“ஒரு நாடு ஒரு சட்டம்” உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அரசாங்கத்தின் கொள்கையின்  உள்ளர்த்தத்தை அரசாங்கம் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி பல்வேறு நிலைப்பாடுகளைக்கொண்ட குழுக்களை இணைத்துக்கொண்டு 2019ஆம் 2020ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டு தேர்தலிகளில் இன, மத அடிப்படையில் பிரசாரங்கள் மேற்கொண்டு பாரிய வாக்குகளை பெற்றுக்கொண்டார். இவர்களுடன் ஜனாதிபதியின் திட்டங்களை நிறைவேற்றுவது பாரிய சவாலாகும். 

1956இல் இனவாதிகளுடன் சேர்ந்து ஆட்சியை முன்னெடுத்தமையால்தான் பண்டாரநாயக்க தமது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அரசாங்கத்தின் பின்னாலும் அவ்வாறானவர்கள் உள்ளனர். பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்ட நிலைமையை ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும்.  நாம் உலகத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். மதில்களை அமைத்துக்கொண்டு பயணிக்க முடியாது. உலகத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்களுடன் இணைந்து பயணிப்பது  ஜனாதிபதிக்கு  பாரிய சவாலாகும்.

மேலும் ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி கூறியுள்ளார். அது தொடர்பில் எமக்கு தெளிவில்லை. நாட்டில் பல இனக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு இனக் குழுக்களுக்கும் சம்பிரதாயபூர்வமான சில சட்டங்கள் உள்ளன. அவை தொடர்பில் எவ்வித கருத்துகளும் முன்வைக்கப்படவில்லை. நாம் இப்போது ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில்தான் வாழ்கின்றோம். ஆனால் அரசாங்கம் இதனை அடிக்கடி தெரிவித்து வருவது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகின்றது. அதனால் அரசாங்கத்தின் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையின் உண்மையான உள்ளடக்கத்தை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

மேலும் அமைச்சரவையில் உள்ள 14 பேருக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அவ்வாறானவர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என கேட்கின்றோம். அதேபோன்று புத்திஜீவிகள் கொண்ட குழுவொன்றினாலே வெளிநாட்டு தூதுவர்களை நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் மாலை தீவுக்கான தூதுவர் 85 வயதுடையவர் இவருக்கு எந்த புத்திஜீவிகள் அமைப்பு அனுமதி வழங்கி இருந்தது என கேட்கின்றேன்.

எனவே அரசாங்கம் கொண்டுவரும் நல்லவிடயங்களை நாம் ஆதரிப்போம். ஆனால், மக்கள் பக்கம் நின்று மக்களின் ஜனநாயகத்திற்காகவே எப்போதும் செயற்படுவோம் என்றார்.