தாய்ப்பால் ஊட்டல் விடயத்தில் தெளிவின்மை, மூடநம்பிக்கைகள்!

– குழந்தை ஆரோக்கியமாக வளர்வதில் தாய்மாரின் பங்களிப்புகள் எவை?

தாய்ப்பால் ஊட்டல் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தெளிவின்மை மற்றும் மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. அத்துடன் அவநம்பிக்கைகளும் அதிகம் நிலவுகின்றன. இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துகிறார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணரும், கிழக்கு பல்கலைக்கழக குழந்தை நலப் பிரிவின் விரிவுரையாளருமான டொக்டர் விஷ்ணு சிவபாதம். டொக்டர் விஷ்ணு சிவபாதம் அவர்களை தினகரனுக்காக சந்தித்த போது அவர் தெரிவித்த விபரங்கள் வருமாறு:

“டொக்டர் எனது மனைவிக்கு தாய்ப்பால் வருவது குறைவு போலத் தெரிகின்றது. குழந்தை எப்பொழுதும் அழுது கொண்டிருக்கின்றது. என்ன பால்மா கொடுக்கலாம்?”

இது வழமையாக நான் குழந்தை நல வைத்திய நிபுணர் என்பதனால் என்னிடம் அடிக்கடி பலரால் கேட்கப்படும் கேள்வி ஆகும். எனவே தாய்ப்பாலின் சிறப்பு பற்றி இங்கு முதலில் நான் விளக்கம் அளிப்பது அவசியம்.

பிறந்த சிசுவுக்கு தாய்ப்பாலைத் தாயிடமிருந்து பெறுவதற்கான அனைத்து உரிமைகளுக்கும் உரியதாகின்றது. இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். எனவே தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாத காலத்துக்கு தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

மேலும் கண்டிப்பாக ஆறு மாத முடிவில் தாய்ப்பாலுடன் சேர்த்து திண்ம உணவுகளையும் ஆரம்பித்தல் வேண்டும். இங்கு சில வேளைகளில் வேலைக்குச் செல்லும் தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு நான்கு மாத முடிவில் தாய்ப்பாலுடன் திண்ம உணவுகளைத் தொடங்கலாம்.

தாய்ப்பால் குழந்தைக்கு முதல் ஆறு மாதத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது. இன்று இலங்கையில் பெரும்பாலான தாய்மார் தங்களது குழந்தைக்கு தாய்ப்பாலையே முதன்மையான உணவாகக் கொடுக்கின்றனர் என்பது உண்மையிலேயே நாம் பெருமைப்படக் கூடிய விடயமாகும்.

தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் நன்மைகள் எவை?

தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக குழந்தைக்கு உகந்த ஊட்டச்சத்தும் வளர்ச்சிக்குமான அனைத்து அம்சங்களும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குறிப்பாக மூளைவளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.

மேலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது தாய்ப்பாலூட்டல் மூலம் வழங்கப்படுகின்றது. அதாவது தாயிடம் இருக்கும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியானது குழந்தைக்கு நேரடியாக கொடுக்கப்படுகின்றது. இதனால் வாந்திபேதி, சுவாச சம்பந்தமான நோய்கள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.

குறிப்பாக குழந்தை பிறந்த பின் முதல் 3 தொடக்கம் 5 நாட்களில் வரும் பாலானது(கொலஸ்ட்ரம்) எதிர்ப்பு சக்தி சக்தியை சிசுவுக்கு அதிகரிக்கும். மேலும் தாய்ப்பாலூட்டலானது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை, புற்றுநோய்கள், நீரழிவு மற்றும் அதிகஉடல் பருமன் போன்ற நோய்களிலிருந்து தடுக்கின்றது.

தாய்ப்பாலானது குழந்தையால் இலகுவாக அகத்துறிஞ்சப்பட கூடியதாக உள்ளதால் இதுவே முதல் ஆறு மாதகாலத்திற்கு குழந்தைக்குரிய சிறப்பான போசாக்கு ஆகும். தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மாருக்கு மார்பக புற்றுநோய், சூலகப் புற்றுநோய், நீரிழிவு மற்றும் குழந்தைப் பிறப்பின் பின் ஏற்படும் மனஉளைச்சலில் இருந்து பாதுகாக்கின்றது. அதை விட முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் இடையில் ஒரு உணர்வு மிக்க பிணைப்பை இது ஏற்படுத்துகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள்?

தாய்ப்பால் ஊட்டுவது ஒரு இயற்கையான விடயம் என்றாலும் அதை சரியான முறையில் கொடுக்காத போது சிலவேளைகளில் அந்த முயற்சி தோல்வி அடையலாம். குறிப்பாக தங்களது முதல் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மாருக்கு அது ஒரு சவாலான விடயமே.

உண்மையில் தாய்மாருக்கு, தாய்ப்பாலின் சிறப்பு பற்றியும் அதன் தேவையையும் கர்ப்ப காலத்தில் இருந்தேபோதித்தல் வேண்டும். தாய்ப்பாலூட்டலானது வெற்றி பெறுவதற்கு முறையான இணைப்பும் நிலைப்படுத்தலும் முக்கியமானதாகும். இதில் சிக்கல்கள் உள்ள தாய்மார்கள் வைத்தியசாலையில் உள்ள தாய்ப்பாலூட்டல் முகாமைத்துவ நிலையங்களிலோ அல்லது தங்களது midwife இடமோ கேட்டு அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே தாய்ப்பால் கொடுத்து அனுபவம் உள்ள தாய்மாருடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதனால் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பது?

தாய்ப்பால் ஒரு நிறையுணவு என்பதால் குழந்தைக்கு பசி எடுக்கும் போது தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். குழந்தை பசியுடன் இருப்பது என்பதை பின்வரும் காரணிகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.

1. குழந்தை நித்திரையில் இருந்து எழுந்து, கண்ணைத் திறந்து, விழிப்பாக இருந்து வாயை அகலத் திறந்து கொட்டாவி விடும் போது.
2. குழந்தை தனது கையை மடித்து வாயில் வைத்து உறிஞ்சும் போது.
3. மேற்கூறிய அறிகுறிகளை அவதானிக்க தவறும் போது குழந்தை பசியால் அழும்.

குறிப்பாக இங்கு தாய்மார்கள் கவனிக்க வேண்டியது குழந்தை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் தூங்கும் ஆயின் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் ஊட்ட வேண்டும், முக்கியமாக இரவு வேளைகளில்.

குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்துள்ளது என்று அறிவது எப்படி?

குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடித்த பின்பு அது மார்பகத்திலிருந்து தானாகவே வாயை எடுக்கும். இங்கு குழந்தை தாய்ப்பால் குடிக்கும் நேரம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். நன்றாக தாய்ப்பால் குடித்த குழந்தை மகிழ்ச்சியாக தாயுடன் விளையாடும் மற்றும் நன்றாக தூங்கி விடும்.

தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மாருக்கு மார்பகத்தின் பாரம் குறைவது போன்ற உணர்வு ஏற்படும் மேலும் மற்றைய மார்பகத்திலிருந்து சிறிதளவு பால் வெளியேறும். இவையெல்லாம் தாய்ப்பாலூட்டல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதற்குரிய அறிகுறிகள் ஆகும்.

தாய்ப்பால் ஊட்டும் போது குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா?

தாய்ப்பாலானது குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும் கனியுப்புக்களையும் கொண்டிருப்பதால் முதல் ஆறு மாத காலத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு எதையும் (தண்ணீர்உட்பட) கொடுக்கத் தேவையில்லை.

தாய்ப்பாலுக்குப் பதிலாக பால்மா வகைகளை குழந்தைக்கு கொடுப்பதால் பாதிப்புகள் உள்ளன.

பால்மா கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையான உணர்வுபூர்வமான இணைப்பில் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தையானது அடிக்கடி வாந்திபேதி, சுவாச நோய்கள், காது நோய்கள் போன்ற தொற்றுநோய்க்கு உட்படும். குறைந்தளவான மற்றும் அதிகளவு ஐதாக்கப்பட்ட பால்மா மூலம் குழந்தைக்கு மந்தபோசணம் ஏற்படலாம் அல்லது அதிகளவு பால் கொடுப்பதால் உடல் பருமன் அதிகரித்து அதன் மூலம் பிற்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிக அளவுஏற்படும். குழந்தையின் புத்திக் கூர்மையில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

பொதுவான மூடநம்பிக்கைகள்:

தாய்மார் நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தாய்ப்பாலூட்டலாம். மார்பகங்கள் வீக்கம் அடைந்தால் கண்டிப்பாக பாலூட்ட வேண்டும் அவ்வாறு இல்லையாயின் மார்பகத்தில் சீழ் கட்டிகள் ஏற்படலாம். அதிக வெப்பமான காலங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து தண்ணீரும் கொடுத்தல் வேண்டும் என்பதற்கில்லை. தாய்ப்பாலானது போதியளவு நீரைக் கொண்டுள்ளது.

தாய்ப்பால் கொடுப்பது பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட மேலதிக உடல் பருமனை குறைக்க உதவும். குழந்தையானது தாயின் எந்த வகையான அமைப்புடைய மார்பகத்திலும் தாய்ப்பால் குடிக்க இசைவாக்கம்அடைந்தது.

றிசாத் ஏ காதர் – ஒலுவில் மத்திய விசேட நிருபர்தினகரன்

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Free Visitor Counters