சகோ ரவூப் ஹக்கீம் அவர்களிடம் அன்பான வேண்டுகோள்

தாங்கள் சில சமயங்களில் விடுகின்ற அறிக்கைகள் அந்த சமயத்தில் அத்தியாவசிமான அல்லது பெறுமதியானவையாக இருக்கின்றன. நீங்கள் மாற்றுக்கட்சியாக இருந்தபோதும் மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும்போது அவை தொடர்பாக உங்களை ஆதரிக்க நாம் தயங்கவில்லை.

சில சமயங்களில் நீங்கள் விடுகின்ற அறிக்கைகள், வழங்குகின்ற பேட்டிகள் சமூகத்திற்கு எதிர்வினையாற்றக்கூடியதாகவும் இருக்கின்றன. “52 நாள்” சதியின்போது நீங்கள் மேடைகளில் நடந்துகொண்டவிதம் தொடர்பாக அதன் எதிர்விளைவுகள் குறித்து அப்போதே சுட்டிக் காட்டியிருக்கின்றேன். இன்று உங்களை விமர்சிக்கின்ற பலர் அதனை சுட்டிக்காட்டுகின்றார்கள்.

தற்போதைய தவறு
இன்று கொரோனாவினால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது மக்களைப்பற்றிக் கவலையில்லாமல் அரசாங்கம் தேர்தலை நடாத்தமுற்படுகின்றது; என்ற விமர்சனம் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பலராலும் பேசப்படுகிறது. இது அரசாங்கத்தின் செல்வாக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் திரு சுமந்திரன் அவர்களின் சில கருத்துக்கள் அரசாங்கத்தின் இந்த வீழ்ச்சியை தூக்கி நிறுத்துவதாக அமைகிறது. அதற்கு நீங்களும் ஒத்தடம் கொடுப்பது அரசாங்கத்திற்கு இன்னும் வாசியான நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஜூன் 20ம் திகதிக்கு தேர்தலை ஒத்திவைத்தமையானது பாராளுமன்றக் கலைப்பை வலுவற்றதாக்கியிருக்கின்றது. ஏனெனில் சரத்து 70(5) இன் பிரகாரம் மூன்று மாதங்களுக்குமேல் நாடு பாராளுமன்றம் இல்லாமல் இருக்கமுடியாது; எனவே, கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் உயிர்பெற்றுவிட்டது; என்ற கருத்தை திரு சுமந்திரன் முன்வைத்துவருகிறார்.

மூன்று மாதத்திற்குள் புதிய பாராளுமன்றம் கூடவில்லையானால் தீர்வு என்ன? என்பது ஒரு கேள்வி. அந்தத்தீர்வு பழைய பாராளுமன்றம் மீண்டும் உயிர்பெற்றதாகக் கருதுவதுதான் என்பது எந்த சட்டத்தின் அல்லது தத்துவத்தின் அடிப்படையில் என்பதை அவர் கூறவில்லை. அதுமாத்திரமல்ல, சில விசேட சூழ்நிலையில் ( பாராளுமன்றத் தேர்தலின்போது ஜனாதிபதித் தேர்தலும் குறுகிட்டால்) நான்கு மாதங்கள்வரை பாராளுமன்றம் கூடுவதைத் தாமதிக்கவும் அரசியலமைப்பு இடம் தருகிறது. [சரத்து 70(6)]

அதாவது மூன்று மாதங்களுக்குமேல் எந்தக்காரணம்கொண்டும் பாராளுமன்றம் இல்லாமல் நாடு இருக்கமுடியாது; என்பதை மேற்படி சரத்து பொய்ப்பிக்கிறது. விசேட சூழ்நிலையில் அதைவிட அதிக காலம் புதிய பாராளுமன்றம் கூடுவது பிற்படுத்தப்படலாம்; என்பதை அது காட்டுகிறது. இது தொடர்பாக விரிவான ஓர் ஆக்கத்தை பின்னர் எழுதுவதற்கு இருக்கிறேன்,இன்ஷாஅல்லாஹ்.

அதேநேரம், திரு சுமந்திரனின் கருத்தை மையமாகவைத்து எதிர்க்கட்சியிலுள்ள சிலர் பாராளுமன்றம் மீண்டும் உயிர்பெற்றுவிட்டது. எனவே, சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டும்; என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் ஆளுந்தரப்பைச் சேர்ந்தசிலர் திரு சுமந்திரன் அரசியலமைப்பின் சில சரத்துக்களை சாட்டாகவைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற சதிசெய்கிறார். தற்போதைய நாட்டின்நிலை ஒரு தேர்தல் நடாத்தக்கூடியதாக இல்லாதபோதும் இந்தச் சதிகளில் இருந்து நாட்டைப்பாதுகாக்க அவசரமாக தேர்தல் நடாத்தப்படவேண்டும்; என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணமாக, மொட்டு வேட்பாளர் பேராசிரியர் சன்ன ஜயசுமானவின் கூற்றை வாசியுங்கள்.

அதிகார ஆசையில் இந்த அரசாங்கம் மக்களைப்பற்றிக் கவலைகொள்ளாது, தேர்தலிலேயே குறியாக இருக்கின்றது; என்ற பிரச்சாரம் பெரும்பான்மை மக்களிடம் எடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு சமயத்தில் இவர்களின் இக்கருத்துக்கள் அரசாங்கம் அதிகார ஆசையில் தேர்தலுக்கு அவசரப்படவில்லை; மாறாக, இவ்வாறான சதிகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றத்தான் தேர்தலுக்கு அவசரப்படுகிறது; என்று நியாயப்படுத்த துணைபோகின்றன.

போதாக்குறைக்கு நீங்களும் அவர்களுடன் இணைந்திருக்கிறீர்கள். சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டுமென்கின்றீர்கள். அண்மைக்காலமாக சுமந்திரன் கூறுவதில் பலவற்றை நீங்களும் கூற ஆரம்பித்திருக்கிறீர்கள்.

மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சித் தலைவராக முடியாது; என்றும் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையையே அரசியலமைப்புக்கு முரணாக அரசியலமைப்பின் பேரில் அவர் கேள்விக்குட்படுத்தியபோதும் நீங்களும் அதில் இணைந்துகொண்டீர்கள். அதனை அப்பொழுதே சுட்டிக்காட்டியிருந்தேன்.

இப்பொழுதும் அரசியலைப்பைத் தலைகீழாக மாற்றி பாராளுமன்றக்கலைப்பு செயலிழந்துவிட்டது; என்று அவர் கூறினால் நீங்களும் அதற்குப்பின்னால் செல்கிறீர்கள். இன்று தமிழர்களுக்கெதிரான இனவாதப் பிரச்சாரத்தைவிட முஸ்லிம்களுக்கெதிரான இனவாதப் பிரச்சாரம் வீரியம் கூடியது; என்பது உங்களுக்குத் தெரியாதா?

சுமந்திரன் சதிசெய்கிறார்; என்று சொல்பவர்கள், சுமந்திரனும் ஹக்கீமும் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள். எனவே, ஒன்றுபடுங்கள் இந்த சதியை முறியடிக்க; என்று பெரும்பான்மையை ஒன்று திரட்டப் போகிறார்கள். அதற்குத் துணைபோகிறீர்களா?

தேர்தல் ஆணைக்குழுவிற்கெதிரான விமர்சனம்
ஜூன் 2ம் திகதிக்கப்பால் தேர்தலை ஒத்திப்போட்டதன்மூலம் ஓர் அரசியலமைப்புப் பிரச்சினை தோன்றியிருக்கின்றது; என்பது உண்மை. அதற்குக் காரணம் சரத்து 70(7) இன்கீழ் பாராளுமன்றம் கூட்டப்படாமை அல்லது நீதிமன்றத்தையாவது நாடாமல் விட்டமை. [ 70(7) இன்கீழ் பாராளுமன்றம் கூட்டுவதென்பது வேறு; பாராளுமன்றக் கலைப்பு செயலிழந்துவிட்டது; என்பது வேறு என்பது நீங்கள் அறியாததல்ல]

இந்த நிலையில்தான் தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அத்தீர்மானத்தை எடுக்கவேண்டியேற்பட்டது. ஜூன் 2ம் திகதிக்குப்பின் தேர்தல் ஒத்திப்போடப்பட்டது பிழையென்றால் மே 28ம் திகதியைத் தீர்மானித்திருக்க வேண்டுமென்கிறீர்களா? அரசாங்கமும் அதைத்தான் எதிர்பார்த்ததாக கூறினார்கள். அதையா, நீங்களும் எதிர்பார்த்தீர்கள்.

திகதி குறிக்காமல் தேர்தலை ஒத்தப்போடமுடியாது; என்ற கூற்றை விமர்சிக்கிறீர்கள். திகதி குறிக்காமல் எந்த சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைக்கமுடியும்; எனக்கூறமுடியுமா?

ஒரு புறம் ஜூன் 20ம் திகதிகூட தேர்தல் நடாத்துவது சாத்தியமில்லை. இன்னும் காலஅவகாசம் வேண்டும்; என்கிறீர்கள். நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஜூன் 2ம் திகதிக்குப்பின் ஒத்திவைத்தது அரசியலமைப்புக்கு விரோதம்; என்கிறீர்கள். அதேநேரம் மேலும் ஒத்திவைக்கவேண்டும்; என்றும் நீங்களும் நாமும் கோருகின்றோம்.

அவ்வாறாயின் இன்னும் பிழை செய்யுங்கள்; என்று ஆணைக்குழுவைக் கோருகின்றோமா? ஜூன் 20 திகிதிக்கு ஒத்திவைத்ததையே நாம் விமர்சித்துக்கொண்டு அதற்கு அப்பாலும் ஒத்திவையுங்கள் என்றும் கேட்டால் அதற்கு என்ன அர்த்தம்?

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு சமூகத்தின் தலைவர். பொது வெளியில் உங்கள் கருத்துக்களுக்கு பெறுமதியுண்டு. அப்பெறுமதிகள் நேரானவையா? எதிரானவையா? சமூகத்திற்கு நன்மையைக் கொண்டுவருமா? தீமையைக் கொண்டுவருமா? என நிதானமாக சிந்தித்து கருத்துக்களை முன்வையுங்கள். உரத்துப்பேசவேண்டிய இடத்தில் உரத்துப் பேசவேண்டும். நிதானம் பேணவேண்டிய இடத்தில் நிதானம் பேணித்தான் ஆகவேண்டும். “எதை, எந்த இடத்தில்?” என்பதில்தான் நமது சமயோசிதம் தங்கியுள்ளது.

நீங்கள் விடுகின்ற இரண்டொரு அறிக்கைகள் சிறப்பானதாக இருக்கும்போது அவற்றிற்கு கிடைக்கும் வரவேற்புகள், அவை தரும் உற்சாகம் எதை வேண்டுமானாலும் எழுதுவோம்; பேசுவோம்; என்ற நிலைக்கு உங்களை இட்டுச் செல்லக்கூடாது.

அதேபோல் சமூகத்திற்காக நீங்கள் சுயமாக சிந்திக்கவேண்டும்; உங்கள் ஆலோசகர்கள் சமுகத்திலுள்ள, சமூகத்தைப் புரிந்தவர்களாக இருக்கவேண்டும். அடுத்த கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அதையேசெய்து சமூகத்தைப் இக்கட்டிற்க்குள் தள்ளிவிடக்கூடாது.

இது உங்களுக்கெதிரான விமர்சனக கட்டுரையல்ல.

தலைவர்கள் என்ற மட்டத்தை அடையும்போது நமக்கு நிதானம் அவசியம்; என்பதை நினைவூட்டூவதற்காக ஒரு இஸ்லாமிய சகோதரனாக இடும்பதிவு.

எதிர்வரும் ரமளானில் அனைத்து நோன்புகளையும் பிடித்து பாவமன்னிப்பு பெற்று நரகவிடுதலை பெற்ற கூட்டத்தில் நம் அனைவரையும் இறைவன் சேர்ப்பானாக என்ற பிரார்த்தனயோடு.

வை எல் எஸ் ஹமீட்

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page