முடக்கப்பட்டுள்ள போருதொட்டையின் சமகால நிலவரம் என்ன?

2020 மார்ச்‌ மாதம்‌ 31 ஆம்‌ திகதி, கொரோனாவை அடுத்து இலங்கை முஸ்லிம்‌ சமூகம்‌ அதிர்ச்சிக்குள்ளான இரண்டாவது நிகழ்வு பதிவானது. இலங்கையில்‌ கொவிட்‌19 தொற்றின்‌ காரணமாக மரணித்த இரண்டாவது நபர்‌, அதாவது முதலாவது ஜனாஸா தகனம்‌ செய்யப்பட்டது. சமூகத்தின்‌ தலைமைகள்‌, பிரதேச மக்கள்‌ முதல்‌ குறித்த நபரின்‌ குடும்பத்தினர்வரை நல்லடக்கத்திற்காக தயாரான நிலையில்‌ இந்த கவலையான சம்பவம்‌ பதிவானது.

அதற்கு முன்னரே போருதோட்டை பகுதி முற்றாக முடக்கப்பட்டு விட்டது. அன்றிலிருந்து இன்று வரை அப்‌பகுதி மக்கள்‌ பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்‌ தமது நாட்களை கடத்தி வருகின்றனர்‌.

நீர்கொழும்பு, போருதோட்டையின்‌ தற்போதைய நிவைரம்‌

நீர்கொழும்பு, போருதோட்டை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சகோதரரின்‌ ஜனாஸா தகனம்‌ செய்யப்பட்டபின்னர்‌, இவரது குடும்பத்தில்‌ 43 பேர்‌ நள்ளிரவொன்றில்‌ கிழக்கு மாகாணத்தில்‌ உள்ள முகாம்‌ ஒன்றுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச்‌ செல்லப்பட்டனர்‌. குறித்த நபர்‌ வாழ்ந்த போருதோட்டை, ஆப்தீன்‌ மாவத்தை பிரதேசம்‌ முழுமையான முடக்கநிலைக்கு வந்தது. இதனால்‌ ஆப்தீன்‌ மாவத்தை அடங்கலாக போருதோட்டை கிராமமே பெரும்‌ நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தது. இன்றுவரை நீர்கொழும்பு, போருதோட்டை பிரதேசத்தில்‌ கடைகள்‌ அனைத்தும்‌ (மருந்தகம்‌ உட்பட) அடைக்கப்பட்டு, மக்கள்‌ வீடுகளில்‌ இருப்பதை பாதுகாப்பு தரப்பினர்‌ உறுதிப்படுத்தியவாறு கடமையில்‌ இருப்பதை காணக்கிடைக்கின்றது.

கொவிட்‌19 தொற்றில்‌ மரணித்தவரின்‌ அயல்வீட்டில்‌ வசிக்கும்‌ சகோதரர்‌ ரியாஸ்‌, தமது அத்தியவசிய தேவைகள்‌ குறித்து குறிப்பிடுகையில்‌, “எமக்குமுதலுதவிப்‌ பொருட்கள்‌, பெனடோல்‌, டெட்டோல்‌, தொற்றுநீக்கிகள்‌, முகக்‌கவசங்கள்‌ உள்ளிட்ட, எம்மையும்‌ எமது குடும்ப உறுப்பினர்களையும்‌ வைரஸ்‌ தொற்றிலிருந்தும்‌, நோய்களிலிருந்தும்‌ பாதுகாக்க தேவையான சுகாதார, மருத்துவ பொருட்கள்‌ உடனடியாக தேவையாக இருக்கின்றது” என்றார்‌.

2,800 இற்கும்‌ அதிகமான குடும்பங்கள்‌ செறிந்து வாழ்ந்து வரும்‌ இந்த ஊரில்‌, அத்தியாவசிய பொருட்களைப்‌ பெற சில டெலிவரி சேவை முயற்சிகள்‌ இடம்பெற்றுவந்தாலும்‌ முழுமையாக திருப்திப்படும்‌ நிலையில்‌ இல்லை என்கின்றனர்‌ பிரதான வீதியையே காணாது பல நாட்களாக வீடுகளில்‌ அடைந்துகிடக்கும்‌ மக்கள்‌. போருதோட்டையில்‌ பெரும்பாலானோர்‌ வறுமைக்‌கோட்டிற்குக்‌ கீழ்‌ வாழ்ந்து வருகின்றனர்‌. இவர்களது கொள்வனவு சக்தியும்‌ நாளுக்குநாள்‌ வலுவிழந்துகொண்டே செல்கின்றது. சில பகுதிகளுக்கு ஓரிரு தினங்கள்‌ இரவு நேர சாப்பாட்டை நலன்விரும்பிகள்‌ ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும்‌, இதுவரை 1500 இற்கும்‌ மேற்பட்ட உலர்‌ உணவுப் பொதிகள்‌ பிரதேசத்தவர்களின்‌ கூட்டு முயற்சியால்‌ பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும்‌ அறியக்‌கிடைக்கின்றது. இருந்தாலும்‌ தேவையுடையோரின்‌ எண்ணிக்கை நாளுக்குநாள்‌ மிக வேகமாக
அதிகரித்துவருவது வருத்தமான செய்தியே!

மூடக்கப்பட்ட நாட்களில்‌ உயிரிழந்த ஏனையவர்களின்‌ ஜனாசாக்கள்

கொவிட்‌19 தொற்றில்‌ மரணித்தவரை தகனம்‌ செய்த விவகாரம்‌ ஒருபுறமிருக்க, நீர்கொழும்பு பகுதியில்‌ வேறு நோய்களால்‌ பாதிக்கப்பட்ட நிலையிலும்‌ திடீரென்றும்‌ மரணித்தவர்களின்‌ ஜனாஸாக்களை விரைந்து அடக்கம்‌ செய்திலும்‌ சில தாமதங்களும்‌ தடங்கல்களும்‌ ஏற்பட்டன. இந்த
மரணங்கள்‌ விடயத்திலும்‌ சுகாதார அமைச்சின்‌ விதிமுறைகளைப்‌ பின்பற்ற வேண்டியுள்ளமையே இதற்காக காரணமாகும்‌.

இதுவரை 5 இற்கும்‌ மேற்பட்ட ஜனாசாக்கள்‌ இக்‌ காலப்‌ பகுதியில்‌ பதிவாகியிருக்கின்றன. நீர்கொழும்பில்‌, பெரியமுல்லை, போருதோட்டை ஆகிய பிரதேசங்களில்‌ நிகழும்‌ ஜனாசாக்கள்‌ (அது வீட்டில்‌ நிகழ்ந்தாலும்‌, நீர்கொழும்பு வைத்தியசாலையில்‌ நிகழ்ந்தாலும்‌) ஜனாஸாவின்‌ மாதிரிகளை கொழும்புக்கு அனுப்பி, கொவிட்‌19 பரிசோதனை மேற்கொண்டு, அத்தொற்று இல்லை என உறுதியானால்‌ மட்டுமே நல்லடக்கத்துக்காக மீண்டும்‌ நீர்கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. ஜனாஸா அடக்கத்திற்கும்‌ வரைமுறைகள்‌ காணப்படுகின்றன. பொலிஸ்‌, பொதுச்‌ ௬காதார பரிசோதகர்‌ ஆகியோரின்‌ அனுமதிபெற்று, சுகாதார விதிமுறைகளைப்‌ பேணி, குடும்பத்தில்‌ ஒரு சிலர்‌ மட்டுமே மயான பூமிக்கு சென்று அடக்கம்‌ செய்ய அனுமதிக்கப்படுகின்றது.

மேலும்‌ சிலருக்கு கொவிட்‌19 தொற்றுக்கள்‌

இத்தாலி நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த நீர்கொழும்பு நபர்‌ ஒருவரின்‌ 4.5 வயது பிள்ளைக்கு கொவிட்‌ 19 தோற்று இருப்பதாக சில தினங்களுக்கு முன்‌ உறுதிசெய்யப்பட்டது.

போருதோட்டையில்‌ மரணித்தவரின்‌ குடும்பத்தில்‌ மூன்று பேருக்கு “கொவிட்‌19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள்‌ தெரிவித்திருக்கின்றனர்‌. இதேவேளை பலஹத்துறை பெரியபள்ளிவாயல்‌ பிரதம இமாம்‌ மெளலவி அன்வர்‌ ஸாதாத்‌ (மனாரி) தற்போதைய நிலைமைகள்‌ குறித்து கருத்த வெளியிடுகையில்‌,

“உங்கள்‌ ஜனாசாக்களும்‌ எரிக்கப்படாது சமய விதிமுறைகளின்‌ பிரகாரம்‌ அடக்கம்‌ செய்யப்படவேண்டும்‌ என நீங்கள்‌ கருதினால்‌, சுகாதார விதிமுறைகளைப்‌ பேணி வீடுகளுக்குள்‌ இருந்துகொள்ளுங்கள்‌. அதாவது இந்தக்‌ கொடிய வைரஸ்‌ தொற்று ஏற்படாதவாறு பாதுகாப்பாக நடந்து கொள்ளுங்கள்‌. கொவிட்‌ 19 அடையாளங்கள்‌ தென்பட்டால்‌ உடனே குறித்த சுகாதார அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்‌” என்றார்‌.

-அனஸ் அப்பாஸ்-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page