நாட்டில் சுமார் 1400 பள்ளிவாசல்கள் வக்பு சபையுடன் தொடர்புகளைப் பேணாது தன்னிச்சையாக செயற்படுகின்றன.
இவற்றில் பல பள்ளிவாசல்களில் நிதி ஊழல் மோசடிகள் இடம்பெற்றுவருவதாக புகார்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறான பள்ளிவாசல்களின் சட்டரீதியற்ற நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாகங்கள் அமைக்கப்படவேண்டும். வக்புசபையின் தொடர்புகளைப் பேணாது தன்னிச்சையாகச் செயற்படும் நிர்வாகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வக்புசபை தீர்மானித்துள்ளது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
வக்புசபையின் தலைவர் இது தொடர்பில் தொடர்ந்தும் ‘விடிவெள்ளி’ க்குக் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறாக தன்னிச்சையாக செயற்படும் பள்ளிவாசல்கள் நீண்ட காலமாக வக்பு சபையுடன் தொடர்புகளின்றி இருக்கின்றன. அவற்றின் வரவு செலவுகள் என்பன வக்பு சபைக்குச் சமர்ப்பிக்கப்படுவதில்லை. நிர்வாக சபையிலுள்ள சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான நிர்வாகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வக்பு சபையின் சட்டவிதிகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக நீதீமன்றின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.
வக்பு சொத்துகள் பாதுகாக்கப்படவேண்டும். வரவு செலவுகள் வருடாந்தம் சமர்ப்பிக்கப்படவேண்டும் இவ்வாறு வரவு செலவு சம்ர்ப்பிக்கப்படாது ஒரு சில நிர்வாகிகள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 300 பள்ளிவாசல்களின் பதவிக்காலம் முற்றுப்பெற்றும் புதிய நிர்வாகங்கள் தெரிவு செய்யப்படாதுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் அவ்வாறான பள்ளிவாசல்கள் ஜமாஅத்தாரைக் கூட்டி ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாகங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கால எல்லைக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறும் 300 பள்ளிவாசல்களுக்கெதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.-
Vidivelli (ஏ.ஆர். ஏ. பரீல்)
Akurana Today All Tamil News in One Place
