நாடு முற்றாக இருளில் மூழ்கும்! – மின்சார சபை தொழிற்சங்கம் எச்சரிக்கை!

நாடு முற்றாக இருளில் மூழ்கும்! இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணி எச்சரிக்கை

கெரவலப்பிட்டிய அனல் மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடாவிட்டால் நாடு முற்றாக இருளில் மூழ்குமளவுக்கு தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் என்று இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.

எமது போராட்டம் தொடர்பாக எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாகவும், அதன்பின்னர் அரசாங்கம் தீர்வை முன்வைக்காவிட்டால் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு செல்வோம் என்று அந்த கூட்டணி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணியின் ஏற்பாட்டாளரான ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளதாவது,

இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை நடத்த முடியாத நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார். எவ்வாறாயினும் நாங்கள் அனைத்து மின்சார ஊழியர்களையும் வீதிக்கு இறக்குவோம். இது தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவித்தலை விடுப்போம்.

இது நாட்டின் பிரச்சனையே இதனால் இதில் எங்களுக்கு பொறுப்புகள் உள்ளன. இதன்படி அனைத்து ஊழியர்களையும் நாங்கள் கொழும்புக்கு கொண்டு வருவோம். அதன்போதும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்றால் எமது போராட்டங்களை கடுமையாக்க நேரிடும். நாங்கள் வேலைநிறுத்தத்திற்கு சென்றால் மக்களுக்கு தொலைக்காட்சியை பார்க்கவோ, வானொலிகளை கேட்கவோ முடியாது போகும்.

நாடு இருளில் உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து வேலைக்கு செல்லுங்கள் என்று எங்களை கூற வேண்டாம். மின்சார சபை, பெட்ரோலியம் மற்றும் துறைமுக துறைகள் வேலை நிறுத்தம் என்றால் அது நாட்டுக்கு ஆபத்தானதே. ஆனால் இந்த நாட்டை பாதுகாப்பதற்கு வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 25-10-21