மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தடுக்கவே சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய புதிய வர்த்தமானி

அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.

அதற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தடுத்துநிறுத்துவதற்காகவே சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை அரசாங்கம் எத்தகைய சட்டதிட்டங்களைப் பிரயோகித்து எம்மை அடக்குவதற்கு முயற்சித்தாலும், அவற்றைக்கடந்து எதிர்வரும் 16 ஆம் திகதி கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் மாபெரும் மக்கள் போராட்டம் நிச்சியமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் ஒன்றுகூடல்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டல்கள் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் நாட்டுமக்கள் அனைவரும் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். எனவே மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவர்களின் சார்பில் அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப்போரடவேண்டிய கடப்பாடு பிரதான எதிர்க்கட்சியாக எமக்கு இருக்கின்றது. 

அதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு எமது கட்சி திட்டமிட்டுள்ளது. அதன் பின்னரேயே அரசாங்கம் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் ஆராய்வதுடன் அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருக்கின்றது. 

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனம், அமைச்சுக்களின் நிகழ்வுகள், திறப்புநிகழ்வுகள் உள்ளடங்கலாக ஆளுந்தரப்பின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்டிருக்கக்கூடிய எந்தவொரு நிகழ்விலும் சுகாதார வழிகாட்டல்கள் தாக்கம் செலுத்தாது.

கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த சுகாதார மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் அரசாங்கத்தினால் அண்மையில் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது அனைத்துத் துறைகளும் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளன.

குறிப்பாக பஸ் மற்றும் புகையிரதம் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துச்சேவைகளில் மக்கள் முண்டியடித்தவாறு பயணிப்பதை அவதானிக்கமுடிகின்றது. அவ்வாறிருக்கையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தவுள்ள போராட்டத்தை முடக்கும் வகையில் சுகாதார அமைச்சர் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இன்றளவில் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதுடன் அவற்றுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்தலின் ஊடாகப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்ட தற்போதைய அரசாங்கம், அதற்கு மேலதிகமாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றிக்கொண்டது.

அதுமாத்திரமன்றி அண்மையில் அத்தியாவசியப்பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்தல் என்பவற்றுக்காக அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்த அரசாங்கம், அதற்கென புதிதாக ஆணையாளர் ஒருவரையும் நியமித்தது. இவ்வளவு அதிகாரங்கள் இருந்தபோதிலும், அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாதுபோனமை குறித்து அரசாங்கம் வெட்கமடையவேண்டும். குறைந்தபட்சம் அத்தியாவசியப்பொருட்களுக்கான கட்டுப்பாட்டுவிலைகளைக்கூட அரசாங்கத்தினால் உரியவாறு பேணமுடியவில்லை.

இவற்றுக்குக் காரணம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியோ அல்லது டொலருக்கான பற்றாக்குறையோ அல்ல. மாறாக அரசாங்கத்திற்குள் இடம்பெற்ற மோசடிகளே இவற்றுக்குக் காரணம் என்று அரசகட்டமைப்புக்களின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சமையல் எரிவாயு, சீனி, நனோ நைட்ரஜன் உரம் ஆகியவற்றின் இறக்குமதிகளின் ஊடாகப் பெருமளவான நிதிமோசடி இடம்பெற்றிருக்கின்றது. எனவே அரசாங்கம் எத்தகைய சட்டதிட்டங்களைப் பிரயோகித்து எம்மை அடக்குவதற்கு முயற்சித்தாலும், இவையனைத்திற்கும் எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் மாபெரும் மக்கள் போராட்டம் நிச்சியமாக நடைபெறும் என்று குறிப்பிட்டார்.  

(நா.தனுஜா)-வீரகேசரி-