சிங்கள குடியேற்றம் – கிளந்தெழுந்த தமிழ் முஸ்லீம் மக்கள்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காராமுனை பகுதியில் சிங்கள பெரும்பான்மை மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

வாகரை பிரதேசத்தின் மாங்கேணி காராமுனை பகுதியில் 1982 ஆம் ஆண்டிற்கு முன்பாக சிங்கள மக்கள் குடியிருந்ததாக கூறி நேற்று வியாழக்கிழமை (21) அவர்களுக்கான காணி தொடர்பான நடமாடும் சேவையொன்று புனாணையில் உள்ள வன இலகா திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையினை மத்திய காணி ஆணையாளர் ஜீ.கீர்த்திகமகே மற்றும் கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் ஜீ.ரவிராஜன்,ஆகியோர்கள் இணைந்து நடாத்தினார்கள்.இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதியின் தலைமையிலான இலங்கை பௌத்தமத ஆலோசனை குழவினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணித் திணைக்கள மேலதிக அரசாங்க அதிபர், திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் வாகரை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் பொலிஸ் உயர் அதிகாரி, வன இலகா திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் 1982 ஆம் ஆண்டிற்கு முன்பாக வசித்ததாக தெரிவிக்கப்படும் வெளிமாவட்டங்களில் வசிக்கும் சிங்கள மக்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான காணிகளை அடையாளப்படுத்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வேளை அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் தலைமையிலான குழவினர் மேற்படி செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சி.சரவணபவன்,முன்னாள் கிழக்கு மாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்குமானச பை உறுப்பினர் மா.நடராஜா, ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.சர்வானந்தன், பிரதேச சபை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் குறித்த நடமாடும் சேவை நடைபெறும் இடத்திற்கு சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

அப்பகுதிக்கு பெருமளவான பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தியிருந்ததுடன் குறித்த காணி நடமாடும் சேவைக்கும் சிங்கள குடியேற்றத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் எதுவித குடியேற்றமும் செய்யப்படாது எனவும் காணி ஆவணங்களை மட்டும் பரிசோதனைகள் செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி ஆணையாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து காராமுனைக்கு சிங்கள மக்களும் காணி ஆணையாளர் குழுவும் சென்று அங்கு காணிகளை பார்வையிட்ட நிலையில் அதற்கு எதிராக அப்பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து காணி ஆணையாளரை அப்பகுதியினை விட்டு வெளியேறுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து காணி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வெளிமாவட்டத்தைச்சேர்ந்த சிங்கள மக்களும் அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றனர். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,ஹாபிஸ் நசிர் அகமட் போன்றவர்கள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது கொழும்பிலும் வெளிநாடுகளுக்கும் சென்று ஒழிந்து கொள்வதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

1976 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் தங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு 5 ஏக்கர் காணியும் குடியிருப்பதற்கு 1 ஏக்கருமாக மொத்தமாக 6 ஏக்கர் காணி ஒரு குடும்பத்திற்கென, 190 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் 1983 ஆம் ஆண்டு யூலை கலவரத்தின் காரணமாக இடம்பெயர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் யுத்தம் முடிந்த பின்னர் தங்களுக்குரிய காணியினை வழங்குமாறு அரச திணைக்களங்களுக்கு முறையிட்டதன் பயனாக 21.10.2021 வியாழக்கிழமை எங்களது காணிகளை அடையாளப்படுத்துமாறு காணித்திணைக்களத்தினால் அழைக்கப்பட்டதற்கிணங்க தாங்கள் வருகை தந்ததாகவும் கூறுகின்றனர்.

தங்களது காணிகள் வேறு நபர்களால் பராமரிக்கப்பட்டு வருமாக இருந்தால் அதற்கு பதிலாக மாற்றுக் காணி வழங்குமாறும் வருகை தந்த சிங்கள மக்கள் தெரிவித்தனர். வாகரை பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாகும். இங்கு அரசாங்கத்தினால் திட்டமிட்டு குடியேற்றம் செய்ய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்கமாட்டோம். இன்று தமிழர் பிரதேச காணிகள் பறி போகும் நிலையில் மாவட்ட அபிவிருத்தி செய்வதாக கூறும் இராஜங்க அமைச்சரோ,கிழக்கை மீட்;கப்போகிறோம் என்று தெரிவிக்கும் அபிவிருத்தி குழுத் தலைவரோ மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஒரே பிரதி நிதியாக இருப்பவரையும் காணவில்லை. மக்களுக்கு பிரச்சினை வரும்போது பிரச்சினையை தீர்த்து வைக்காதவர்கள்தான் இன்று அபிவிருத்தி தொடர்பில் பேசுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். (க.ருத்திரன் – சுபீட்சம் 22-10-21)