அரசிற்குள் இருந்தே சுதந்திர கட்சி குழி பறிக்கிறது

அரசிற்குள் இருந்தே சு.க. குழி பறிக்கிறது பொதுஜன பெரமுனவின் பின்வரிசை எம்.பிக்கள் கடும் சீற்றம்

பின்வரிசை எம்.பிக்கள், கட்சி தலைவர் உள்ளிட்ட பிரதானிகளுக்கு அறிவித்துள்ளனர்.

சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் இருந் துகொண்டு அரசாங்கத்தை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் இதனால் அவர்கள் தொடர்பில் தாமதிக்காது நடவடிக்கை யெடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுதந்திரக் கட்சி புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான நிலைமையிலேயே இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கூறுகையில்,

அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதாக கூறிக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இரட்டை நாக்குடன் அரசாங்கத்தை அழிக்கும் செயற்பாட்டையே முன்னெடுக்கின்றது. அந்தக் கட்சிக்கு அரசியலே தேவையாக உள்ளது. மக்களின் பிரச்சனைக்காக அவர்கள் எதனையும் செய்யவில்லை என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கே முயற்சிப்பதாக கூறுகின்றனர். இது வெறும் பைத்தியத்தனமான கதையே. அரசாங்கத்தை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள சுதந்திரக் கட்சி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர், செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதானிகளை கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். (தினக்குரல் 21-10-21)