர்தான் தாங்கள் நாட்டின் பொது மக்களிடையே நிருவாணப் படுத்தப்பட்டிருப்பதை பதவிப் பல்லக்கின் சொகுசில் அமர்ந்திருந்த கோமாளித்தனமான நிருவாணிகள் கண்டு கொண்டனர். அதனால்தான் தங்களின் ஆண்மையின் மேதாவிலாசங்களாய் அவர்கள் கருதிக் கொண்டிருந்த அந்தப் பதவிகள் தாங்கள் உச்சா போய்க்கொள்ளமட்டுமே பயன்பட்டதைக் கண்டுகொண்டு அதனை ஒரு உச்ச மனவேக்காட்டோடு ஹிஸ்புல்லாவும் அஸாத் சாலியும் றிஷாட் பதியுதீனும் இராஜினாமாக செய்ய வேறு வழி யின்றி முன்வந்தனர். ஆக சமூகத்துக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. சமூகத்துக்காக தற்போதுவரை குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீமின் கரங்களில் அரசியல் அதிகாரம் இருக்கக்கூடாது என்பதில் மட்டும் அந்த நிலைமையிலும்கூட அவர்கள் கவனமாகவும் உறுதியாகவும் இருந்தனர். ரவூப் ஹக்கீமின் இராஜினாமா உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான் அவர்களும் அதைச் செய்தனர்.

ஆனால், கழுத்துப்போகும் இந்தக் கட்டத்தில் கூட சில தலைவர்களின் சிற்றூழியர்கள் அரசியல் ஆதாயம் தேடிப் புறப்பட்டனர். அது ரவூப் ஹக்கிமையும் உள்ளே அனுப்பும் நரித்தனமான பேராசையின் வெளிப்படுத்தலாகவே அமைந்திருந்தது. ஹக்கீம் 2015ஆம் ஆண்டின் தேர்தலின்போது அடித்து நொருக்கப்பட்ட தனது ஆதரவாளர்களை வைத்தியசாலைக்குப் பார்வையிடச் சென்ற நிழற் படத்தை கபடத்தனமாக வெளியிட்டனர். சமூகத்தின் குரல்வளை நெரிக்கப்படும் இந்த பேரவலம் நிகழும் சந்தர்ப்பத்தில் அந்தப் படங்களை வெளியிட்டு ஹக்கீமுக்கு சஹ்ரானுடன் தொடர்பிருப்பதாகக் காட்சிப்படுத்தினர். இதனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அவரை உள்ளே தள்ளினால் முஸ்லிம்களின் தானைத் தலைவராக தாங்கள் வந்துவிடலாம் என்பது அவர்களின் கேடுகெட்ட கணிப்பாக இருந்தது ஹக்கீமின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நோக்கில் ஓர் அமைச்சரின் ஊழியர்கள் இந்த கபடத்தனமான நாடகத்தை அரங்கேற்றினர். இதுதான் முஸ்லிம் அரசியலின் இடைக்காலகட்ட செயல்வடிவமாக இருந்தது. அத்தகைய கேவலமான எதிரிகளை முஸ்லிம் சமூகம் தனக்குள் அடைகாத்து வைத்திருந்தது.

ஆனாலும், தற்கால பேரினவாதத் தலைமைகள் ஓட்டுமொத்த சிறுபான்மையினரும் மீண்டும் கோட்பாட்டு அரசியலுக்கு திரும்பிவரவேண்டிய ஒரு பாடத்தை தற்போது கற்பித்துக் கொடுத்து விட்டனர். அதனால் அரசியல் ஆதாயம் கருதாத இன்றைய சிறுபான்மை வெகுஜனம் கோட்பாட்டு அரசியலின்பால் மீண்டும் தங்களை வழிநடாததக்கூடிய தலைமையாக ரவூப் ஹக்கீமை இனங் கண்டுள்ளது. ஏனெனில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது அதனை உடனடியாக நிறுத்த வேறு வழியின்றி சர்வதேசத்திடம் தங்கள் பிரச்சினைகளைக் கொண்டு சென்று நிவாரணம் பெற்றுத் தந்தமையை சமூக ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தமையை முஸ்லிம் சமூகம் மறப்பதற்குத் தயாராக இல்லை. தங்களது தூய விசுவாசம் எனும் நம்பிக்கை, கலாசாரம், விழுமியம் மற்றும் அபிவிருத்தி சார்ந்த எந்தப் பிரச்சினையிலும் இந்த உபரித் தலைமைகளைச் சரிகண்டாலும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட பயங்கர வன்மத்தை எந்த முஸ்லிம் ஆணும் பெண்ணும் சிறுவனும் சிறுமியும் மறக்கத்தயாரில்லை. அந்த நன்றிக்கடனுக்காக முஸ்லிம் அரசியல் தலைமையை அவர்கள் இனி கைவிடவும் தயாரில்லை.

இதனை ரவூப் ஹக்கீமின் அண்மைக்கால கிழக்கு விஜயங்களின்போது ஏற்பட்ட இளைஞர்களின் திரட்சியும் ஊடகவியலாளர்களின் மனமாற்றமும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. அத்துடன் தத்தம் ஊர்களைச் சோடித்து மற்ற ஊர்களைப் புறக்கணித்து மாயை காட்டிக்கொண்டிருந்த தலைமைகள் இன்றைய அரசால் கறிவேப்பிலைகளாகப் பாவிக்கப்பட்டு எறியப்பட்டுள்ளமையையும் அந்தந்த ஊர்களிலுளன தன்மானமுள்ள மக்கள் இனங் கண்டுகொண்டனர். பிரதேசவாதமே அரசியல் என்றும் அதில் பூரணமாக முக்குளித்து எழுந்த ஊர்களிலும் ஜனாஸா எரிப்புக்குப்பின்னர் அங்குள்ள தலைமைகளும் அவர்களின் வழிகாட்டல்களும் மக்களிடம் செல்லாக்காசுகளாகி விட்டன. ஆக, முஸ்லிம் மக்களிடத்தே இன்று அபிவிருத்தி மாயையும் பிரதேச வாதமும் பேரினவாதத்தின் சூனிய முடிச்சுக்களை அவிழ்த்துப் பேயோட்டப் பயன்படாது என்ற வெளிச்சம் தற்போது ஏற்பட்டி ருக்கின்றது. இதனைக் கண்டுகொண்ட முஸ்லிம் தலைமை வேறொரு ஐக்கியப்பட்ட புதிய கோட்பாட்டுடன் கூடிய ஒரு புதிய வியூகத்தை நோக்கி நடை பயில்கின்றது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அதன் அறிகுறியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அண்மைக்கால அரசியல் பாதையில் புத்தம் புதியதோர் வியூகம்சார் சுழற்சி ஏற்பட்டிருக்கின்றது. அது போராடி எல்லாவற்றையும் இழந்துவிட்டு கையைப் பிசைந் துகொண்டிருக்கும் தமிழ் சமூகத்தையும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மலையக சமூகத்தையும் இணைத் துக்கொண்டு ஒன்றாகச் செல்லும் புதிய அரசியல் பயணமாகும். தலைவர் அஷ்ரஃப் கூட தன் இறு திக்காலத்தில் இத்தகைய ஒரு பயணத்தையே மேற்கொண்டார். பெரும்பான்மை சமூகத்தின் கட்சிகளோடு இணைந்த பயணமாக இருந்தாலும் வேற்றுமையுள் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை இது கொண்டிருக்கின்றது. அதனால் பேரினவாதம் அமைச்சரவையின் தலைமைப்பதவி ஒன்றின் மீது சிறுபான்மை குறிவைக்கிறது என்று பிரச்சாரம் பண்ணவோ அதன்மூலம் தலைமையின் உயிருக்கு அழிச்சாட்டியம் பண்ண திட்டம் தீட்டவோ அவசியம் ஏற்படாது. அதனால், இப்புதிய வியூகமானது பேரினவாதிகளுக்கும் அவர்களின் தரகு முதலாளிகளுக்கும் ஒரு நில நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அதிசயமான நிகழ்ச்சியன்று அது கேடு கெட்ட மக்கள் விரோத அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு அடிவயிற்றைக் கலக்கினாலும் அதை ஒரு வித்தியாசமான போக்காக நாம் எண்ணத் தேவையில்லை

அது மட்டுமன்றி இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு தங்கள் கரங்களை உயர்த்தியதால் சமூகத்தில் நிருவாணிகளாகத் தோற்றம் காட்டும் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது வாந்திபேதியை ஏற்படுத்தலாம். அதுவும் அவர்களின் இன்றைய கோமாளிக் கூத்தின் மற்றொரு பிரதிபலிப்பே என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், கிழக்கில் இன்ளொரு வகை புதிய கோதாவாரியும் தொற்றத் தொடங்கியிருக்கின்றது. அதாவது 2015ஆம் ஆண்டின் புதிய அரசியல் போக்கிற்கு நாங்களே பிள்ளையார் சுழி போட்டவர்கள், ரவூப் ஹக்கீம் மிதி பலகையில் தொற்றிக்கொண்டு ஏறியவர் என்று கூறிக்கொண்டு கொள்கை அரசியல் செய்பவர்கள் நாங்களே என்று உரிமைக் கோரிக்கை விட்டவர்கள் இன்று முகநூல் முற்றத்தில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு காறித்துப்புகின்றனர். தங்களால் இனியும் வருமானமில்லாமல் அவரின்
ஊடக முகாமுக்குள் இருந்து காற்றுக் குடித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களுக்குள் இருக்க முடியாது என்பதால் பலர் மொட்டுக்களை நாடி சென்றுகொண்டும் இருக்கின்றனர். இதனை அறியாது மாற்றான் தோட்டத்தில் மல்லிகை பறிக்கும் செயற்பாட்டில் தான் நிராயுதபாணியாகவும் நிருவாணியாகவும் இருப்பதை மறந்து தலைப்பாகை கட்ட இன்னும் ஒருகட்சித் தலைவர் ஆசைப்படுகின்றார்.

ஆனால் இவர்களின் அந்தரங்க சுத்தியின்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது வேறோரு ஆக்கபூர்வமான செயற்பாட்டில் தலைவர் ஹக்கீம் கால் வைத்திருக்கின்றார். அது சர்வதேசத்தின் காத்திரமான அவதானத்தைத் தற்போது பெற்றுமுள்ளது. இந்தப் பெறுபேற்றைக் கண்டதும் பிரதேசவாத அரசியல்வாதிகளும் சில கட்சித் தலைவர்களும் மீண்டும் தங்களின் சமூக வலைத்தள ஏவலாளர்களை உசார்ப்படுத்தியுள்ளனர்.

தமிழ், முஸ்லிம், மலையக ஒற்றுமை என்பதை அடிப்படையில் ஜீரணிக்க மறுக்கும் அவர்களும் அவர்களின் சிற்றூழியர்களும் தற்போது ஹக்கீம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துக்கு வக்காளத்து வாங்குவதாக சத்தமிடத் தொடங்கியிருக்கின்றார்கள். இது 2004இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை செய்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தை ஒத்ததாக இருக்கின்றது. இது இந்திய அமைதிப்படையின் காலத்தில் அஷ்ரஃப் பிரகடனம் செய்த இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான அலகைப் பெற்றுக்கொள்ளும் இராஜதந்திர அணுகுமுறையைக் கொச்சைப்படுத்தியமை போன்ற ஒரு செயற்பாடாகும். தலைவர் அஷ்ரஃப் பயணம் செய்த ஹெலிக்கொப்டர் விபத்து அவர் நம்பிக்கையுடன் அழைத்துச்சென்ற கதிர்காமத்தம்பி என்பவர் தற்கொலைக் குண்டுதாரியாக மாறியதால் ஏற்பட்டது என ஒரு ஜோடணையை பேரினவாதத்துடன் சேர்ந்து அப்போது அவிழ்த்துவிட்டனர். அஷரஃப் வாழுங்காலம் எல்லாம் அவரை இனவாதியாகச் சித்தரித்த ஐலண்ட் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட அந்தப் புழுகு மூட்டைக் கட்டுரை பின்னர் நவமணியில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கப்பட்டு, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அஷ்ரஃப் கடைசியாகக் கலந்துகொண்ட சம்மாந்துறைக் கூட்டத்தில் கதிர்காமத்தம்பியையும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் அழைத்துச் செல்ல இருப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அஷ்சஃபால் அப்படி நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட கதிர்காமத்தம்பியை தற்கொலைக் குண்டுதாரியாக மாற்றிய பெருமையும் அப்போது மஹிந்த அரசியலின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அன்றைய அமைச்சரையே சாரும்.

இவ்வாறு முஸ்லிம் அரசியலானது இராஜதந்திரக் காய்களை நகர்த்தும் போதெல்லாம் அதன் எதிரிகள் சமூகத்துக்குள்ளேயிருந்து கொண்டு பாரிய வரலாற்று வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இது அவர்களின் அரசியல் இருப்புக்கும் அமைச்சர் பதவியின் பாதுகாப்புக்கும் உதவியிருக்கின்றதே தவிர சமூகத்துக்கான காத்திரமான அரசியல் பங்குகளைப் பெற்றுக்கொள்ள உதவி அளிக்கவே இல்லை. அதுபோன்றுதான் பேரினவாதத்துக்கு எதிராக சிறுபான்மை என்ற வரையறைக்குள் முஸ்லிம் – தமிழ் ஐக்கியத்தை உருவாக்க ஹக்கீம் கனம் இறங்கும்போது அவர்களும் தங்கள் கச்சையை இறுக்கிக்கொண்டு மக்களைத் திசைதிருப்பக் களம்நோக்கி வருகின்றார்கள். சதிகள் செதுக்கிய சிற்பத்தின் புதிய பரிமாணம் இது- அற்ப சலுகையாளர்கனின் சூனிய முடிச்சுகளுக்கு ஏமாறுவதையே எப்போதும் சந்தித்துக்கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் சமூகம் அவர்களின் நீலிக் கண்ணீரில் மீண்டும் ஏமாறப்போகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கங்கத்தியப்பா (வீரகேசரி 13-11-21 pg4)