இலங்கையை வியப்பில் ஆழ்த்திய பிரசவம் (முழு விபரம்)

“பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயின் ஆபத்தான நிலைமை கருதி தாயினதும் சேய்களினதும் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.”

தாய்மை என்பது அபூர்வமானது. மனிதர்களிடையே மாத்திரமல்ல விலங்குகளிடம் கூட அதற்கு தனி இடமுண்டு. அசாதாரணமான பிரசவம் ஒன்று கடந்த 21 ஆம் திகதி இந் நாட்டில் நிகழ்ந்தது. தாயொருவர் ஒரே சூலில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த மழலைகளில் மூன்று ஆண் பிள்ளைகளும் மூன்று பெண்பிள்ளைகளும் அடங்குகிறார்கள். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்த மழலைகள் தற்போது நலமாக உள்ளார்கள். இதற்கு முன்னர் ஒரே சூலில் ஐந்து பிள்ளைகள் இருமுறை பிறந்துள்ளார்கள். தாயின் அன்பு காரணமாக இரத்தம் பாலாக சுரக்கிறது. இந்த மழலைகளின் பிறப்பு நாட்டில் அனைவரது மனதில் விவரிக்க முடியாத உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைப் பாசம் என்பது அதுதான். இந்த ஆறு பிள்ளைகள் பிரசவித்த தாய்க்கும் தந்தைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து அந்தக் கதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தப் பிள்ளைகளின் தாய் திலினி வாசனா, (31) அனுராதபுரத்தில் வசிப்பவர். பிள்ளைகளின் தந்தை பிரபாத் உதயங்க, (35) வவுனியாவில் வசிப்பவர். இருவரும் கல்விக்கு முதலிடம் அளித்தவர்கள். அவ்விளைஞன் பொறியியலாளராக கடமையாற்றுவதோடு, அந்த யுவதி தொழில்நுட்பத்துறையில் கடமையாற்றுகிறார். இவர்கள் தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்தாலும் அவர்களின் குடும்பத்தாரிடையே நட்பு மாறவில்லை. அந்த உறவை மேலும் பலப்படுத்தும் முகமாக அவர்களின் திருமணம் அமைந்தது.

திருமணத்தின் பின்னர் அவர்களிருவரும் பிள்ளைப் பேற்றை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ”நீங்கள் விரும்புவது ஆண் பிள்ளையா? பெண் பிள்ளையா?” ஒரு சந்தர்ப்பத்தில் தனது கணவரிடம் அவர் கேட்டார். இவ்வாறு கேட்பது எல்லா தம்பதியினருக்கும் வழக்கமான ஒரு விடயமாகும். இறுதியில் பிறந்தது ஆணா பெண்ணா என்ற கேள்விக்கு இடமில்லை. அவ்வாறான உரையாடல்கள் இவர்களிடமும் காணப்பட்டது.

அவர் முப்பத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் கருத்தரித்தார். நாட்கள் வாரங்களாக மாறின. கணவருக்கு பிறக்கப்போகும் பிள்ளையினதும் தாயினதும் நலன் முக்கியமாக இருந்தது. அதனால் அவர்களது பெற்றோர்களும் இவர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தினார்கள். ஒரு நாள் அவரை பரிசோதித்த டாக்டர் அவர்கள் இருவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உங்களுக்கு கிடைக்கவிருப்பது ஒரு குழந்தை அல்ல பல குழந்தைகள் என கூறினார். ‘நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்? என எண்ணினார்கள். கணவரும் உறவினர்களும் மனைவியின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தினார்கள். டாக்டர்களும் அவர் குறித்து கூடிய கவனம் எடுத்துக்கொண்டார்கள்.

Read:  ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்கிறார் ஜயசுமான

கொரோனா தொற்று நாட்டை எல்லா புறமும் தாக்கிய வேளையில் எல்லா தாய்மார் மீதும் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டது. இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட அவர் மிகவும் அவதானமாக நடந்து கொண்டார். அவர்கள் மகப்பேறியல் விசேட வைத்தியரான டாக்டர் பேராசிரியர் டிரான் டயஸை தம்பதியினர் சந்தித்தார்கள். வைத்திய பரிசோதனையின் பின் இரண்டு குழந்தைகள் அல்ல ஆறு குழந்தைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

குழந்தை பிறப்பதற்கான நேரம் நெருங்கியது. அவரின் இதயத்துடிப்பு அதிகரித்ததது. அவரது இதயத் துடிப்பு மாத்திரமல்ல அவரை சுற்றி இருந்தவர்களின் இதயத்துடிப்பும் அதிகரித்தது. அதனால் இவர்களுக்கான ஆசீர்வாதத்தை பெற சமய நிகழ்வுகளும் நடை பெற்றன. வைத்திய பரிந்துரைகள் ஆலோசனைகள் என்பவற்றை பின்பற்றி பிரசவத்துக்கு தயாரானார் . அவர்கள் அதற்காக தனியார் வைத்தியசாலை ஒன்றை தெரிவு செய்தார்கள். வைத்தியர் குழுவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் டிரான் டயஸ் ஆவார். அனுபவங்கள் பல மிகுந்த, புகழ்பெற்ற திறமையான டாக்டரான அவர் பல பரிசோதனைகளின் பின்னர் பிரசவத்துக்கான நாளைக் குறித்தார். இதற்கான சிசேரியன் சத்திரசிகிச்சை மிகவும் சிக்கலானது என அனைவரும் அறிவார்கள். ஒரே தடவையில் 6 குழந்தைகள் பிறப்பது முதல்முறை என்பதாலும் அவ்வாறான அனுபவத்துக்கு முகம்கொடுக்கும் தாயினதும் சேயினதும் நலன் குறித்த அக்கறையையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்தார்கள்.

ஒரு பிள்ளையை எதிர்பார்த்தவர்களுக்கு ஆறு பிள்ளைகள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் சிக்கலான நிலைமைக்கு தாயானவர் மனோ ரீதியாகவும் முகம் கொடுக்க தேவையான நட வடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக கணவரின் ஒத்துழைப்பும் டாக்டர்களுக்கு கிடைத்தது. கருவுக்கு முப்பத்தி எட்டு வாரங்கள் பூர்த்தியான பின்னர் பிரசவம் நடைபெறுவது இயற்கை ஆகும். இரட்டை குழந்தைகளாக இருந்தால் முப்பத்தாறு வாரத்தில் பிரசவத்தை மேற்கொள்ளலாம். ஆனால் ஆறு குழந்தைகள் இருக்கும் போது என்ன செய்வது என்பது குறித்த அனுபவம் இருக்கவில்லை.

Read:  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்

ஒரு வாரத்துக்கு முன்னர் தாயின் ரத்த அழுத்தம் அதிகரிப்பதையும் மற்றும் இரண்டு குழந்தைகளின் ரத்த ஓட்டம் குறைவதையும் டாக்டர்கள் அவதானித்தார்கள். அவ்வேளையில் முப்பத்தொரு வாரம் பூர்த்தி அடைந்திருந்தது. அதனால் ஒரு வாரத்துக்குள் பிரசவத்தை நடத்த டாக்டர்கள் தீர்மானித்தார்கள். பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட தாயின் ஆபத்தான நிலைமை கருதி தாயினதும் சேய்களினதும் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. தேவையான உபகரணங்களோடு வைத்தியர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். டாக்டர்களும் தாதிகளும் விசேட பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர். சிசேரியன் சத்திரசிகிச்சையின் போது தாய்க்கு அதிகளவு இரத்த இழப்பு ஏற்படாமல் குறுகிய காலத்தில் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஆறு குழந்தைகள் காரணமாக தாயின் எடையும் அதிகரித்திருந்தது. அதுவும் வைத்தியர்களுக்கு சவாலாக காணப் பட்டது. இந்த அனைத்து சவால்களுக்கு முகம்கொடுத்து கடந்த 21ஆம் திகதி அதிகாலை 12.16 க்கும் 12.18 க்கும் இடையில் இரண்டு நிமிட நேரத்தில் ஆறு குழந்தை பிறப்பையும் மேற்கொள்ள டாக்டர்கள் உள்ளிட்ட தாதியர் குழுவினரால் முடிந்தது. இதற்காக 32 டாக்டர்கள் கொண்ட குழுவினர் இணைந்திருந்தார்கள்.

அதன்படி 21 ஆம் திகதி இலங்கை வைத்தியத் துறையின் வரலாற்றில் விசேடமான நாளாகும். ஏனென்றால் மிகவும் அபூர்வமான ஆறு குழந்தைகளின் பிரசவத்தை வெற்றிகரமாக நடத்தியது இலங்கையின் மருத்துவர் குழாம்.

சத்திரசிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தைகள் உடனடியாக சிறுவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள். பிள்ளைகளின் சுகாதார நலன் கருதி ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியாக வைத்தியர் ஒருவரும் மற்றும் தாதிகள் இருவரும் நியமிக்கப்பட் டுள்ளார்கள். முதலில் பிறந்த குழந்தை பெண் குழந்தையாகும். 1610 கிராம் எடை கொண்டது. இரண்டாவதாக, மூன்றாவதாக நான்காவதாகப் பிறந்தவர்கள் ஆண் பிள்ளைகள் ஆறாவது பெண் பிள்ளை. 830 கிராம். சிசேரியன் சத்திரசிகிச்சையின் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாயார் கண்காணிக்கப்பட்டு வருகின்றார். அவரின் உடல் நலம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து ஒரு வார காலம் கண்காணிப்பில் வைத்திருக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளார்கள். இந்த விசேட சத்திரசிகிச்சையை மேற்கொண்ட விதம் பற்றி விசேட வைத்திய நிபுணர் டாக்டர் டிரான் டயஸ் கூறுகையில்

Read:  அரிசி மாஃபியாவுக்கான அரசாங்கத்தின் பதில்

“6 குழந்தைகள் ஒரே சூலில் கருத்தரித்தது அபூர்வமான சம்பவமாகும். உலகில் இவ்வாறான சம்பவங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. இலங்கையில் அவ்வாறான சம்பவம் நிகழவில்லை. இந்தத் தாய் சில வாரங்களுக்கு முன்னர் எம்மை சந்திக்க வந்தார். அவ்வேளையில் நாம் அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதன் பின்னரே கருவில் ஆறு குழந்தைகள் இருப்பதை உறுதி செய்தோம். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து முப்பத்தொரு வாரத்தில் குழந்தை பிறப்பை மேற்கொள்ளவது நல்லது என முடிவு செய்தோம். அதன்படி கடந்த 21ஆம் திகதி அதிகாலை சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் அந்தத் தாயார் ஆரோக்கியமான 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்.

ஆறு பிள்ளைகளின் தந்தை தனது மகிழ்ச்சியை இவ்வாறு தெரிவித்தார். ”ஒரு குழந்தையைத்தான் எதிர்பார்த்தோம். ஒரே நேரத்தில் ஆறு குழந்தைகள் கிடைத் துள்ளன. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இச்சந்தர்ப்பத்தில் டாக்டர்களுக்கும், தாதிகளுக்கும் மற்றும் வைத்தியசாலைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரசவம் நடைபெறும் வரை நான் மகிழ்ச்சி, கவலை என்ற இரண்டையும் அனுபவித்தேன். டாக்டர்கள் சரியானதை சரியான நேரத்தில் செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். மனதில் உள்ள மகிழ்ச்சியை வார்த்தைகளில் கூற முடியாதுள்ளது.”

சிரான் ரணசிங்கர, ரன்மலி சோமசிறி (தமிழில்: வீ.ஆர்.வயலட்) தினகரன் 24-10-21