30,000 க்கும் மேல் ஊழியர்கள் விலகல்

30,000 க்கும் மேல் ஊழியர்கள் விலகல் 15,000 தனியார் பஸ்கள் வீதிகளில் பயணிக்க முடியாத நிலை

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக 30,000 க்கும் மேற்பட்ட தனியார் பஸ் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் 50,000 ஊழியர்களில் 30,000 பேர் பணிக்கு திரும்பவில்லை. தனியார் பஸ்களில் 75 வீதமான,அதாவது சுமார் 15,000பஸ்கள் ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையின் காரணமாக அவற்றால் வீதிகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழியர்களின் பற்றாக்குறையால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் 6800 பஸ்களில் 800 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்தை இழந்த பெரும்பாலான சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் வேறு வருமான மார்க்கத்தை தேடி சென்றுள்ளனர். அவர்களில் பலர் வாழ்வாதாரத்துக்காக சொந்தமாக உழைப்பதற்கு சென்றுள்ளனர்.

இதுவரை அரசாங்கத்தினால் எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனினும் நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையால் பல பஸ் உரிமையாளர்கள் தங்களுடைய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர். நாடு மீண்டும் முடக்கப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என நடத்துனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லையென பலர் கருதுகின்றனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது பெரும்பாலானோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சுமார் 5000 பஸ்கள் பழுது பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு 50,000 வரையில் செலவாகும். சுமார் 10,000 பஸ்கள் பழுது பார்ப்பதற்காக 100,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது. அவர்கள் சேவையில் ஈடுபடுவதற்கு முன்னர் எவ்வித வருமானமும் இல்லாததால் அவர்களால் பஸ்களை பழுதுபார்க்க முடியவில்லை. எனவே அரசாங்கம் விரும்பியபடி மீண்டும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read:  ஜெய்லானியில் பள்ளியாக இயங்கும் கொட்டிலை அகற்றுக

(தினக்குரல் 4-10-21) க.பிரசன்னா