கோதாவின் ஆட்சி தோற்றால் மஹிந்த கைப்பற்ற வேண்டும்

கோதாவின் ஆட்சி தோற்றால் மஹிந்த கைப்பற்ற வேண்டும் முருதெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்து

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் சுபீட்சத்துக்கான நோக்கு தோல்வியுற்றால், நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை 200 வீதம் இழந்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென முருதெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் ஊடகங்களுடன் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் அரச தலைவராக தொடர்ந்தும் பணியாற்றினாலும் அனுபவம் வாய்ந்த ஒருவர் நாட்டை கைப்பற்ற வேண்டும். அவர் மஹிந்த ராஜபக்சவைத் தவிர வேறுயாருமில்லை. அதை பயமின்றி என்னால் கூறமுடியும்.

நாட்டை சேனநாயக்க பரம்பரை, பண்டார நாயக்க பரம்பரை மற்றும் ராஜபக்ச பரம்பரை ஆட்சி செய்துள்ளது. தற்போது சேனநாயக்க பரம்பரை, பண்டாரநாயக்க பரம்பரையின் ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. ராஜபக்ச பரம்பரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். உர விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட குறுகிய தீர்மானங்களினால் நாட்டில் விவசாயம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் 6.9 மில்லியன் மக்களின் ஆணை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது. இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்துக்காக நம்பிக்கையுடன் சுவர்களில் வரைந்தனர். இப்போது ஏமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையை மாற்றுவதற்கு இனியும் தாமதிக்கக்கூடாது. மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கமாட்டார். இந்த யோசனையை அவர் எதிர்த்தால் அவர் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்துவார் எனவும் தெரிவித்துள்ளார். (தினக்குரல் 21-10-21)

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு