கொரோனா தொற்று: பாடசாலைகள் ஆரம்பிக்கலாமா?

ராஜாங்கனையில் மாணவனுக்கு கொரோனா தொற்றியுள்ளமை பாடசாலைகளை திறப்பது பேரழிவுகரமானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ராஜாங்கனை, யாய 5 பகுதியில், 16 வயது பாடசாலை மாணவருக்கு இந்த மாதம் 13 அன்று கொவிட்19 வைரஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு பாடசாலை மாணவருக்கு நோய் தொற்றியுள்ளமை, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பது நோய் பரவலாக சமூகமயமாகும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் யாய 05 இல் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 102 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே, மாணவருக்கு இந்த நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாணவர் கடந்த மாதம் முழுதும் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த நேரத்தில் அவர் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. இப்போது அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இருப்பினும், மாணவர் கடந்த வாரம் மூன்று நாட்கள் பள்ளிக்குச் சென்றிருந்தார். அவர் கற்கும் ராஜாங்கனை யாய 5 நவோத்யா கல்லூரியில் 50 மாணவர்கள், 06 ஆசிரியர்கள் மற்றும் 40 குடியிருப்பாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராஜாங்கனை பகுதியில் வசிக்கும் ஒரு ஆசிரியை உலகசோசலிசவலைத்தள நிருபர்களிடம் கூறியதாவது: சம்பந்தப்பட்ட நவோத்யா பாடசாலை இந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் ஏராளமானோர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டாலும், சுமார் 800 பேருக்கு மட்டுமே பி.சி.ஆர். சேõதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மாணவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர் தோராயமாக பரிசோதிக்கப்பட்ட போதுதான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சோதனைகளின் எண்ணிக்கை போது மானதாக இல்லாத காரணத்தால் பாடசாலைகளின் நிலைமை மிகவும் ஆபத்தானது என்றும் கூறிய அவர், பின்வருமாறு விளக்கினார். தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் தொற்றுநோய்க்கு காட்டிய போலி ஆர்வத்தை இனி காட்டப் போவதில்லை. தேர்தலில் வென்றுவிட்டார்கள். இப்போது அவர்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். பிள்ளைகளுக்கு எல்லா நேரத்திலும் முக கவசம் அணிந்துகொண்டிருக்க முடியாது. சமூக தூரத்தை பராமரிக்க முடியாது. பாடசாலைகளை மூட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அதிகாரிகளுக்கோ அவற்றைப் பற்றி தேடிப்பார்க்கும் அக்கறை கிடையாது.

ராஜாங்கனை அருகே புத்தளத்தில் உள்ள ஒரு பிரதான பாடசாலையின் மற்றொரு ஆசிரியர், கடந்த வாரம் சுவாசிக்க சிரமப்பட்ட தனது பாடசாலையில் உள்ள ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், இது போன்ற சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் குறித்து பி.சி.ஆர். சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார்.

Read:  மீண்டும் ரணில் !!

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கொத்து கொத்தாக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சூழ்நிலை யிலையிலேயே அரசாங்கம் பாடசாலைகளைத் தொடங்கியது. ராஜாங்கனை பாடசõலை மாணவரும், கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்து, நோய்வாய்ப்பட்ட நபரின் குடும்பத்திற்கு அருகில் வசிக்கிறார். மாணவர் தொற்றுக்குள்ளான பின்னர் ஊடகங்களிடம் பேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ‘விரிவான’ பி.சி.ஆர். சோதனைகள் செய்யப்பட்டாலும் ‘தொற்றுக்கு உள்ளான சிலர் சிக்காமல் போகலாம்’ என்றார்.

குறைந்த எண்ணிக்கையிலான சோதனைகளை மேற்கொண்டு, தொற்று நோய் ஆபத்து இல்லை என்று பாசாங்கு செய்வதன் மூலம், பெரும் முதலாளித்துவ வர்த்தகர்களின் இலாபத்தைப் பெறுவதற்காகவே ராஜபக்ஷ அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறந்தது. இந்த பொறுப்பில் இருந்து ராஜபக்ஷ அரசாங்கத்தை விடுவித்த சமரவீர, சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை அணிவது உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

பொறுப்பை பொதுமக்கள் மீது சுமத்தும் நடவடிக்கையை கொடூரமான முறையில் வெளிப்படுத்திய ஜனாதிபதி கோதாபாய ராஜபக்ஷ, ஜூலை 14 அன்று, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது ‘கூட்டுத்தாபன தலைவர்களின் பொறுப்பாகும்’ என்று அச்சுறுத்தும் வகையில் அறிவித்தார். அத்தியாவசியமற்ற வேலைத் தளங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை மூடாமல் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தொற்றுநோயை வெறுமனே தடுக்க முடியாது என்பதை, காற்று வழியாக வேகமாக பரவும் வைரஸின் தன்மையே உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், தீவின் நான்கரை மில்லியன் பாடசாலை மாணவர்களில் கிட்டத்தட்ட பாதிபேரும் மற்றும் சுமார் 250,000 ஆசிரயர்களும் பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும் இந்த வாரம் திறக்கப்பட்டன. பெரும்பான்மையான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நெரிசலான பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். மேலும், காலை முதல் பிற்பகல் 3.30 மணி வரை 45க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் வகுப்பறைகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். பாடசாலை சுகாதாரத்துக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள அற்ப தொகை பாடசாலைகளில் கைகழுவுவதற்கு ஒரு சில தண்ணீர் குழாய்களை பொருத்த மட்டுமே போதுமானதாக உள்ளது. கை கழுவுவதற்கான திரவங்கள் அல்லது சோப்புகள் தற்போது சில பாடசாலைகளில் கிடைக்கவில்லை. அரசாங்கம் அந்த செலவுகளை பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக பெற்றோர் மீது சுமத்தியுள்ளது.

சர்வதேச அளவில், ஜூலை மாதம் தொற்றுநோய் பேரழிவு தரும் மாதமாக இருந்து வந்துள்ளதுடன், பாடசாலைகளை மீண்டும் திறப்பதே இந்த பரவலுக்கு பிரதான காரணமாக இருந்துள்ளது. உலகளவில், பதிவான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனைத் தாண்டியுள்ளதுடன் ஜூலை மாதத்தில் 165,000 பேர் இறந்தனர். இந்த உண்மைகள், உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இலங்கையில், தொற்று நோய் அதிகரிப்பதற்கான அபாயத்தைக் குறிக்கின்றன. மேற்கண்ட செய்தியாளர் சந்திப்பின் போது, வைத்தியர் சமரவீர, செப்டம்பர் மாதம் விமான நிலையத்தை திறப்பது குறித்தும் கவனம் செலுத்தினார்.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

ஆகஸ்ட் 12 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு முன்னோக்குக் கட்டுரையின் படி, அமெரிக்க சிறுவர் கற்கை நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஜூலை கடைசி இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 100,000 குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. பெரியவர்களைப் போலவே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று குழந்தைகல் .அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட மற்றொரு சமீபத்திய ஆய்வில், கொவிட்19 பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகளால் தொண்டை மற்றும் காற்று மூலம் அதிக அளவு வைரஸை பரப்ப முடியும் என்று கண்டறியப்பட்டது. இது பெரியவர்களை விட 100 மடங்கு அதிகம் ஆகும்.

பொது சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில், ராஜாங்கனை மாணவன் கடந்த சில வாரங்களாக தொண்டை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் முதல் தனிமைப்படுத்தலின் பின்னர் அந்த சிறுவன் மீண்டும் பரிசோதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் முதல் இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் வரை, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டவில்லை. மாறாக, சரிந்து வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பெருவணிகங்களை காப்பாற்றுவதிலேயே அக்கறை காட்டுகின்றன. ராஜபக்ஷ அரசாங்கமும் பெருவணிகமும் தொழிலாள வர்க்கத்திற்கான தொழில்கள், வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்களை வெகுவாகக் வெட்டிக் குறைக்க ஏற்கனவே தொற்றுநோயை சுரண்டிக்கொண்டுள்ளன.

உலகின் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் பேரில், அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. எதிர் முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகள் உட்பட ஊடக ஸ்தாபனங்கள், பாடசாலைகளில் பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்து மௌனமாக இருப்பதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிக்கின்றன.

இலங்கையில் தற்போது 2953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 209 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர், 55 பேர் பரிசோதனை மட்டத்தில் உள்ளதோடு 12 மரணித்துள்ளனர். கடைசியாக கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் பரவலை ‘கட்டுப்படுத்தியுள்ளதாக’ அரசாங்கம் கூறினாலும், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் பாடசாலைகளைத் திறப்பது எந்த நேரத்திலும் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவக்கூடும் என்பதையே எல்லா அறிகுறிகளும் காட்டுகின்றன. அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு முழு ஆதரவளிக்கும் முதலாளித்துவ ஊடகங்களும் சுகாதார அதிகாரிகளும், வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறித்து மக்களுக்கு மூடி மறைக்கவே எப்போதும் முயற்சி செய்கிறார்கள். அந்த மாணவன் நோயிலிருந்து தப்பியுள்ளதை பரிசோதனைகள் காட்டுவதாக கூறிக்கொண்டு, அத்தகைய ஆபத்து இல்லை என்பதைக் காட்டுவதே அவர்களது இலக்காக உள்ளது.

Read:  மீண்டும் ரணில் !!

பரவலான பி . சி . ஆ ர் . சோதனைகளைப் பற்றி குறிப்பிட்ட போதிலும், இலங்கையில் பெப்ரவரி 18 முதல் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 191,507 மட்டுமே. சராசரி தினசரி மதிப்பு 1058 என்ற மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.. இலங்கையின் 27 மில்லியனுக்கும் அதிகமான
மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, நாளொன்றுக்கு குறைந்தது 5,000 சேõதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்தும் கூறுகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் உலகெங்கிலும் உள்ள அர சாங்கங்கள் சுகாதார நடவடிக்கைகளை கைவிடுவதாக எச்சரித்துள்ளார்.‘சுகாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும், இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆளும் வர்க்கத்தின் இந்த அலட்சியம் ஒரு திட்டவட்டமான வர்க்க பிரதிபலிப்பாகும். ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே, மக்களின் உயிர்களை உலகளாவிய தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடி
யும் மற்றும் ஏனைய வாழ்க்கை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

வைரஸின் முழுமையான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் பாடசாலைகளைத் தொடங்குவது, சிறுவர்களை பாடசாலைக்கு கொண்டு செல்வதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பான போக்குவரத்து சேவைகளைத் தொடங்குவது, வகுப்பறைகளின் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக ஆசிரியர்மாணவர் விகிதத்தை 1:20 ஆக தர ரீதியாகக் குறைத்தல், இணையவழி கல்வியின் முன்னேற்றத்தை ஒருங்கிணைக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச கணினி மற்றும் இணைய வசதிக்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, ஏனைய தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்ட ஆசிரியர் மாணவர் பெற்றோர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கிக்கொண்டு அதற்கான போராட்டத்தை முன்நகர்த்த வேண்டும்.

உலக சோசலிஷ இணையத்தளத்திலிருந்து