காணாமல்போன சிறுமிகள் மூவரும் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்! 

கணாமல்போனதாக கூறி தேடப்பட்டு வந்த கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

தமது அயல் வீடொன்றில்  இருந்த போது பொலிஸார் இவர்களை கண்டுபிடித்து மீட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.  

எவ்வறாயினும் இந்த சிறுமிகள் மூவரும்  நேற்று (9 )வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.

நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி திங்கள் முதல் இவர்கள் மூவரும் காணாமல் போயுள்ளதாக  வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

காணாமல்போன மூன்று சிறுமிகளில் இருவரின்  தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் நேற்று (9)கொழும்பு பிரதான நீதிவான் புத்திக்க சி ராகலவுக்கு  பி அறிக்கை ஊடாக அறிவித்திருந்தனர்.

 இந்த சிறுமியர் மூவரும் கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு  நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி சென்றுள்ளதாகவும், மீள அவர்கள்  கொழும்புக்கு திரும்பி தமது வீட்டுக்கு அருகே உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

 எவ்வாறாயினும்  இவ்வாறு அவர்கள் அனுராதபுரம் செல்ல காரணம்,  மீள அயல் வீட்டில் பதுங்கி இருக்க காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வெளிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னதாக  தனது கையடக்கத் தொலைபேசியுடன், இந்த சிறுமிகள் மூவரும்  நேற்றுமுன்தினம்  ( 8) பயணப் பைகளையும் சுமந்த வண்ணம் முச்சக்கர வண்டியொன்றில் காலை 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறுகின்றமை சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக  தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் இல்லை என  சிறுமிகளின் தாயார் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  13 வயது, 14 வயது மற்றும் 15  வயதுடைய சிறுதிகளே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

Read:  அரிசி மாஃபியாவுக்கான அரசாங்கத்தின் பதில்

-வீரகேசரி-