நெருக்கடிகள் சூழ்ந்த ஆட்சி

தனி மனித வாழ்வில் நெருக்கடிகள் வருகின்றன. அமைப்புக்களும் அரசுகளும் ஏன் முழு உலகமுமே நெருக்கடிகளைச் சந்திப்பதை நாம் பார்த்து வருகின்றோம். இந்த வகையில் அரசுகளும் நாடுகளும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருவது இயல்பானதுதான். ஆனால் இந்த முறை நமது நாடு அல்லது அரசு வரலாற்றில் என்றும் இல்லாத ஒரு நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றது. இதில் சர்வதேச நெருக்கடிகள் உள்நாட்டு நெருக்கடிகள் என்று நாம் அவற்றை இரு பிரிவுகளாக வகைப்படுத்த முடியும். இவற்றில் சில இயற்கையானதும், இயல்பானதும், இன்னும் பல கடந்த கால அரசுகள் தொடர்ச்சியாக விட்ட தவறுகளினால் வந்த விளைவுகள். எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் செயல்களே இந்த நிலைக்கு காரணம் என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.

முதலில் அரசு எதிர் நோக்கும் சர்வதேச நெருக்கடிகள் என்ன என்று பார்ப்போம். ஐ.நா.மனித உரிமை மீறல், மேற்கு நாடுகளுடனான பகைமைப் போக்கு, புதிதாக வருகின்ற இஸ்லாமிய நாடுகளின் அச்சுறுத்தல்கள், ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைக்கு ஆபத்து, உள்நாட்டில் என்றுமில்லாத அளவு பொருளாதார நெருக்கடி, அன்னியச் செலாவணி பற்றாக்குறை டொலர் தட்டுப்பாடு, பட்டினிச் சாவு அபாயம், நாட்டில் உச்சகட்ட ஊழல், நம்பகத் தன்மையற்ற நீதித்துறை, ஊழல் மலிந்த அரசியல் வாதிகளினதும் அதிகாரிகளினதும் அட்டகாசங்கள், பதவிகளை விட்டு ஓடுகின்ற நேர்மையான அதிகாரிகள், பலயீனப்பட்ட எதிரணி, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் காவிகள் கூட்டம், ஆளும் தரப்புக்குள் வெட்டுக் கொத்து, இவற்றைப் பார்த்து விதி பிதுங்கி நிற்கின்ற குடிமக்கள் என்று இந்த அவலங்களை நாம் பட்டியலிட முடியும்

தற்போது நமது ஆட்சியாளர்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். போர்கள், உள் நாட்டுக் கிளர்ச்சிகள் என்று வந்தால் பதவியில் இருக்கின்ற அரசுகள் தமது முழுப் பலத்தையும் பாவித்து அவற்றை அடக்க முனைவது உலகில் எல்லா நாடுகளிலும் நடந்துதான் வந்திருக்கின்றது. 1991 ல் ஜே.வி.பி. கிளர்ச்சியை அப்போதய ஸ்ரீமா அம்மையார் அடக்கியதும் அதில் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பலியானதும் தெரிந்ததே. ஆனால் அந்த நாட்களில் நமது பிரதமருக்கு உலக அரங்கில் சிறப்பான செல்வாக்கு இருந்தது, சர்வதேச அரங்கில் அவர் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், மேற்கத்திய நாடுகளுடனும் இந்தியாவுடனும் அவருக்கு நெருக்கமான உறவுகள் இருந்து வந்தது. எனவே தான் ரஷ்யா கூட கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஸ்ரீமா வுக்கு மிக் விமானங்களை அப்போது கொடுத்து உதவியது.

தமிழ் ஈழப் போராட்டம் வளர்ந்து வருகின்ற காலத்தில் மீண்டும் 1988-1999 களில் ஜேவிபி அப்போது பதவியில் இருந்த ஜே.ஆர். அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அதற்கு அவர்கள் அன்று தடை செய்யப்பட்டிருந்ததும் முக்கிய காரணமாகும். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே ஜே.ஆர். ஜே.வி.பி.யை தடை செய்திருந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் ஜே.ஆர். அரசு பலமிக்கதாக இருந்தது. அன்று ஜே.ஆர், மேற்கத்திய விசுவாசியாக இருந்தாலும் சீனா விரோத போக்கை அவர் கடைப் பிடிக்கவில்லை. உள் நாட்டில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஜே.ஆர் ரஜீவ் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்புக்கள் வந்து பலர் போராட்டங்களில் இறந்தனர். என்றாலும் அந்த ஒப்பந்தத்தை ஓரளவுக்கு மதித்து – அல்லது இந்தியாவுக்கு அஞ்சி ஜே.ஆர். நடந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் பதவிக்கு வந்த ஆர், பிரேமதாச மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்ததுடன், பாமர மக்களிடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் நடந்த அரசியல் படுகொலைகள் தொடர்பாக சர்வதேச சமூகம் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு அன்று உலக அரங்கில் அமெரிக்காவில்கை ஓங்கி இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும் தற்போதய பிரதமர் எம்.ஆர். ஓம் வாசு போன்றவர்கள் இலங்கையில் அன்று நடந்த மனித படுகொலைகள் தொடர்பாக அரசியல் பல தொந்தரவுகளுக்கு மத்தியில் ஜெனிவாவுக்கு அதனை எடுத்துச் சொன்றார்கள்.

பிரேமதாச மறைவுக்குப் பின்னர் பதவிக்கு வந்த சந்திரிக்காவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு நிறையவே கிடைத்தது. அவரது காலத்தில் ஈழப் போர் உச்ச கட்டத்தில் இருந்தாலும் சிறப்பான சர்வதேச உறவுகளை அவர் பேணி வந்தார். இந்தியாவுடனும் அவருக்கு நல்லுறவு இருந்து வந்தது. அதனைத் தொடர்த்து பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஸ போரை முடித்து வைத்தவர் என்ற ரீதியில் சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஹீரோ. அந்த அந்தஸ்து ஒரு தசசாப்தத்துக்கு கூட நீடிக்கவில்லை என்பதும், மைத்திரி – ரணில் பதவிக்கு வந்ததும் போனதும் தெரித்ததே. விஷமத்தளமான இனவாத பரப்புரைகளுடன் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி ஜீ.ஆர். இன்று அரசியல் அரங்கில் மிகவும் நம்பகத் தன்மையற்ற ஒரு ஆட்சியாளராக இருந்து வருவதும் தெரிந்ததே. அவரைப் பதவிக்கு கொண்டு வந்தவர்களே ஏமாறி விட்டோம்

என்று இன்று பகிரங்கமாக விமர்சனங்கள் செய்வதும் தெரிந்ததே. இந்தப் பின்னணியில் மீண்டும் சர்வதேச விவகாரங்களுக்கு வருவோம்.போரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த மஹிந்த அரசுக்கு போர்க் குற்றங்கள் தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புக்கள் ஆள் இப்போ தானே பதவிக்கு வந்திருக்கின்றார். போரைத் தொடர்ந்தபடி நல்லபடியாக நாட்டை முன்னெடுப்பார் என்று உலகம் நம்பியது. அவர் இரண்டாம் முறை பதவிக்கு வந்த போதுதான் போர்க் குற்றங்கள் பற்றி உலகம் சற்று அழுத்தமாக பேசத் துவங்கியது. 2015 ல் நடந்த தேர்தலில் ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இல்லாத ஒரு திலையில் போர் குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பிக்கையுடன் நடந்து கொள்ளும் என்று சர்வதேசம் நம்பியது. ஆனால் ரணில் தொடர்ந்தும் ராஜபக்ஸாக்களை காப்பாற்றி விடுவதில் ஆர்வமாக இருந்தார். இதனால் அந்தக் காலத்திலும் போர்க் குற்றங்கள் தொடர்பில் எதுவுமே உருப்படியாக நடக்கவில்லை.

இப்போது தான் அரசு சர்வ தேசத்துடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கின்ற ஒரு நிலையில் காரியங்கள் பார்க்கின்றது. என் நாலும் சர்வதேச நிலை அதற்கு இசைவாக இல்லை என்று நாம் நினைக்கின்றோம். இந்தப் போர்க் குற்றங்களுக்கு சர்வதேசம் குறிப்பாக மனித உரிமைகள் அமைப்பு யாரைக் குற்றம் சாட்டுகின்றதோ அவர்களே சர்வதேச சமூகத்தின் முன்னால் அரசு சார்பாக ஆஜராகின்ற ஒரு நிலை. இதனால் தான் குற்றவாளியே வழக்கை நாமே விசாரிக்கின்றோம். உள்ளகப் பொறிமுறையில்தான் விசாரணை என்று அரசு பிடிவாதம் பண்ணிக் கொண்டிருக்கின்றது. இதனை சர்வ தேசமும் பாதிக்கப்பட்டவர்களும் நம்பத் தயாராக இல்லை என்பதால் இழுபறி நிலை. குறைந்த பட்ச அதிகாரங்களான மாகாண சபைத் தேர்தலை இன்று நடத்துகின்றோம் நாளை நடாத்துகின்றோம் என்று இந்தியாவைத் தொடர்ந்தும் இந்த அரசு ஏமாற்றிக் கொண்டு வருகின்றது.

இது ஒரு பக்கம் இருக்க, அரசு உள்நாட்டில் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் விவகாரம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் என்ற விவகாரங்களில் நம்பகத் தன்மையில் இல்லாமல் நடந்து கொள்கின்றது. இதனால் மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முனைப்புக் காட்டுகின்றது. இதனால் தான் மேற்கத்திய நாடுகள் ஜீ.எம்.பி. வரிச்சலுகையை நீக்கி அரசை தண்டிக்க முனைகின்றது. இது தொடர்பாக ஆராய வந்த ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக் குழுவிடம் பிரதான எதிரணி அரசு தொடர்பான அதிருப்தியை வெளியிட்டாலும் ஜீ.எஸ்.பி. சலுகையை நீக்க தமது சம்மதத்தை தெரிக்கவில்லை. இதே நிலைப்பாட்டில்தாள் மு.கா. தலைவரும் பாம்புக்கும் நோகா மல் பம்படித்த கம்பும் முறியாமல் அவர்களிடத்தில் கருத்துச் சொல்லி இருக்கின்றார். ஆனால் தமிழ் தரப்பினர் ஜீ.எஸ்.பி. சலுகையை தொடர்ந்து வழங்காமல் விட்டால்தான் அரசை பணிய வைக்க முடியும் என்று நம்புகின்றது. அவர்கள் இதனைத் தான் தூதுக் குழுவிடம் சொல்லியும் இருக்கின்றார்கள்,

இதற்கிடையில் என்றுமில்லாதவாறு உலக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு இலங்கையில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள், இன ரீதியான கைதுகள் நாட்டில் நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றி தமது கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றார்கள், இதில் நியாயமாக அரசு நடந்து கொள்ளா விட்டால் தாம் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் இலங்கை அரசுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இப்படியாக எல்லா பக்கங்களிலும் தற்போதைய அரசு சர்வதேச மட்டங்களில் நம்பகத் தன்மையை இழந்து விட்டிருக்கும் ஒரு நிலை காணப்படுகின்றது.

இன்னும் சில வாரங்களில் நாடு வழமைக்கு திரும்பிவிடும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் கூறி இருக்கின்றார். முன்பு அரசுதான் விலைகளைத் தீர்மானித்தது. இப் போது பொருட்களின் விலையை வியாபாரிகள் தீர்மானிக்கும் நிலை. இதனால் நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா என்று மக்கள் பரவலாக கேள்வி எழுப்பி வருகின்றார்கள். அரசாங்கம் பொருட்களுக்கான விலையை வர்த்தமானியில் அறிவிப்புச் செய்தாலும் அது கேலிக் கூத்தாகி விடுகின்றது.

இந்த அரசு பதவிக்கு வந்த நாள் முதல் இதுவரை ஆறு தடவைசுளுக்கு மேல் அரிசிக்கு கட்டுப்பாடு விலை போட்டிருக்கின்றது. எதுவுமே வெற்றி பெறவில்லை. மக்களின் பிரதான உணவுப் பொருளின் நிலை இது.ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கேட்கவும் வேண்டுமா? அன்றாடம் தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களைத் தேடி மக்கள் நாயாக அலைகின்ற ஒரு அவல நிலை நாட்டில் காணப்படுகின்றது. இது கொரோனாவுடன் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயமும் கூட,

அன்னியச் செலாவணி பற்றாக்குறை, டொலர் தட்டுப்பாடு, பட்டினிச் சாவு ஆபத்து. நாட்டில் உச்சகட்ட ஊழல், நம்பகத் தன்மையற்ற நீதித்துறை, ஊழல் மலிந்த அரசியல் வாதிகளும் அதிகாரிகளின் அட்டகாசங்கள், பதவிகளை விட்டு ஓடுகின்ற நேர்மையான அதிகாரிகள், நம்பகத்தன்மையற்ற எதிரணி, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் காவிகள் கூட்டம், ஆளும் தரப்புக்குள் வெட்டுக் கொத்து. விதி பிதுங்கி நிற்கின்ற குடிமக்கள் என்று இந்த அவலங்களை நாம் பட்டியலிட முடியும். மிகப் பெரிய நெருக்கடிகளுக்கு நாடு இலக்காகி இருக்கின்றது. அரசு மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் நம்பிக்கையான எதிர்காலம் நாட்டுக்கு கிடையாது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அரசின் உரக் கொள்கை உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆபத்து, சீனாவில் இருந்து இறக்குமதியான சேதனப் பசளையில் கலப்படம். அதளை உபயோகிக்க முடியாத நிலை.

இதற்கிடையில் எதிரணித் தலைவர் சஜித் தரப்புக்குள்ளும் மோதல்கள் துவங்கி இருக்கின்றது. தலைவருக்கு எதிரான சமிந்த விஜேசிறி கருத்துக்கள் கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
(நஜீப் பின் கபூர் – தினக்குரல் யாழ் 3-10-21)