அரச சேவை ஓய்வு நிலையாளர்களுக்கு (2016 – 2019) ஏற்படுத்தப்பட்ட பாதிப்பை நீக்குதல்

இலங்கை ஜனநாயகக் குடியரசின் ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தால் ஒய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடை அளித்தல் (திறைசேரி 79) பத்திரத்தில், 01.01.2020 முதல் வழங்குவதற்காக குறிப்பிடப்பட்டிருந்த கொடுப்பனவுத் தொகையானது தற்போதைய அரசின் அமைச்சரவை தீர்மானம் ஒன்றினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமையால் 2016 & 2019 வரை அரச பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 01.01.2020 முதல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பாத்திருந்த உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுத்தொகையை இழந்து ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர்.

இதன் மூலம் அவரவர் பெற்ற சம்பள அளவுத்திட்டங்களுக்கமைய அண்ணளவாக ரூபா 6000 முதல் ரூபா 20000 வரை மாதாந்தம் ஓய்வுநிøயாளர்கள் பெறவேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவுகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இவைதவிர ஓய்வூதிய கொடை அளித்தல் பத்திரத்தின் அடிப்படையில் வங்கிகளிலிருந்து கடன் பெற்ற ஓய்வு நிலையாளர்கள் இன்று செய்வதறியாதுள்ளனர். தற்போதைய வாழ்கைச் செலவு உயர்வை சமாளிப்பதற்கும் உறுதுணையாக கைகொடுக்கவிருந்த கொடுப்பனவு மறுக்கப்பட்டதனால் கடினமான வாழ்கைப் போராட்டத்தை நடத்த வேண்டியவர்களாகியுள்ளனர்.

இதுதொடர்பாக பாராளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகளால் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இவ்வாறாக பாதிக்கப்பட்வர்கள் 100869 பேர் என சம்பந்தப்பட்ட ராஐங்க அமைச்சர் ஒருவரின் பதிலில் இருந்து தெரிய வந்துள்ளது

2016 ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றுநிருபம் இல 3/2016 இன் பிரிவு 5.2 இற்கமைய 01.01.2016 முதல் 31.12.2019 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு இச்சுற்றுநிருபத்தின் அட்டவணை 1 இற்கமைந்த முழுமையான சம்பள அளவுத்திட்டம் 01.01.2020 முதல் செயற்பட ஆரம்பித்ததும் 2016 முதல் 2019 வரையான காலத்தில் ஓய்வு பெற்ற அரசபணியாளரின் ஓய்வூதியமும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய முழுமையான சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய 11.11.2019 இல் நடைபெற்ற அமைச்சரவைகூட்ட தீர்மானத்துக்கமைய 10.12.2019 திகதிய பொது.நிர்வாக சுற்றறிக்கை இல 35/2019., இன் படி 2016 & 2019 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு இல.3/2016 சுற்று நிருபத்தின் அட்டவணை 1 இன் படியான முழுமையான சம்பளத்தை அடிப்படையாக கொண்டு ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க அனுமதிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடாத்தப்படவிருந்ததால் 20190813 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கிணங்க, 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும் வரை, 2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 30 ஆம் திகதிவரையான முதல் நான்கு மாதங்களுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளை பேணுவதற்கு தேவைப்படும் நிதி ஏற்பாடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்படும் இடைக்கால கணக்கொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் 02.01.2020 இல் கூடிய பதிய அமைச்சரவை 10.12.2019 திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இல 35/2019. படியான அட்டணை 1 இற்கு அமைந்த முழுமையான சம்பளத்தின் அடிப்படையிலான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்து 20.01.2020 திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இல 35/2019.(ஐ) உம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் 01.01.2016 முதல் 31.12.2019 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 01.ஜனவரி.2020 இல் கிடைக்கவிருந்த ஓய்வூதிய தொகை கிடைக்காமல் போனது.

மேற்படிகாலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு இது துரதிஷ்டமாகவும் எதிர்பாராத இழப்பாகவும் அமைந்தது. இவ்வாறு ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு புலனாகக்கூடிய நியாயமாக காரணம் எதுவும் .இன்றிய குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது இதனை ஆட்சேபித்து ஓய்வுபெற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பல வீதிப்பேரணிகளும்,, உண்ணாவிரதப் போராட்டங்களும்,, கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதிக்கு ரெலிமெயில் அனுப்பும் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலையை காரணமாக வைத்து உரிய ஓய்வவூதிய கொடுப்பனவை வழங்காதிருத்தல் நீதியின்பாற்பட்ட செயற்பாடல்ல. வருகின்ற வரவுசெலவுத்திட்டத்திலாவது இவ்வநீதி களையப்படக்கூடியவாறு, ஓய்வுநிலையாளர்களின் நிறுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவை மீள அரசு செலுத்துவதற்கு வேண்டிய கோரிக்கைகளை நாட்டில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் முன்வைக்க முன்வரவேண்டும்.

அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் கொடுப்பனவை தற்காலிகமாக நிறுத்த காரணமாக இருந்த சம்பந்தந்தப்பட்ட தரப்புகளுக்கு மீள கொடுப்பனவுகளை வழங்கு வதற்குரிய அழுத்தங்களை பிரயோகிக்க முன்வரவேண்டும். .2020 ஜனவரி முதலாம்திகதி முதல் வழங்கு வதற்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்த ஓய்வூதிய கொடுப்பனவுக்கான தற்காலிக தடையை இவ்வாண்டு ஓய்வூதியர் தினமான ஒக்டோபர் 08 ஆம் திகதிக்குமுன், நீக்கி இன்றைய அரசு இடைநிறுத்திய கொடுப்பனவுகளை நிலுவைகளுடன் சேர்த்து ஓய்வு நிலையாளர்கள் பெற வழிசெய்வதே நாட்டிற்காக உழைத்த மரியாதைக்குரிய சிரேஷ்ட பிரசைகள் கௌரவத்துடனும் மகிழ்ச்சியாகவும் வாழவழிவகுக்கம் சுபீட்சத்தின் நோக்காக அமையலாம்.

ஆ.இளங்கோ (ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர்). அளவெட்டி, யாழ்ப்பாணம்.
சுபீட்சம் 23-10-21