கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற நீரிழிவு நோயாளர்களுக்கான ஆலோசனைகள்

தற்போது கொரோனாத் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இதனை கண்டு அச்சப்படுபவர்களின் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர்கள் நீரிழிவு நோயாளிகளே. அதிலும் நீரிழிவால் பாதம் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அச்சத்தில் உறைந்து இருக்கிறார்கள். 

இந்நிலையில் நீரிழிவால் பாதங்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாமா? என்ற ஐயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்கள் உரிய வழிகாட்டலை வழங்கியிருக்கிறார்கள்.

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவால் பாதங்களில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த கொரோனா தொற்று காலகட்டங்களில் பிரத்தியேக கவனம் எடுத்துக்கொண்டு, அவர்கள் சிகிச்சை முறைகளையும், தற்காப்பு உத்திகளையும் கடைபிடிக்க வேண்டும். 

இதனை தவிர்த்தால் அவர்களின் பாதங்களின் வழியாக கிருமி தொற்று ஏற்பட்டு, புரையோடி, கட்டமைப்பு முழுவதும் பாதிக்கப்பட்டு, தசைகள், நரம்புகள், எலும்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்படக் கூடிய நிலை உருவாகும் என்று எச்சரிக்கிறார்கள்.

நீரிழிவு நோயாளிகளில் 30 சதவீதத்தினர் பாதத்தில் ஏற்படும் புண்களுக்காக சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் நகர்புறங்களை தவிர்த்த வேறு பகுதிகளில் வாழும் 10 சதவீத நீரிழிவு நோயாளிகள், தங்கள் பாதங்களில் ஏற்படும் புண்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்வது இல்லை என்ற விவரத்தையும் மருத்துவர்கள் பதிவு செய்கிறார்கள். 

அந்த வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால் பகுதியை இழக்கிறார்கள். அதனால் இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

எம்மில் பலரும் சமூக, பொருளாதார மற்றும் மத நம்பிக்கைகளின் காரணமாக கால்களில் காலணிகளை அணியாமல் நடந்து செல்கிறார்கள். இது முற்றிலும் தவறானது என்று மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள். அதே தருணத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தாவிட்டால், உடலில் உள்ள நரம்புகள், ரத்த நாளங்கள், கண் , சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. 

அதிலும் நீரிழிவால் பாதங்களில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு sensory neuropathy, motor neuropathy, chronic sensorymotor polyneuropathy, ischemia, autonomic neuropathy போன்ற பாதங்களில் உள்ள நரம்பு, ரத்தநாள இயக்கம் மற்றும் உணர்வுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிரத்தியேக காலணிகளையும், காலுறைகளையும் அவசியம் அணிய வேண்டும். பாதங்களை தினமும் இரண்டு வேளை கழுவி, சுத்தப்படுத்தி நன்றாக கூர்ந்து கவனிக்க வேண்டும். நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது தகுந்த காலணிகளுடன், மருத்துவர் பரிந்துரைத்த வழிமுறைகளை பின்பற்றவேண்டும். 

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி, சமூக இடைவெளியுடன் முக கவசம், கையுறை, காலுறை , காலணி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நாளாந்தம் இரண்டு வேளையும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 

இதனை பின்பற்றுவதில் ஏதேனும் அசவுகரியங்கள் இருந்தால் நாளாந்தம் ஒருமுறையேனும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வேறு காரணங்களால் நடைப்பயிற்சி செய்வதை குறைத்துக் கொண்டால், இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிவிடும். இதன் காரணமாக போதிய முன்னெச்சரிக்கையுடன் நாளாந்தம் நடைபயிற்சியை தவறாது மேற்கொள்ள வேண்டும்.

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page