இன்று ஆசிரியர்கள் சமுகமளிப்பர், போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்

இன்று ஆசிரியர்கள் சமுகமளிப்பர் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை வேறு வடிவத்தில் முன்னெடுப்பதற்கு அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கும், அதனை தவிர பாடசாலைகளின் வேறு அலுவல்கள் மற்றும் கல்வி அலுவலகங்களுடன் தொடர்புடைய ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபட மாட்டோம் என்று அந்தச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை இன்றைய தினத்தில் நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் அந்தச் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பாக அதிபர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இதன்படி பாடசாலைக்கு அதிபர், ஆசிரியர்கள் சமுகமளிப்பார்கள். இந்நிலையில் ஜூலை 12ஆம் திகதி முதல் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கும் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள போதும், இதுவரையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகள் முன் வைக்கப்படவில்லை. ஆனாலும் பிள்ளைகளின் தேவைக் கருதி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.

எனினும் தமது போராட்டத்தை வேறு வடிவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று 25 ஆம் திகதி முதல் அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சென்றாலும், தீர்வுகள் வழங்கப்படும் வரையில் முற்பகல் %.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுப்பர்.

Read:  அத்துவைத சிந்தனை - ACJU அ.இ.ஜ உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்

இந்தக் காலப்பகுதியில் வேறு பணிகள் எதனையும் செய்யமாட்டார்கள். பாடசாலைகளுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்கள், அடையாள அட்டைகளை தயாரித்தல், கல்வி அலுவலகங்களுக்கு தகவல்களை வழங்குதல், ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட வேறு பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினத்தில் பிற்பகல் 2 மணி முதல் நாடு முழுவதும் அந்தந்த நகரங்களில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஒழுங்குவிதிகளுடன் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 25-10-21